கடத்தப் பட்ட மாணவிகளை மீட்க மலாலாவின் முயற்சி
தமது பிறந்த நாளன்று நைஜீரிய அரசின் அதிபரை சந்தித்து கடத்தப்பட்ட 219 நைஜீரிய சிறுமிகளை மீட்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளிக்குச் சென்றதற்காகத் தாலிபான் பயங்கரவாதிகளால் தலையில் சுடப்பட்ட மலாலா குணமாகி உலக அளவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடுவோரில் முக்கியப் பங்காற்றுகிறார்.
நைஜீரியாவில் ஏப்ரலில் பெண் குழந்தைகள் போகா ஹராம் என்னும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பால் கடத்தப் பட்டு அவர்களை மீட்க இது வரை எந்த உலக நாடும் முயற்சி எதுவும் செய்யாத நிலை. மலாலாவின் முயற்சியால் இது மாற வேண்டும்.
மத அடிப்படையிலான பயங்கரவாதம் எந்த அளவு கெடுதலானது என்பதற்கு நைஜீரியப் பெண் குழந்தைகள் கடத்தப் பட்டது உதாரணம். ஜாதி வெறி மத வெறி இவை இரண்டும் பெண்ணடிமை என்பதை உள்ளடக்கிய குரூர மனப்பாங்கே.
நைஜீரியாவில் வலுவான அரசு இல்லாததும் உள் நாட்டில் பயங்கரவாதம் தலை விரித்தாடுவதும் சர்வதேச அரசியலில் சர்வ சாதாரணமாகக் காணப்படலாம். எந்தப் போரானாலும் எந்த இடரானாலும் பெண்களும் குழந்தைகளும் பாதுகாக்க முக்கிய கவனம் தருவதே பண்பட்ட நாடுகளின் முன்னுரிமை. உலக அளவில் இந்த சிறுமிகளுக்காகக் குரல் எழுந்தது மிகக் குறைவே. இது எந்த அளவு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைக்கு நாம் பழகி விட்டோம் என்னும் கசப்பான உண்மைக்கு உதாரணம். மலாலாவின் ஆளுமையை தன் முன்னுதாரணமாக்கிக் கொண்டு நிறைய பெண்கள் உரிமைக் குரல் கொடுக்க வேண்டும். விடிய வெகு நாளாகலாம். ஆனால் உரிமையுணர்வு மேலும் மேலும் உறுதிப் பட வேண்டும். மனித இனம் தோன்றியதில் இருந்து தீராத அவலம் பெண்களுக்கு எதிரான வன்முறை.
(image courtesy: face book)