குழந்தைகள் பலியாகும் விபத்துகள் மட்டுமே கவனம் பெறுகின்றன
கும்பகோணம் தீவிபத்து நடந்து 10 ஆண்டுகள் கழித்து, குற்றவாளிகள் இவர்களே என்று நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. ஊடகங்களில் மிகுந்த கவனமும் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் குழந்தைகள் உயிரழக்கும் விபத்துகளைக் காண்கிறோம். இரு வாரங்கள் முன்பு தெலுங்கானா பகுதியில் ஆளில்லாத தண்டவாளம் தாண்டும் இடத்தில் ஒரு ஓட்டுனரின் அலட்சியத்தால் பல குழந்தைகளின் விலை மதிக்க முடியாத உயிர் பலியானது.
குழந்தைகளின் உயிர் போனால் மட்டுமே அவர்களது பாதுகாப்பு பற்றிப் பேசுவது இல்லையென்றால் அன்றாட நடப்பில் எதுவும் செய்யாமல் விட்டுவிடுவது என்னும் அணுகுமுறையே ஊடகங்கள் மற்றும் மக்கள் மனப்பாங்கில் காணப் படுவது.
அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் பெறாதது. அது பாலியல் ரீதியான பாதுகாப்போ அல்லது பள்ளிக் கட்டிடம் மற்றும் பள்ளிக்குப் பயணம் தொடர்பானதோ எதுவானாலும் உரிய கவனம் பெறுவதே இல்லை.
கிராமங்களில் இருந்து சிறு நகரங்கள் அல்லது பெரு நகரங்களுக்குப் பயணிக்கும் ஏழைக் குழந்தைகள் ஆடு மாடுகளைப் போன்று அடைக்கப் பட்ட வண்டிகள், ஆட்டோ அல்லது பேருந்துகளில் செல்வதை நாம் காண்கிறோம். திறந்த கிணறுகளில் வண்டி விழுவது விபத்துகளால் குழந்தைகள் உயிர் பலியாவது சர்வ சகஜம்.
மதிய உணவு மகத்துவமானது என்பதை மாநில மத்திய அரசுகள் உணர்ந்து செயற்படுத்தி உலக அளவில் அது வரவேற்பையும் பெற்றது. மாணவர்கள் பள்ளிக்கு வந்து போவது பெரிய சவால். அதை அரசுப் பேருந்தில் இலவசப் பயணம் என்று முடித்து வைப்பது மிகவும் மலினப் படுத்தப் பட்ட ஒரு ஏற்பாடு. மாணவர்களின் புத்தகச் சுமையைப் பார்த்து இரக்கப் படாமல் அவர்களைப் பெரிசுகள் ஏசுவது தினமும் காண்பது.
குறிப்பாக கிராமங்களில் மாணவ மாணவியர் பள்ளிக்குச் சென்றுவர அரசின் பாதுகாப்பான போக்குவரத்து பள்ளி நிர்வாகத்தின் பங்களிப்புடன் அமல் படுத்தப் பட வேண்டும். பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்கும். சென்னையில் பல மாணவர்கள் நெரிசலில் படியில் தொங்கி உயிரை விட்டிருக்கிறார்கள். விடலைகளும் குழந்தைகளுமான அவர்களுக்குப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு இருக்காது. நாம் தான் பாதுகாப்பான நல்ல ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகளில் சில மட்டுமே தமது பொறுப்பில் வாகனத்தை ஏற்பாடு செய்கின்றன (கடுமையான கட்டணத்தில்). பெரும்பான்மையான பள்ளிகள் தனியாரின் பொறுப்பில் இதை விட்டுவிடுகின்றன. தனிப்பட்ட தாய் தகப்பன் இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செல்வதும் தினசரி நாம் காண்பதே. அதுவும் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று.
வார நாட்களில் பள்ளிக்கும் வார இறுதியில் விளையாட்டுக்கும் என மைதானம் மற்றும் பொது விளையாட்டரங்கத்துக்கும் மாணவர்கள் அரசின் பொறுப்பில் இலவசமாகச் சென்று வர வேண்டும். அவர்கள் கல்வி ஆரோக்கியம் இரண்டுக்குமான போக்குவரத்தை ஒழுங்கு செய்வதை அரசு மற்றும் பள்ளி நிர்வாகம் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும். எவ்வளவோ வரி கட்டுகிறோம். மாணவச் செல்வங்களுக்காக இன்னும் ஒரு வரி போட்டாவது அவர்கள் நல்லபடி வளர வாழ உயர அரசு முனைய வேண்டும்.