சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 2
மார்க்ஸீய சிந்தனையால் பலரும் மேற்கத்திய வாழ்க்கைமுறையால் சிலரும் இந்தியாவின் தொன்மையான பண்பாட்டை, வரலாறை, தத்துவ சிந்தனை மரபை முழுமையாக நிராகரிக்கிறார்கள் என்னும் கருத்தை தமக்கே உரிய தடத்தில் இருவருமே பதிவு செய்து வருகிறார்கள். முதலில் அவர்கள் தரப்பில் உள்ள வாதத்தில் அடிப்படை உண்டு என்பதை ஏற்க வேண்டும். முழுமையாகவே அப்படித்தான் அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் என்று வைத்தாலும் ஒரு பெரிய ஓட்டை ஒன்றைக் கண்டு கொள்ளாமல் போக வேண்டி வரும். இந்திய தத்துவ நூல்கள், ஆன்மீக சிந்தனையாளர்கள், உபநிடதங்கள் என்னும் ஒப்பற்ற வளமையின் மறுபக்கம் என்ன? விழுமியங்கள் நீர்த்து அழிந்து போய் நம்பத்தகுந்த, மரியாதைக்குரிய நபர்களின் எண்ணிக்கை மிகவும் ஏன் குறைந்தது? பாலியல் வன்முறை புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. மதம், தத்துவம், பாரம்பரியம் இவை காப்பாற்ற முடியாமற் போன பண்பாட்டுத் தராதரம் இனி எப்படி எட்டப் பட வேண்டும்? சமூக நீதி என்பது அரசியல் செய்ய இன்னுமொரு கோஷமாக நின்று போனது ஏன்? வருணாசிரம தர்மம் தவறு தான் என்று ஏன் நாம் ஏற்க மறுக்கிறோம்?
தொன்மையிலும் வரலாற்றிலும் (வரலாற்றில் ஜெயமோகனுக்கு சோவை விட அதிக ஈடுபாடு) தத்துவத்திலும் தனது ஆழ்ந்த ஞானம் மற்றும் புலமையை வெளிப்படுத்துவதில் அதாவது தன் தனிப்பட்ட ஆளுமையின் ஆகச்சிறந்த ஈடுபாடுகளைப் பதிவு செய்வதில் இருவருக்கும் உள்ள பிடிமானம் ஒன்று தான் இவர்களின் முன்னுரிமையாகி விட்டது. உண்மையைத் தேடும் யாரும் நடுநிலையாக நிற்கும் பட்சத்தில் ஒரே இடத்துக்கு வந்து சேர்ந்தே தீர வேண்டும் இல்லையா?
எல்லா அறிவுஜீவுகளும் இந்தியப் பாரம்பரியத்தைத் தூற்றும் அற்பர்கள் என்றே வைத்துக் கொள்வோம். இன்று உள்ள பாதாளத்திலிருந்து இந்தத் தலைமுறை வெளியே வர வேண்டும் என்ற கனவு இருவரிடமுமே இல்லை. அப்படி வெளி வர வேண்டுமென்றால் அணிகள் கண்ணுக்குத் தென்படாது. ஆளுமைகள் தென்பட மாட்டார்கள். இஸங்கள் தென்படாது. சமூக மாற்றம் வேண்டும் என்னும் தீவிரம் செல்ல வேண்டிய திசை மட்டுமே தென்படும். எல்லாப் பெரிய மதங்களும் நம்மைக் கைவிட்டு விட்டது தெளிவான உண்மை.
குழந்தையாயிருக்கும் போது ஒரு தகப்பனை மகன் ஒரு பெரிய நாயகனாகக் காண்பான். வளர வளர அப்பன் குழப்பவாதியாகத் தென்படுவான். தன் காலில் நிற்கும் போது தான் தகப்பன் தன்னைப் போலவே சுமாரான ஆள் என்று தெளிவான். மனித சமூகத்தின் முன் மதங்கள் கையாலாகாத அப்பன்களாகத்தான் இன்று நிற்கின்றன.
இன்று உலகம் அல்லற்படும் துய்ப்பு வேட்கை, போர், அதிகார வெகுதன வர்க்கம் எளிய உழைக்கும் வர்க்கத்தை வேட்டையாடுவது, பெண்களுக்கு எதிரான வன்முறாய் இவை எதற்குமே மத நூல்களில் தீர்வுகள் இல்லை. இந்த உண்மை எளிதானது. தெளிவானது. மிகவும் வேதனை தருவது.
மதங்களைத் தாண்டி மனித நேயம் பேசும் ஆளுமைகள் இலக்கிய மற்றும் அறிவுத்தளத்தில் ஒன்று பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அறிவு ஜீவிகள் அத்தனை பேரும் நாசகாரர்கள் என்று நிறுவது எளிது. ஆனால் அது தற்காலிகமானது. நிரந்தரமான சமூக மாற்றத்தைச் சென்று அடைய எல்லோரும் ஒருமிக்கும் ஒரு புள்ளியைத் தேடுவதே பொறுப்பான செயல்.
சமூகப் பொறுப்புணர்வு என்பது தனது ஆளுமை சார்ந்தவற்றைத் தாண்டி சமூகம் முழுவதும் உய்யும் வழி தேடும் ஒருமிப்புக்கு நகரும் பரிமாணம். இதில் இருவருமே தமது பிரம்மாண்டம் அதற்கு இடங்கொடுக்காது என்று ஒதுங்கி விட்டார்கள். ( ஒரு தலைமுறை இளையவர் என்பதால் ஜெயமோகனுக்கு சமூக நீதி பற்றிய சரியான புரிதல் இருக்கிறது. அணிகளைத் தாண்டி அனைவரும் ஒன்று பட்டுப் பணிபுரிய வாய்ப்பு இல்லை என்னும் அவநம்பிக்கை அவரிடம் நிறையவே இருக்கிறது.)
(தொடரும்)