ஜெயகாந்தன் பற்றிய மேம்பட்ட புரிதல்
ஜெயகாந்தன் எழுதிய எல்லாவற்றையுமே தேடித் தேடிப் படித்தவன் நான். அவருடைய பாதிப்பு இல்லாமல் என் இயல்பான எழுத்து எனக்குள் உருவாகப் பல நாட்கள் பிடித்தன. அவரது பாத்திரப் படைப்புகளில் கலையுணர்வோ அல்லது லட்சியவாதமோ கொண்ட ஒருவர் கட்டாயம் இருப்பார். உரையாடல்கள் ஆழ்ந்த சிந்தனையை ஒரு பக்கம் வெளிப்படுத்தும் மறுபக்கம் சிந்தனையைத் தூண்டும். சுதந்திரம் பெற்று தம் மண்ணின் அடையாளங்களைப் புரிந்து கொண்டு தலைநிமிர்ந்து நின்ற தலைமுறையின் கனவுகளை, முரண்களை, அவர்கள் எதிர்கொண்ட பண்பாட்டுச் சிக்கல்களைப் பதிவு செய்தவர் அவர். நகர்ப்புறச் சேரிகளில் உள்ள விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய அவரது படைப்புகள் அவை வெளிவந்த காலத்தில் யாருமே தொடாதவை. அவர் அவர்களின் வறுமை மறுபக்கம் அவர்களைக் கட்டிப்போடும் தளைகள் இரண்டையும் பதிவு செய்தார்.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் அவர் தான் தனது எழுத்துகளைத் தவிர வேறு யாருடையதையும் வாசிப்பதில்லை என்று குறிப்பிட்ட போது அவர் மீது எனக்கு இருந்த மரியாதை மற்றும் மிக ஆழ்ந்த ஈடுபாட்டையும் தாண்டி “ஏன் இவர் இப்படிக் குறுகிய நோக்குடன் இருக்கிறார் ?” என்னும் கேள்வி இன்று வரை தொடர்ந்தது. ஆனால் அந்த வருத்தம் ஜெயமோகனின் இந்தக் கட்டுரையைப் படித்த பின் சந்தேகம் நீங்கித் தெளிவாக மாறியது. அவருக்கு மிக்க நன்றி.