பாலியல் வன்முறையில் சிறுவர் – வயதுவந்தோர் பாகுபாடு தேவையா?
டெல்லியில் நிர்பயா என்னும் பெண் பாலியல் பலாத்காரத்தாலும் வன்முறையாலும் உயிரிழந்த போது குற்றவாளிகள் ஒருவர் சிறுவன் அதாவது 18 வயது நிரம்பாதவன் என்பது தெரிந்தது. அப்போதே பாலியல் வன்முறையில் சிறுவன் பெரிய ஆள் என்னும் பேதம் பார்க்க வேண்டாம் என்று ஒரு கருத்து எழுந்தது. இன்னும் அதற்கான சட்டத் திருத்தம் செய்யப் படவில்லை.
மேனகா காந்தி என்னும் மத்திய அமைச்சர் பாலியல் வன்முறையில் சிறுவன் என்று ஒருவன் தப்பிக்க இடம் தராமல் பெரியவருக்கு உண்டான தண்டனையே தர வழி செய்ய வேண்டும் என்னும் கருத்தை முன் வைத்துள்ளார்.
பாலியல் வன்முறையில் இரண்டு முக்கிய மனோபாவம் காணப் படுகிறது. ஒன்று பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாகப் பார்க்கும் போக்கு. இரண்டாவது பாலியல் வக்கிரமான மனக் கோளாறு. முதலாவது பல காலமாக சரிசெய்யப் படாத ஒரு மனப்பாங்கு. இரண்டாவது மருத்துவம் அதாவது மன நல மருத்துவம் மட்டுமே சரி செய்யக் கூடியது.
சிறுவன் என்று ஒருவனை விட்டு விட்டால் அவன் 18 வயது கடந்த பின் மேலும் பல பலாத்காரங்களைச் செய்யும் வாய்ப்பு கட்டாயம் இருக்கிறது. அவனுக்கு சிறை என்னும் தண்டனையும் மனநல மருத்துவமும் இரண்டுமே தேவை.
மன நல மருத்துவம் தரப் படுகிறதா இத்தகைய குற்றவாளிகளுக்கு என்னும் கேள்விக்கான விடையைத் தரவுகளின் அடிப்படையிலேயே உறுதி செய்ய இயலும். அப்படி ஒரு ஏற்பாடு இருப்பது போலத் தெரியவில்லை.
அனேகமாக குற்றவாளிகளின் மனப்பாங்கை இரண்டு அணுகுமுறையில் அரசும் சமூகமும் சரி செய்தாக வேண்டும். ஒன்று மன வக்கிரம் அல்லது வன்ம குணம் இவற்றை மன நல மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்துகளால் சரி செய்தல். இரண்டாவது அவர்களுக்கு அற உணர்வை மத அடிப்படையிலேனும் வழங்குதல். இங்கே மதபோதகர் அல்லது குருமார் எந்த அளவு தராதரமுள்ளவர்கள் என்னும் கேள்வி எழுகிறது. நல்ல ஆசியர்களை வெவ்வேறு மதத்தில் இருந்து பயன் படுத்தலாம்.
சிறுவர்கள் பற்றி மேனகா காந்தி குறிப்பிடும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நான் பள்ளியில் படித்த காலத்தில் Moral Instruction என்னும் வகுப்பு வாரம் ஓரிரு முறையாவது கல்லூரி வரை இருந்தது. இப்போது இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தாய் தந்தைக்கும் ஒரு பொறுப்பு உண்டு. ஒரு மாணவன் முதலில் பெண்களை மதிப்பாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறையில் என்றுமே மாணவன் ஈடுபட மாட்டான் என்று உறுதி செய்யவும் அவனுடன் நிறையவே உரையாடிப் பல விழுமியங்களை ஆழ்ந்து அவன் மனதில் பதிய வைக்கும் பொறுப்பும் கட்டாயம் இருக்கிறது.
தனது வாரிசுகளுடன் உரையாட ஒரு நேரம் ஒதுக்கப் படிப்பு என்னும் பின்னணி அல்லது வருமானம் என்னும் பின்னணி தேவையில்லை. இவன் நல்ல வழியில் போக வேண்டும் என்னும் கவலை போதும்.
அரசு பாலியலில் வயது குற்றத்தை நீர்த்துவிடச் செய்யாது என்னும் சட்டத்தைக் கட்டாயம் இயற்ற வேண்டும். பள்ளியில் மாணவர்களுக்கு அதாவது ஆண் மாணவர்களுக்குக் கட்டாயம் நன்னடத்தை போதனை உள்ள பாடத் திட்டமும் வகுப்புகளும் கட்டாயம் வேண்டும்.