ஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக
சுமார் 20 ஆண்டுகள் முன்பு கலை பற்றிய அணுகுமுறையில் இரு சிந்தனைப் பள்ளிகள் இருந்தன. “கலை கலைக்காக” என்று ஒரு தரப்பு. “கலை சமுதாயத்துக்காக” என்பது எதிர்த்தரப்பு. (இப்போது இடதுசாரிகள், வலதுசாரிகள், தலித் இலக்கியம் என்று மூன்றாகப் பிரித்துப் பார்க்கிறார்கள். )
ஒரு கலைஞன் தன் கலையை ஒரு கருவியாக, சமுதாயத்துக்கு ஒரு செய்தியைச் சுமக்கும் ஒரு தோணியாகப் பயன் படுத்தும் போது அது பிரசார இலக்கியம் என்று பெயர் பெறுகிறது. ஒரு அரசியல் உள் நோக்கம் அதனுள் இருக்கிறது என்பதே சுந்தரராமசாமி இத்தகைய இலக்கியங்களை நிராகரித்ததன் அடிப்படை. சமுதாயத்தின் மீது ஆழ்ந்த அக்கறையும் கவனமும் சமுதாயத்துக்கான மேலான கனவுகளும் கொண்ட ஒரு இலட்சியவாதியான எழுத்தாளனால் வெற்றுக் கலை என்னும் ஒரு படைப்படைத் தர முடியாது. பிரசாரத்தைக் கலையாகத் தந்தால் அது பெரும் வெற்றி. இந்த வெற்றி கை கூடியவை சிலவாகவும், கூடாமலேயே போன படைப்புகள் பலவாகவும் இருந்ததே ஜெயகாந்தனின் படைப்புலகம்.
ஆனந்த விகடனில் இன்னும் சமுதாயம் பற்றிய கனவுகளும் கவலைகளும் உள்ளவராகவே நாம் பெரியவர் ஜெயகாந்தனைக் காண்கிறோம்.
பேட்டியில் சில பகுதிகள்:
எழுத்தாளர்களைச் சமூகம் கொண்டாட வேண்டும் என்று சில எழுத்தாளர்கள் சொல்கிறார்களே?
எழுத்தாளனை எழுத்தாளனாகக் கொண்டாட வேண்டும் சமூகம். என்னைத் தனியாக கவனியுங்கள் என்று எழுத்தாளன், மக்களிடம் மனு போட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆனால் எழுத்தாளனின் ஸ்தானத்தை எழுத்தாளர்கள் தான் கெடுத்துக் கொள்கிறார்கள். இது தனி மனித உரிமை என்றொரு வாதம் வைக்கப் படுகிறது. பிரச்சனைகளை அக்கறையோடு அணுகி, தீர்வு காண வேண்டும் என்பதுதான் கலைஞனின் சமூகக் கடமை. அது இல்லாத பட்சத்தில் சமூகம் அவனை விட்டுத் தள்ள வேண்டும். இதற்குக் கூட்டம் கூட்டி ஒன்றும் செய்ய முடியாது”
“நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக நினைக்கிறீர்களா?”
“இல்லை. நிறைவு அளிக்கவில்லை. மிகவும் குறைபாடுடையதாக… குறைகள் மட்டுமே தெரிவதாகத் தெரிகிறது”
இந்த பேட்டியில் இரண்டு முக்கியமான விஷயங்களை ஜெயகாந்தன் முன் வைக்கிறார். ஒன்று எழுத்தாளனை சமூகம் எழுத்தாளனாக மட்டுமே பார்க்க வேண்டும். அது அவரது காலத்தில் சாத்தியமாக இருந்தது. இப்போதும் சாத்தியமே- ஆனால் சமூகத்தின் முன் இன்று ஒரு ஊழல் செய்த அரசியல்வாதி கூட அடுத்த தேர்தலில் ஓட்டு கேட்க முடியும். ஒரு எழுத்தாளன் தன் சாதிப் பின்னணி, மற்றும் அரசியல் சிந்தனை மற்றும் சமூகப் பணியில் பங்களிப்பு இவை யாவற்றையும் முன் வைத்து அதன் அடிப்படையில் மட்டுமே இன்று தன்னை ஒரு எழுத்தாளனாக அறிமுகப் படுத்திக் கொள்ள முடியும். இஸம், சாதி அல்லது சமூகப் பணி இவை எவற்றிலும் ஒன்றைக் காரணமாக வைத்து அவன் நிராகரிக்கப் படுவான், கொச்சைப் படுத்தப் படுவான், அவமானப் படுத்தப் படுவான் . அபூர்வமாக நடுநிலையாளர்களால் கவனமும் பெறுவான்.
