தமிழகத்தின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு எல்லாத் “தமிழ் இனக்காவலர்களும்” வேட்டி கட்டியவரை உள்ளே ஏற்காத ‘கிளப்’புகளைப் போட்டுத் தாக்கி விட்டார்கள். முதலமைச்சர் சட்டப்படி இதை சரி செய்வதாகச் சொல்லி விட்டார்.
‘கில்லி’, கபடி, மஞ்சுவிரட்டு இதைத் தவிர வேறு எதையும் ஆடக்கூடாது என்று இனக்காவலர்கள் சொல்லவில்லை. அந்த அளவு தமிழர்களுக்கு அன்னியமான கிரிக்கெட் மற்றும் கால்பந்து கூடைப்பந்து ஹாக்கி போன்ற விளையாட்டுகளும் தப்பின. பரோட்டா தமிழனின் உணவே இல்லை என்று அதைத் தடை செய்யச் சொன்னால் தமிழ் நாட்டில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள். அதுவும் நடக்கவில்லை. கடவுளுக்கு நன்றி.
மாணவிகளுக்கு நடைமுறையில் பயனுள்ள சூடிதார் சீருடையின் வடிவமாகத் தமிழ் நாடு முழுவதும் வந்திருப்பதை சுட்டிக் காட்டி உடை என்பது விருப்பம் மற்றும் வசதி அடிப்படையில் தனி நபரால் தீர்மானிக்கப் பட வேண்டும் என்று ‘தி ஹிந்து தமிழ்’ நாளிதழில் இன்று நீதிபதி சந்துருவின் கட்டுரையை வாசித்தேன். அதே சமயம் இந்த உடை போட்டு உள்ளே வரக் கூடாது என்னும் அதிகார அச்சுறுத்தலும் தவறு என்பதை அவர் பதிவு செய்கிறார். உடை என்பது பண்பாட்டின் ஒரு கால கட்டத்தின் குறியீடுகளில் ஒன்று. அதுவே பண்பாட்டின் அடையாளமாக ஆகவே முடியாது.
உடை உணவு ‘வீர விளையாட்டு’ என்று பண்பாட்டை மலினப் படுத்தும் போக்கின் நடுவே சந்துரு அவர்களின் முதிர்ச்சியும் தெளிவும் நடு நிலையும் இவர் தமிழ் நாட்டின் சிந்தனைத் தடத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று காட்டுகின்றன. இங்கே உணர்ச்சியைத் தூண்டிவிடும் போக்கே நிலைப் பட்டுவிடுமோ என்ற கவலை இருந்தது. இவர் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
(image courtesy: face book)
நீதியரசர் அவர்கள் பல நல்ல கேள்விகளை கேட்டுள்ளார். அவை தீர்க்கப்பட வேண்டியவையே. அதே நேரத்தில் இந்திய நாட்டு குடிமக்களுக்கு சில கடமைகளை நமது அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளது. இந்திய குடிமக்களும், இந்தியாவில் செயல்படும் அமைப்புகளும் அதன் படி நடக்க கடமைப்பட்டவர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 51-A (f ) ஆனது நமது பலவகையான கலாசாரத்தின் உயர்ந்த பாரம்பரியத்திற்கு மதிப்பளித்தல் மற்றும் பேணுதல் நமது கடமை என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் வேட்டி அணிவது தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள கலாசாரம் ஆகும். இந்நிலையில் அதற்கு எதிராக செயல்படுவது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். இதுநாள் வரை ஏன் இதனை எதிர்க்கவில்லை என்று கேட்பதைவிட இப்போதாவது எதிர்கிறார்களே என்று கருதுவதுதான் சரியானது ஆகும். மேலும் மற்ற காலனியாதிக்க நடைமுறைகள் பற்றியும் நாம் விவாதிக்க வேண்டும்.