சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 1
முன் குறிப்பு: எனக்கு இருவர் மீதும் எந்த விதமான வன்மமோ காழ்ப்புணர்ச்சியோ இல்லை. யார் மீதும் இல்லை. இடதுசாரி சிந்தனைகளில் வர்க்கம் என்னும் அடையாளமும் மனோபாவமும் அடிப்படையானவை. இந்த மனப்பாங்கு எங்கும் எப்போதும் காணக் கிடைக்கிறது. இடதுசாரிகள் தவிர மற்ற எல்லோரும் கருணையின் அடிப்படையில் மட்டுமே நலிந்தோர், கூலிகள் இவர்களுக்கு விடிவு உண்டு என்பதை முன்வைக்கிறார்கள். இது என்றைக்குமே நடக்காத காரியம். மறு பக்கம் தொழிற்சங்க அமைப்புகளில் உள்ள ஊழல், ஜாதி வெறி இவற்றை நான் அறிவேன். அது தீரா நோயோ என்னும் அச்சமே எனக்கு உண்டு. அதைக் கண்டிப்பவன். கம்யூனிச அரசுகளில் உள்ள ஓரு கட்சி ஆட்சி முறை மற்றும் அடக்குமுறை இவற்றை நான் வன்மையாகக் கண்டிப்பவன். கருத்துச் சுதந்திரமே மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் எனக்குத் தெளிவு உண்டு. இடதுசாரி என்றாலே 100% ஆதரவு அல்லது 100% வெறுப்பு என்றிருக்கும் இரு நிலைகளுக்கு இடைப்பட்டு தொழிலாளி என்னும் அடையாளம் ஜாதி மதம் இவற்றைக் கடக்க உதவும் என்று நம்புபவன். கருணையெல்லாம் தேவையில்லை– எல்லாத் தொழிலாளிக்கும் குறைந்தபட்ச நல்ல ஊதியமும் நல வாழ்வும் அவர்களை ஒரே வர்க்கமாகக் காணும் அணுகுமுறையில் மட்டுமே உறுதியாகும்– என்பது எனது தெளிவான நம்பிக்கை. உலகமயமாக்கம் 30 ஆண்டுகளாக உருவாகிக் கோலோச்சுவது. அதற்கு நெடுங்காலம் முன்பே பொது உடமை என்பது மனித இயல்புக்கு முரணானது என்பது நிரூபிக்கப் பட்டது. பொது உடமை என்பது ஒரு மிகப் பெரிய அதீதக் கனவு தான். அது தோற்றது சரியே. மறு பக்கம் ஏழ்மையும் அறியாமையுமாக சமூகத்தில் ஒரு பெரும்பகுதியும் ஆளுமையும் அதிகாரமும் வளமையுமாக இன்னொரு பகுதியும் பெரிய இடைவெளியுடன் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்னும் கட்டாயமில்லை. இடதுசாரி அணுகுமுறையில் மட்டுமே இதற்கான மாற்று வேண்டும் என்னும் பிடிவாதம் இருக்கிறது.
சமுதாயம் மாற வேண்டும் என்று தீவிரமாக விரும்புபவர்கள் வெகு சிலரே. கீழை நாட்டில் உள்ள குடும்பம் என்னும் அமைப்பின் முக்கியத்துவம் எல்லா மதங்களின் வாழ்க்கை முறையிலும் காணப்படும். இது மிகவும் பெரிய சொத்து. போற்றுதற்குரியது. அதே சமயம் மதமே சமுதாய மாற்றத்தின் தடைக்கல்லாகவும் இருக்கும். மதத்தில் உள்ள நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்பினால் அதுவே சரியான அணுகுமுறை. நல்லது தவிர ஏனயவை அல்லவை என்பதைக் கடுமையாகச் சுட்டிக் காட்டாமல் மேலே செல்ல முடியாது.
இவ்வளவு நீண்ட முன் குறிப்பு ஏன் என்பதை கட்டுரை விளக்கும்.
சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்”- இரு “தனி மனித நிறுவனங்கள்” என்று குறிப்பிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். சோவுடன் ஜெயமோகனை நான் இணைத்துப் பார்த்தற்கு தமிழ் எழுத்துரு பற்றி ஜெயமோகன் பரிந்துரைத்த “ஆங்கில எழுத்துகளை வைத்துத் தமிழை எழுதலாம்” என்னும் தடாலடித் திட்டமே காரணம். சுமார் 30 ஆண்டுகள் முன் தமிழ் எழுத்துகளையும் ஆங்கில எழுத்துகளையும் கலந்து எழுதி இரண்டு மூன்று துக்ளக் இதழ்களில் அவற்றைப் பயன்படுத்தினார் சோ. எழுத்துரு விஷயத்தை இருவருமே ஏன் கையில் எடுத்தார்கள்? ஏன் அதைத் தொடர்ந்து வலியுறுத்தவில்லை? இந்த ஒரு புள்ளியில் இவர்கள் இருவரையும் இயக்கும் மைய மனோபாவம் ஒன்று தென்படும்.
“முன் பெஞ்சு மாணவ” மனோபாவமே அது. பள்ளி கல்லூரி எதிலும் பின் பெஞ்சில் உள்ள (என்னைப் போன்றோர்) மாணவர் ஒன்றை நன்றாக அறிவார்கள். கடினமான பாடத்தை ஆசிரியர் ஆரம்பிக்கும் போதே இவர்கள் “எல்லாம் எனக்குத் தெரியும் சார்’ என்பது போல அவர் கேட்கும் சிறு கேள்விகளுக்கு பதில் கொடுத்து விடுவார்கள். பின் பெஞ்சில் நம் டிபன் பாக்ஸைப் பாதுகாப்பது மிகப் பெரிய போராட்டம். இதில் முன் பெஞ்சு மாணவன் புகுந்து “எல்லாம் எமக்குத் தெரியும்” என்ற உடன் வாத்தியார் ஐயாவுக்கு வேறு சாக்கு வேண்டுமா? வேகமாக அந்தப் பாடத்தைத் தள்ளிக் கொண்டு போய் விடுவார்.
“எல்லாம் எனக்குத் தெரியும்” என்று விட்டுவிட இருவரும் மாணவர்கள் அல்லரே. அதனால் ஒரு படி மேலே போய் “நான் நடு நிலையானவன். அதே சமயம் கோபுரத்தில் ஏறி நின்று சமுதாயத்து இது தான் நல்லது என்று அறிவிப்பேன். அவ்வளவு தைரியசாலி” என்னும் நிலைப்பாடு உள்ளவர்கள். நேர்மையின் அடிப்படையில், சொந்த வாழ்வில் உள்ள ஒழுக்கத்தின் அடிப்படையில் அவர்கள் நிமிர்ந்து நிற்பது வணக்கத்து உரியது. மறுபக்கம் ” நான் நல்ல நீதிபதி. இதோ தீர்ப்பு” என்று எல்லா பிரச்சனைகளுக்கும் இந்தியப் பாரம்பரியம் + மதம் + வலதுசாரி என்று ஒரு தீர்ப்பு எழுதும் போது ரசிக்க முடியாத நகைச்சுவையாகி விடுகிறது. இடதுசாரிகள் தோற்று எத்தனையோ காலமாகி விட்டது. ஆனாலும் வலதுசாரிகள் மதம் மற்றும் முதலாளித்துவம் தன்னை எப்போதுமே திருத்தித் கொள்ளப் போவதில்லை என்பதை ஒப்புக் கொள்வதே இல்லை. இது மிகப் பெரிய பாசாங்கு. இந்தப் பாசாங்கை அழகாகச் செய்வதால் அது வெளிப்படாமல் போய் விடாது.
கோபுரத்தின் மீது ஏறி ஏறி அறிவித்தால் கால் வலிக்காதா என்ன? நானே கோபுரமானால் எளிதில்லையா? இருவருமே மிகப் பெரிய நிறுவனங்களாக பிரம்மாண்ட உருவெடுத்தவர்கள். அதற்கான தகுதியும் உழைப்பும் தளராத மன உறுதியும் உள்ளவர்கள். சோ திராவிட கட்சிகள் அரசியலை மலினப் படுத்தி ஊழல் படுத்தியதை முன்னெடுத்தார். ஜெயமோகன் அறிவுஜூவியாக இடதுசாரிகள் எந்த அளவு தொன்மையை, பாரம்பரியத்தைக் கொச்சைப் படுத்தித் தன்னை வளர்த்துக் கொண்டார்கள் என்பதையே மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டினார். முன் பெஞ்சில் இருவரும். திராவிட கட்சிகளும் இடதுசாரிகளும் பின் பெஞ்சில்.
