சோ – ஜெயமோகன் இரு “தனிமரத் தோப்புகள்” – 3
ஜெயமோகன் என்னும் படைப்பாளி குறித்த விமர்சனங்கள் அவரது பிரதிகளைப் பற்றியதாகவே அமைய வேண்டும். ஆளுமைகளை மையப் படுத்தி வாசிப்பும் விமர்சனமும் செய்யும் போக்கு குறுகியது. அவரது நாவல்களுக்காகவும் அவரது சிறுகதைகளில் ‘அறம்’ என்னும் தொடரில் வந்தவற்றுக்காகவும் அவர் தனி இடம் பெறுபவர். இந்தக் கட்டுரை இலக்கியவாதி ஜெயமோகன் பற்றியது அல்ல. சோவோடு ஒப்பிடக் கூடிய அவரது ஆளுமையின் பகுதி மட்டுமே இந்தக் கட்டுரையின் மையம்.
“என் திறமையை நான் முன்னிறுத்துகிறேன். என் பார்வையில் இவற்றை இப்படி நிறுவுகிறேன்” என்பது கலைத் தன்மையுடன் செய்யப்படும் எதுவும் சரியே. சிந்தனைத்தளத்தில் சமூக நோக்கில் இதே போல் மையப்படுத்தும் ‘நான்’ வெகு தூரம் செல்ல உதவுவதில்லை.
மறுபக்கம் இரண்டு பேருக்கும் ஆளுமை சார்ந்த கருத்துகள் அதிகம். ஆளுமைகளை மையப் படுத்தி சிந்திக்கும் போக்கு அதிகம். இது தன்னை முன்னிறுத்தும் உந்துதலில் மற்றொரு நிலையே. அரசியல்வாதிகளை விமர்சிக்கும் போது ஒவ்வொரு ஆளுமையாக நிதானமாக அலசி விமர்சிப்பதில் சோவுக்கு ஆர்வம் அதிகம். இலக்கிய ஆளுமைகளைப் பொருத்தே பிரதிகள் வாசிக்கப் பட வேண்டும் என்னுமளவு விமர்சகர்கள் போகிற போக்கு ஒன்று உண்டு. அதில் ஜெயமோகனும் அடக்கமே. இதனால் சமகாலத்தில் எழுதும் எல்லாப் பிரதிகளையும் வாசிக்க முடியாது. ஏனென்றால் அதற்கு முன்னால் அந்தப் படைப்பாளியின் ஆளுமையை அலசி ஆக வேண்டும்.
சோ அரசியலில் நல்ல ஞானம் உள்ளவர். அதே போல் ஜெயமோகன் இலக்கியத்தில். தன்னை முன்னிறுத்தும் போது கண்டிப்பாக ஒரு வாசகர் வட்டம் தேவை தானே. சோ அதை வருடாந்திர விழாவாகக் கொண்டாடுவார். ஜெயமோகனுக்கு வாசகர் வட்டம் ஏற்கனவே இருக்கிறது.
இதெல்லாம் அவர்கள் உரிமைதான். ஆனால் இந்தக் கட்டுரை தமிழ் நாட்டின் ஆகச் சிறந்த அறிவுஜீவிகளாகக் கொண்டாடப்படும் இரு அறிவுஜீவுகளை ஒப்பிடும் முயற்சி.
ஒருவர் தன்னையே ஒரு நிறுவனமாக உயர்த்திக் கொள்ள முயல, கண்டிப்பாக ஒரு அஸ்திவாரம் வேண்டும் இல்லையா? ஏற்கனவே நிறுவப் பட்டு கேள்விக்கு அப்பாற்பட்டதான ஒன்றே அந்த அஸ்திவாரமாக முடியும். என்வே பண்பாடு மதம் இரண்டும் தூண்களாக அவர்களது பிரம்மாண்ட நிறுவன பிம்பம் எழுந்துள்ளது.
இந்த இடத்திலும் இது வரையிலும் ஒரு கேள்வி எழுந்திருக்கும். அவர்கள் மோசடி எதாவது செய்தா புகழையும் பிரம்மாண்டமான ஒரு பிம்பத்தையும் பெற்றார்கள்? உனக்கென்ன போகிறது?
