சென்னை – 375 வயது விடலை


egmpre

சென்னை – 375 வயது விடலை

கடந்த சில நாட்களாகவே சென்னை 375 என்று பல கட்டுரைகள் மற்றும் புகைப்படங்களை நாம் ஊடகங்களில் காண்கிறோம்.

34 வருடங்களுக்கு முன் நான் சென்னைக்கு வேலை கிடைத்ததால் வந்து இங்கேயே இருக்கும் படி ஆகி விட்டது. தமிழ் நாட்டில் பல நகரங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம் ஆகிப் போனாலும் என் குழந்தைகள்- குடும்பம் இங்கேயே இருந்து விட்டார்கள். அதனால் எனது நிரந்தர இருப்பிடமாகச் சென்னை ஆகி விட்டது.

சென்னை பற்றிய என் முதல் கண்ணோட்டம் இங்கே மனம் விட்டுப் பேச யாரும் இல்லை என்பதாக இருந்தது. நன்றாக உடை உடுத்துவது கட்டாயம் என்பது சென்னையில் தான் பிடி பட்டது.

சென்னையில் தொடக்க காலத்தில் “தனி ஆண்களின் சொர்க்கம்” (Bachelor’s paradise) என்று அழைக்கப் படும் திருவல்லிக்கேணியில் தான் நான் தங்கி இருந்தேன். பின்னர் அமைந்தகரைக்கும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட ஒரு இடத்தில் என் சகோதரர்களுடன் தங்கி இருந்தேன். திருமணமான பின் மந்தைவெளி பின்னர் பெசண்ட் நகர் பின்னர் நிரந்தரமாகத் திருவான்மியூர் என்று என் இருப்பிடம் அமைந்தது.

தொடக்க காலத்தில் திருச்சிக்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்தேன். கிடைக்கவில்லை. பின்னர் இங்கேயே தங்கி விட்டேன்.

நான் மேற்குறிப்பிட்ட காலங்களில் சென்னையில் இந்த அளவு வாகன இரைச்சலும் போக்குவரத்து நெரிசலும் இல்லை. சைக்கிளில் பல வருடங்கள் அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன்.

அது ஏன் சென்னையை விடலை என்று குறிப்பிடுகிறேன்? நான் பார்த்த அளவில் 34 வருடங்களில் இன்னும் பாதாள சாக்கடைப் பணிகளோ அல்லது போக்குவரத்து ஒழுங்கோ திட்டவட்டமாக முடியவே இல்லை. தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். சென்னை என்று கருதப்படும் முக்கிய நகர்ப்பகுதியில் அண்ணா நகர், கேகே நகர், பெசண்ட் நகர், அடையாரின் சில பகுதிகள் தவிர வேறு எங்கும் திட்டமிட்ட நகர அமைப்பே கிடையாது. மைலாப்பூர், திருவல்லிக்கேணி, பெரம்பூர், ராயபுரம், சைதாப் பேட்டை, அடையாறு, திருவான்மியூர் என்று உதிரி உதிரியான சிறு நகர்கள் ஒன்றாகிப் போன கலவை.

ஒரு விடலைக்குத் தானே என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. பிறரின் எதிர்பார்ப்புகள் ஏகப்பட்டது இருக்கும். தன் போக்கில் தான் அந்தப் பையன் போவான். எப்படியோ வளர்ந்து விடுவான். வளர்ந்த பிறகு அவன் சுமாராக முன்னேறினாலும் ஏகப் பட்ட பாராட்டுதான்.

20 25 வருடம் முன் சென்னை பெரு நகரமே ஒழிய பன்முக நகரல்ல. (only a metro and not cosmopolitan). அப்போதெல்லாம் ஆந்திரம் மற்றும் வடமாநிலத்தில் இருந்து இங்கே பெரிய தொழிலதிபர்களானவர்கள் மட்டுமே மாற்று மொழி பேசுவோர். இப்போது கூலிக்கார்கள் முதல் தகவல் தொழில் நுட்பப் பணியாளர், பிற மாநிலத்திலிருந்து பொறியியல் படிப்புக்காக வரும் மாணவர் வரை, பல மாநிலத்தவர்கள் வாழுகிறார்கள்.

20 வருடம் முன் மும்பைக்கு இடமாற்றம் ஆன போது பல மொழி பேசுவோரை அங்கே காண முடிந்தது. கடந்த பத்தாண்டுகளில் தான் சென்னையும் மும்பையைப் போல பல மாநிலத்தவர் தேடிச் சென்றடையும் இடம் ஆகி இருக்கிறது.

இன்று சென்னையில் பேருந்திலோ அல்லது புறநகர் ரயிலிலோ தமிழ் தவிர்த்த பல மொழிகளும் ஆங்கிலமும் கைபேசியில் அடுத்தவன் காது செவிடாகும் படி அலறிக் கேட்கின்றன.

