ஜெயகாந்தன் 80 – கலை சமுதாயத்துக்காக – நிறைவுப் பகுதி
என்ன அந்த அதிர்ச்சி? “வாக்குமூலம்” என்ற தலைப்பில் ஒரு வாரப் பத்திரிக்கையில் ஒரு தொடர் கட்டுரை எழுதி வந்தார். அதில் ஒரு பகுதியில் “நான் உரிய வயதில் என் பெயருக்குப் பின்னால் பிள்ளை என்னும் சாதிப் பெயரையும் சேர்த்துக் கொள்வேன்” என்று குறிப்பிட்டார். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் தந்தது.
அவர் தன்னை “முரண்பாடுகளின் மூட்டை” என்று பதிவு செய்தவர்தான். இருந்தாலும் இந்த முரண் அல்லது குறுகிய நோக்கு எனக்கு மிகவும் வருத்தத்தையும் அளித்தது.
அவர் வாழ்ந்த தலைமுறையின் தாக்கம் அது. அதை மறைக்காத நேர்மை அவரது ஆளுமையின் சிறப்புகளில் ஒன்று. அதே சமயம் வாழ்க்கையை ரசித்த அதன் புதிர்களை மிகவும் ஆணித்தரமாகப் பதிவு செய்தவரின் மனமுதிர்ச்சியின்மை இதில் வெளிப்பட்டது.
இந்த ஒன்றை சமன் செய்த ஒன்றே ஒன்று அவர் பீடங்களை நிராகரித்தது. கடந்த பதினைந்து ஆண்டுகளாக அவர் எழுதுவதையும் விட்டு விட்டார். இந்தத் துறவு மிகவும் அபூர்வமானது.
பன்முகமானவர். தொலைக்காட்சியில் விவாதங்களை ஒழுங்கு செய்பவராகவும் ஒரு முறை தோன்றினார். தனது சிறுகதைகளில் ஒன்றை அவர் இயக்கினார். “யாருக்காக அழுதான்?” என்னும் கதை அது. ஜனாதிபதி விருது பெற்றது. 90களில் அவரது “சில நேரங்களில் சில மனிதர்கள்”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” மற்றும் “கருணையினால் அல்ல” ஆகிய நாவல்கள் பீம்சிங்கின் இயக்கத்தில் வெளியாகின. பாடல்களை அவரே எழுதுவார்.
ஜெயகாந்தன் தான் சென்னைக்கு வந்த ஆரம்ப காலத்தில் சேரி மக்களின் இடையே இருந்தார். பின்னாட்களில் நடுத்தர மக்கள் வாழும் பகுதிகளிலும் வாழ்ந்தார். அவரது கதைகளில் இருப்பிடத்தின் பிரதிபலிப்பு உண்டு. உரையாடல்கள் மிகுந்த கதை சொல்லும் பாணி அவருடையது. லட்சியவாதம் மிகுந்த கதைகள் பல.
விளிம்பு நிலை மனிதர்களை மையப் படுத்திய எழுத்து ஜெயக்காந்தனிடமிருந்தே தமிழில் துவங்கியது எனலாம். ஜி.நாகராஜன் அவருக்கு சமகாலத்தவர். அவருக்கும் இந்தத் தனித்தன்மை உண்டு. “ஒரு பிடி சோறு” என்னும் சிறுகதையில் சேரியில் ஒரு இளம் கர்ப்பவதியான பெண் தண்ணீர் பிடிக்க அரும்பாடு பட்டு தானே மிகுந்த உடல் வேதனையுடன் சோறு சமைத்து அதில் ஒரு கவளம் உண்ணும் முன் உயிர் நீத்து விடுவாள். இந்தக் கதை சேரியில் உள்ள பெண்களின் வாழ்க்கையின் வலியை மிக ஆழமாகப் பதிவு செய்தது.
சமகால எழுத்தை வாசிப்பதிலோ விரிந்த வாசிப்பிலோ ஆர்வமற்றவர் அவர். அதனாலேயே அவரது எழுத்து அவரின் பார்வையாக- அதைத் தாண்டாததாக – மட்டுமே நின்றது. தமிழின் அழுத்தந்திருத்தமான நடை அவருக்கு மிகவும் நன்றாகவே கை வந்தது.
ஒரு எழுத்தாளன் தன் குரலை சமூகத்தின் மேன்மைக்காக ஒலிக்க வேண்டும். அதைத் தாண்டி அவனுக்கு இருப்பு எதுவுமில்லை என்பதே அவரது வாழ்க்கையின் சாரம். நிறைவாக வாழவில்லை என்று அவர் கூறுவது எழுத்தாளனால் சமூகத்தை அதிகம் பாதிக்க இயலாது என்னும் புரிதலின் அடிப்படையில் தான்.
அவர் கர்ஜித்ததும் மௌனித்ததும் தமது தடத்தின் தனித்தன்மையை ஒட்டியே இருந்தது. எந்தவிதமான சமாதானமும் இல்லாத தடம் அவருடையது. ஆனால் அவர் கர்ஜித்த போதும் புலித் தோல் போர்த்திய நரி அல்ல. அவர் தமிழில் கலை சமூகத்துக்காக என்னும் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளோரின் முன்னோடி. போலித்தனம் இல்லாத இலக்கிய ஆளுமை.