இந்தச் சூழலை எந்தக் காழ்ப்புடனும் அல்லது கசப்புடனும் நான் விவரிக்கவில்லை. இது இன்றைய போக்கு. அவ்வளவே.
இவற்றையெல்லாம் தாண்டி ஒரு அசலான பிரதி தன் செறிவுக்காகவும் கூர்மைக்காகவும் கட்டாயம் பெறும்.
மறுபடி ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளனை சமூகம் எழுத்தாளனாக மட்டுமே பார்க்க வேண்டும் என்னும் ஒரு விருப்பத்தை முன் வைக்கும் இடத்துக்கு வருவோம். எழுத்தாளன் தன் பணியை ஒரு மிகப் பெரிய பரிவுடன் செய்கிறான். தனது உள்ளே இருக்கும் ஒரு கற்பனை, சிந்தனை அல்லது எதிர்வினையை மிகுந்த பரிவுடன் தனது சகபயணிகளுடன் பகிர்கிறான். அவன் அந்தப் பதிவுடன் தன் பணியை நிறைவு செய்து விடுகிறான். மௌனிக்கிறான். மீண்டும் அடுத்த பதிவு வரை அவன் தனிக்கிறான். இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளன் ஒரு வித்தியாசமான உரையாடல் (அல்லது ஒரு தலைப் பட்சமான சொல்லாடலில்) சமூகத்தை அணுகுகிறான். அவன் வேறு பணியில் இருந்தாலும் அந்தப் பணிக்காக இதைப் பயன்படுத்தாத வரை இந்த உரையாடல் மிகுந்த ஈர்ப்புத்தருவது. தன்னை ஒரு பீடத்துக்கும் சமூகத்தில் ஒரு ஒப்பற்ற அந்தஸ்துக்கும் அவன் எழுத்தை ஏணியாக ஆக்காத வரை ஒரு எழுத்தாளன் அஹிம்சையும் அமைதியுமான (கருத்துப்) பரிமாற்றத்தை நிகழ்த்துகிறான்.
இப்படிப் பட்ட ஒருவராகத் தான் ஜெயகாந்தன் இருந்தாரா? ஆமாம். அவர் தனது வாசக வாசகிகளை வைத்து ஒரு பெரிய வழிபடும் கூட்டத்தை உருவாக்கி இருக்க முடியும். அவ்வாறு செய்யவே இல்லை. அவரது சுதந்திரமான சிந்தனை கடுமையாக விமர்சிக்கப் பட்ட போது நிமிர்ந்து நின்று தன் தரப்பைக் கூறியதால் மதிப்புடன் கவனிக்கப் பட்டவர் அவர். ஆனால் அதை வைத்துப் பெரிய பிரம்மாண்ட ஆளுமையை அவர் கட்டமைத்துக் கோள்ளவே இல்லை. நான் எழுத்தாளன் – முரண்பாடுகளின் மூட்டையான தனி மனிதன் என்னும் பிம்பமே அவர் முன் வைத்தது.
அவர் புகழில் உச்சியில் இருந்த போது எனக்கு 20 வயது. அவர் எழுத்துகள் அனைத்தையும் படித்தவன். அவர் மீது அளவு கடந்த மரியாதை உள்ளவன். எனக்கு மிகக் கசப்பான ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார். (தொடரும்)