டெல்லி அளவு இல்லையென்றாலும் நவீன ஆடைகளை இளம் பெண்கள் அணிவது இப்போது ஓரளவு பழகி விட்டது. முன்னர் வேட்டி கட்டிய பல தாத்தாக்கள் டிரவுசருடன் சுற்றுவது சென்னையில் மிக அதிகம். ‘சாட்’ உணவுகள் கடற்கரையிலும் சாலை ஓரங்களிலும் நிறையவே கிடைக்கின்றன. நடைபாதைகள், ரயில் நிலையங்களில் ‘பீடா’ எச்சிலின் கறைகள் கரையில்லாமல் நீண்டு கொண்டே போகின்றன.

ஆடைகள் வாங்குவது ஒரு காலத்தில் பண்டிகைக்கு மட்டும் என்று இருந்தது. பிறந்த நாள் என் குழந்தைப் பருவத்தில் நான் சகோதரர் ஒரு சகோதரி உட்பட நான்கு பேருக்கும் கொண்டாடியதே கிடையாது. கோயிலுக்குக் கூடப் போனதில்லை. இன்று தேவையிருக்கிறதோ இல்லையோ ஆடைகளில் மக்கள் பணத்தை அள்ளி வீசுகிறார்கள். வருடம் ஒரு முறை போடுமளவு நடுத்தர மக்களிடம் ஆடைகள் அதிகம். அதற்கான கடைகளால். தி.நகர் யாருமே போக அஞ்சும் இடமாகி விட்டது.

சென்னை மக்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர்களின் உடல்மொழியில் இருக்கும் மிடுக்கும் தைரியமானவர் என்னும் நிமிர்வும். பிடிக்காதது கிராமப்புற மக்களை “நாட்டுப்புறம்”, நாட்பொறம் என்று இளப்பமாக நினைப்பது.

சென்னையில் நான் இன்று வரை ஒட்டவில்லை. என்னை சென்னைவாசி என்று குறிப்பிட எனக்கு எந்த விருப்பமான காரணமும் இல்லை. மறுபக்கம் சென்னை எனக்கு நிறையவே செய்திருக்கிறது. என் குழந்தைகளின் பட்டப் படிப்புக்கான தயாரிப்பு இங்கே தான். அவர்கள் கடற்கரையை மிகவும் ரசித்து வளர்ந்ததாலேயே நான் திருவான்மியூரை விட்டு நீங்கவே இல்லை. நான் மிகுந்த மன அழுத்தத்துடனே பல வருடங்களை வீணடித்தேன். ஆனால் சென்னை என்னை அழிய விடவில்லை. என் பட்ட மேற்படிப்பு மேலாண்மைத் துறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வியில் வெற்றிகரமாக முடிய என் சென்னை வாசமே காரணம். என் நூல்களில் விழாவில் வெளியிடப்பட்டது சென்னையில் தான். பிற நூல்களுக்கு விழா இல்லை. சமீபத்தில் ஐந்து நூல்கள் எழுதியும் நான் வெளியிடத் தயங்கி வருகிறேன்.

சென்னை கடற்கரை எனக்கு அதிகப் பிரியம் இல்லாதது. கடல் அலைகள் மன அமைதிக்கு உகந்தவை ஆகா என்பது என் கருத்து. ஹாரிங்க்டன் சாலை ஒரு காலத்தில் மிகவும் அமைதியாக இருக்கும். அங்கே நடந்து திரிந்த காலங்கள் இனியவை. அண்ணா நூற்றாண்டு நூல் நிலையம் உலகத் தரமானது. என்ன செய்வது? நம் அதிர்ஷ்டம் அவ்வளவே. நாம் மிகவும் மதிக்கும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்களை நான் சென்னையில் நேரில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.

அரசுப் பேருந்தில் பயணம், சாதாரண தேனீர்க் கடைகளில் தேனீர் அருந்துவது இவற்றால் நான் ஏழை மக்களின் பிரச்சனைகளை நன்கறிவேன். நூறு ரூபாய் பெரிய தொகையான எவ்வளவோ மக்கள் லட்சக் கணக்கில் சென்னையில் வாழ்கிறார்கள்.

கிராமத்தில் ஏழைக் குடிசை கூட பெருக்கி சாணமிட்டு மெழுகி ரம்மியமாக இருக்கும். இங்கே குப்பங்களில் மிருகங்களைப் போல் அடைந்து வாழும் மக்களிடம் அது கூடாது என்று சொல்லி நிரந்தரமாக அத்தகைய சாக்கடையோரக் குப்பங்களை நீக்கி அவர்களை நல்லபடியாக அரசோ தனியாரோ வாழ வைக்க வேண்டும்.

சென்னையில் தான் பல ஆண்டுகள் ரத்ததானம் செய்தேன். டெல்லியில் மஞ்சட்காமாலை என்னைக் கிட்டத்தட்ட கொன்ற போது ரத்த தானம் செய்யும் தகுதியை நிரந்தரமாக இழந்து விட்டேன்.

சென்னையைப் பற்றி ஒரே ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் “கனவு விதைகளின் நஞ்சை பூமி”

(image courtesy:wiki)

Advertisements

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in Uncategorized and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s