கண்டிப்பாக எனக்கு இதில் மாற்றுக் கருத்து உண்டு. புதிய சிந்தனை, சமுதாயத்தின் மேம்பட்ட மாற்றம் இவற்றை விரும்புபவர் என்ன செய்வார்? தேக்க நிலையில் நின்று அழுகும் மத அடிப்படையிலான குறுகிய நோக்குகளை உடைக்க விரும்புபவர் என்ன செய்வார்? தனக்கென ஒரு பீடத்தைத் தேட மாட்டார். கொடுக்கப் பட்டாலும் அதை நிராகரிப்பார்.
தன்னையும் வாசகனையும் சமமாக பாவித்து, சிந்தனைகளைப் பகிரும் போக்குக்கு ஆகச் சிறந்த உதாரணம் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. அவர் முன் வைக்கும் கருத்துகள் பகிர்பவை. உரத்து பிரகடனம் செய்யப் படுபவை அல்ல.
சோ ஜெயமோகன் இருவருமே தம் கருத்துகளை நிறுவ நிலை நாட்ட எடுத்துக் கொள்ளும் முயற்சி “உன் மூளைக்கும் சேர்த்து நானே சிந்தித்து இருபக்கமும் பார்த்து அதே சமயம் நடு நிலையாகவும் நின்று எல்லாமே செய்தாகி விட்டது. பேசாமல் கேள்” என்னும் தொனி உடையது.
நல்ல முதிர்ச்சியும் கூர்மையான சிந்தனையும் உடைய ஒரு ஆளுமை தனக்குத் தரப் படும் எல்லா அடையாளங்களையும் பீடங்களையும் நிராகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இருவரும் வசதியாக அந்தப் பீடங்களில் மீது ஏறித் தானும் ஒரு கோபுர உயரமாகி நிறைவு பெற்று ஒளி வீசுகிறார்கள்.
அதற்கு ஒரு படி மேலே போய் தான் கொண்டாடும் எந்த ஒரு நம்பிக்கையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தான் எந்த பீடத்தையோ, மடத்தையோ, மத அடிப்படையிலான நிறுவனத்தையோ தூக்கிப் பிடிக்க கூடவே கூடாது. முடிந்தால் தாக்கி அது பொல பொலவென்று உதிர்வதை எடுத்துக் காட்ட வேண்டும். தாக்காமல் விட்டுவிட்டால் கூட புரிந்து கொள்ள முடியும். தூக்கிப் பிடிப்பது அறிவுரீதியான சறுக்கலே.
ஆரோக்கியமான ஒரு சமூகத்தில் மதம் வழிபாடு இவைகள் ஒரு தனிமனிதன் அல்லது அவன் குடும்பத்தின் அந்தரங்க நடவடிக்கையாக இருக்க வேண்டும். அதை அனைவருக்கும் உகந்தது என்று கூறுவது மருந்தின் உள்ளே என்ன இருக்கிறது என்றே தெரியாமல் பரிந்துரைப்பது போன்றதே.
இறை நம்பிக்கை மிகவும் ஆரோக்கியமான நேர்மறையான பண்பே. ஆனால் அதை நிறுவனப் படுத்தும் போது அது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது.
உண்மையான துறவி மதத்தையும் சேர்த்தே துறந்தவனே. பல சித்தர்கள் அப்படிப்பட்டவர்களே.
பீடங்களை முன்னிறுத்தாத அவற்றை நிராகரிக்கிறவர்களாக உருவாகி இருக்க வேண்டியவர்களே இருவரும் .ஆனால் தன் அறிவின் மீதும் தன் புரிதல் மீதும் உள்ள அளவு கடந்த மயக்கம் அவர்களை சரியான பாதையில் செல்ல விடாமல் தடுத்து விட்டது. (தொடரும்)
(image courtesy:http://www.jkrishnamurti.org/about-krishnamurti/biography.php)
Reblogged this on கரியே வயிரம் and commented:
ஆரோக்கியமான ஒரு சமூகத்தில் மதம் வழிபாடு இவைகள் ஒரு தனிமனிதன் அல்லது அவன் குடும்பத்தின் அந்தரங்க நடவடிக்கையாக இருக்க வேண்டும். அதை அனைவருக்கும் உகந்தது என்று கூறுவது மருந்தின் உள்ளே என்ன இருக்கிறது என்றே தெரியாமல் பரிந்துரைப்பது போன்றதே.
இறை நம்பிக்கை மிகவும் ஆரோக்கியமான நேர்மறையான பண்பே. ஆனால் அதை நிறுவனப் படுத்தும் போது அது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது.
உண்மையான துறவி மதத்தையும் சேர்த்தே துறந்தவனே. பல சித்தர்கள் அப்படிப்பட்டவர்களே.