சரி அப்படி அவர்கள் முன் பெஞ்சில் இருப்பதால் உனக்குப் பொறாமையும் ஆற்றாமையுமா என்று கேட்டால் பொறாமைப் படும் இடத்தில் அவர்கள் இல்லை. பரிதாபப் படுமளவு அப்பாவித்தனமாகவும் தம் பிரம்மாண்ட ரூபத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதே பதில். பின் பெஞ்சு முன் பெஞ்சு விவகாரத்தை வெளியே இருந்து பார்க்கும் போது மொத்த தமிழ்/ இந்திய சமூகச் சூழல் விவாதங்களுக்கு இடம் கொடுக்காத மூடப்பட்ட ஒன்றாக இருப்பதே உண்மை. இந்த தேக்க நிலைக்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணமல்லர். மதம் எல்லா நோய்க்கும் மருந்து வைத்திருக்கிறது என்னும் அபத்தமான நிலைப்பாடே காரணம். ஜெயமோகன் தரப்பில் அவர் இந்து மதத்தில் உள்ள பல குறைகளை எடுத்துக் காட்டியிருக்கிறார் என்னும் வாதம் முன் வைக்கப்படலாம். ஆனால் பல பதிவுகளில் கிறித்துவ இஸ்லாமியப் புனித நூல்களை அவர் பொக்கிஷமாகக் கொண்டாடுவதைக் காணலாம். இந்த இருமை அவர் விமர்சிக்கும் ஒன்று என்பது கவனிக்கப் பட வேண்டியது. இருவரும் இந்திய தத்துவ சிந்தனை மரபை மையப் படுத்தி நிறைய உரை நூல்கள் போல எழுதியிருக்கிறார்கள். ஆன்மீகம் பற்றியும் மதம் பற்றியும் ஒரே அணுகுமுறையைக் கொள்ள முடியாது. ஆன்மீகம் பற்றிப் பேசினால் மதங்களை நிராகரிக்க வேண்டும். மதங்கள் குறுகியவை. ஆன்மீகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. மதங்கள் சமூக ஒழுங்கை அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. ஆன்மீகம் பிரபஞ்சத்தின் ஒழுங்கும் ஒழுங்கின்மையுமான நீள்தொடராய் அனைத்து உயிரினங்கள் இயங்கும் புள்ளியைப் புரிந்து கொள்வது. ஆன்மீகம் மனிதனின் இயல்பு சமநிலை என்பது. மதம் சமூக ஒழுங்கை, அற உணர்வை மட்டுமே பேசுவது. மதத்தின் வீச்சு இதனால் ஒரு புள்ளியில் நின்று விடுவது. ஆனால் ஆன்மீகம் தேடலின் முடிவற்ற நிலையில் ஒருவனை நிறுத்துவது. மதம் நடைமுறை வாழ்க்கையை நாகரீகமாகக் கொண்டு செல்ல முயல்வது. ஆன்மீகம் வாழ்வின் அடிப்படைக் கேள்விகளை அவற்றின் தன்மையை உணர்ந்து அணுகுவது.
இஸ்லாமில் சூபிக்கள், இந்துத்துவ வழிமுறைகளில் பௌத்தம், ஜென் இவர்கள் ஆன்மீகத்துக்கு மிக அருகாமையைத் தொட்டவர்கள். மதம் ஒரு இடைத்தரகரை எப்போதும் வலியுறுத்தும். குரு சிஷ்ய பாரம்பரியம் நல்ல உதாரணம். ஆன்மீகம் குருவைத் தாண்டும் போதே சாத்தியமாகும். புத்தர் அருமையான உதாரணம்.
மத பீடங்களை நிராகரிக்காமல், மதநூல்களை விமர்சனத்தோடு அணுகாமல் அவற்றைத் தாண்டிச் செல்லுதல் இயலாத காரியம். சமூக ஒழுங்குக்கு மதம் என்றும் பயன்படும். ஆன்மீகம் தேடுவோருக்கு எந்த மதமும் தடைக் கல்லே. இதை இந்த முன்பெஞ்சு மாணவர்கள் இருவருமே ஏற்கவில்லை. அந்த ஒரே காரணத்தால் தான் மதப்பற்று உடையவர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருவரும் ஒளிர்கிறார்கள். (தொடரும்)
(image 1 courtesy: wiki, image 2 courtesy: face book)