ஆன்டி கொல்ட்ஸ்வொர்த்தி- சூழலியல் கலைஞன்


goldsworthy-210x105
ஆன்டி கொல்ட்ஸ்வொர்த்தி- சூழலியல் கலைஞன்

Andy Goldsworthy என்னும் பிரிட்டிஷ் கலைஞன் இயற்கையை ஒட்டிய வடிவங்களைக் கலைப்படைப்பாக்குபவர். இலைகள், குச்சிகள், உறைபனி, மண், சிறு கற்கள் என ஒரு இயற்கைச் சூழலில் கிடைக்கும் பொருட்களை வைத்து பல கலைப் படைப்புகளை உருவாக்கி அவற்றை ஒரு புகைப் படம் எடுத்து நம்மோடு பகிர்ந்து கொள்வார். ‘எதிர் திசை’ என்னும் பத்தியில் எஸ்.ராமகிருஷ்ணன் தீராந்தி ஜூலை 2014 இதழில் அவரை நமக்கு அறிமுகம் செய்கிறார். அந்தக் கலைஞனின் பல படைப்புகளை நாம் morningearth.org என்னும் இணைய தளத்தில் காண்கிறோம். மிகவும் கற்பனையும் அழகும் மிகுந்த படைப்புகள் அவருடையவை. குழந்தைகள் மணல் வீடு கட்டுவது போல அவர் தாம் உருவாக்கிய இடத்தில் அவற்றை விட்டுவிடுகிறார். அவர் கலைக்கூடங்களுக்காகவும் சிலவற்றை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார்.

ராமகிருஷ்ணனின் கட்டுரை ஒரு தொடர் சிந்தனையை என்னுள் ஏற்படுத்தியது. பல காலமாகவே நான் ஓவியக் கலைஞர்களையும் சிற்பிகளையும் பற்றி வியப்புடன் யோசித்து வருகிறேன். தஞ்சை பெரிய கோயிலோ இல்லை வேறு எந்த இடமோ அந்தக் காலத்து சிற்பக் கலையை நாம் ஒரு அரசுடன் சேர்த்தே பார்க்கிறோம். அதாவது புகழை அந்த மன்னனுக்கே கொடுக்கிறோம் இல்லையா? எந்த சிற்பத்திலாவது அல்லது அரிதான ஓவியங்களிலாவது அந்தக் கலைஞனின் பெயர்/ ஊர் உண்டா?

தமிழ்ச் சூழலில் ஒரு எழுத்தாளனின் நிலை என்ன என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றே அல்ல. அதை விட மோசமானது இந்திய அளவில் ஒரு ஓவியன் அல்லது சிற்பியின் நிலை. நான் டெல்லியில் இருந்த போது சாகித்ய அகாதமியை ஒட்டிய லலித் கலா அகாதமியில் உள்ள காட்சியங்களைக் கட்டாயம் பார்வையிடுவேன். அவற்றில் ஒரு கலைஞன் தன் பல ஆண்டு உழைப்பைக் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைத்திருப்பான். அத்தனை ஓவியங்களும் ஒன்றாக விற்றாலும் அவனுக்கு பொருளாதார ரீதியாகப் பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை. ஏனெனில் அவன் முழு நேரமாக இதைச் செய்யும் பட்சத்தில் ஆண்டுக்கு ஒன்று இரண்டு காட்சிப் படுத்தும் வாய்ப்புகளே கிடைக்கும்.

பொருளாதாரத்தைத் தவிர அடுத்த மிகப் பெரிய சவால் ரசனை பற்றியது. புதுக்கவிதையை விட மிகுந்த நுட்பமும் பன்முகமும் கொண்ட கலைப் படைப்புகள் நவீன ஓவியங்கள். அவற்றை வெகு நேரம் அவதானித்து ரசித்தால் மட்டுமே அதன் உள்ளடங்கிய கலையின் வெளிப்பாடு வசப்படும். அதை வியந்து ஒரு கட்டுரை வர வேண்டுமென்றால் அதற்காக மிகவும் மெனக்கெட வேண்டியிருக்கும். ஓவியக் கலையை ரசிக்கும் பாங்கு உள்ள எழுத்தாளர்களே மிகக் குறைவு. பொது மக்களிடையே ரசிகர்களை ஒரு ஓவியர் சம்பாதிப்பது கடினமே.

புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே தப்பிக்கிறார்கள். அவர்களும் கூட முழுநேரக் கலைஞராக இருக்க முடியாது. வருமானத்துக்கு வாய்ப்பில்லை. பணக்காரர்கள் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடத்தக்க வருமானமுள்ளவர்கள் மற்றும் அவர்கள் தங்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளில் மட்டுமே விலை கொடுத்து நல்ல கலைப் படைப்புகளை வைக்க இடமும் பணமும் உண்டு.

கலையை ரசிக்க, தனியாக எந்த ஞான திருஷ்டியும் தேவையில்லை. ஆனால் கலையின் மீது ஒரு தீவிரமான ஈடுபாடு வேண்டும். நீண்ட நேரம் ஒரு ஓவியத்தை ரசித்து என்னுடைய புரிதலை அந்த ஓவியருடன் பகிர்ந்து கொண்டேன். அவர் ” உங்கள் பார்வையில் இதன் ஒரு வெளிப்பாடு இது. ரசனையையும் அவதானிப்பையும் ஒத்து இன்னும் பல இதில் இருந்து வெளிப்படும் ” என்றார். தூரிகையை அவர்கள் தாறுமாறாக வீசியிருப்பதாக முதல் பார்வையில் படும். ரசித்துப் பார்க்கும் போது அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட காட்சியை வடிவத்தை ஒரே ஓவியத்தில் பிணைத்து எழுதி இருப்பது பிடி படும்.

நவீன ஓவியர்களைவிட மிகவும் பாதிக்கப் பட்டவர்கள் சுவரில் மற்றும் சினிமா ‘பேனர்’களில் வரைந்து கொண்டிருந்த எளிய ஓவியர்கள். அவர்கள் தொழில் நுட்பத்தில் டிஜிடல் என்னும் வடிவம் வந்து ‘பிளெக்ஸ் போர்டு’ என்னும் மலிவான வடிவம் வந்ததால் காணாமற் போனவர்கள். இவர்கள் நிலையை மையப்படுத்தி ‘தோல்பை” என்னும் சிறுகதையை எழுதினேன்.

சிருஷ்டிக்கும் கற்பனை ஊற்றெடுக்கும் மனம் அதில் மட்டுமே நிம்மதி கொள்ளும். அப்படி ஒரு வளத்தின் மறுபக்கம் சாபமென்றே சொல்லலாம். உண்பது உடுப்பது அதிகாரமும் பண பலமும் தேடுவது மட்டுமே வாழ்க்கை என்றிருக்கும் மிகப் பெரிய கும்பலில் நசுங்கி முச்சு முட்டி வாழ்வதே இறுதி வரை கொடுப்பினை.

(image courtesy: http://www.for-site.org/project/goldsworthy-in-the-presidio/)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s