காலச்சுவடின் அசோகமித்திரனுடனான நேர்காணல்
செப்டம்பர் 2014 காலச்சுவடு இதழில் அசோகமித்திரனின் நீண்ட நேர்காணல் வந்துள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முன்பே முடிவு செய்து தற்போது நிறைவேறியது அசோகமித்திரனுடன் காலச்சுவடு செய்துள்ள ஒரு நீண்ட நேர்காணல். அசோகமித்திரனுடன் நேர்காணல் முக்கியத்துவம் பெறுவது அவர் தனது பிம்பம் என்று ஒன்றைக் கட்டமைத்து அவ்வப்போது பிரகடனங்கள் செய்பவர் அல்லர். அவருக்கு வாசகர் வட்டமோ அல்லது ஒரு நிறுவன அந்தஸ்தோ கிடையாது. இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த அவரது நிலைப்பாடுகள் மற்றும் கருத்துக்களை நாம் அவர் படைப்பின் மூலம் சென்றடைய முடியாது.
அவர் ஐம்பது ஆண்டுகளாகவே தமக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியவற்றை மறக்காமல் பதிவு செய்து வந்திருக்கிறார். எழுதுவது, எழுத்தாளனாக இருப்பது இவை மிகவும் சிக்கலான, மிகப் பெரிய தவமான, அகழிகளுக்கு நடுவிலான ஒன்று என்னும் தொனியில் அவர் எப்போதுமே பேசியதில்லை எழுதியதில்லை. அவரது பேட்டியில் நாம் புதியதாக சிலவற்றையும், நாமறிந்த அவரது சில கருத்துகள் பற்றிய தெளிவையும் பெறுகிறோம்.
1. அவர் எந்த சூழ்நிலையில் ஜெமினி ஸ்டூடியோவில் இருந்த வேலையை விட்டுவிட்டார் என்ற கேள்விக்கு அவரது பதில் “ஒரு எழுத்தாளனாக இருந்து மேஸ்திரியாக செயற்பட வேண்டி இருந்தது” என்பதே. வண்டி ஓட்டுனர்களை மனித நேயமே இல்லாமல் விரட்டுகிற வேலை அது. அதை அவர் செய்வதற்கு மிகவும் மனம் சங்கடப் படவே செய்திருக்கிறார்.
2.தண்ணீர் நாவலைப் பற்றிப் பேச்சு வரும் போது அதைப் பதிப்பிக்க அவருக்காக சுந்தர ராமசாமி , மோகன் ஆகிய எழுத்தாளர்கள் க்ரியா ராமகிருஷ்ணனினடம் பேசியது அவருக்கு மனதைப் புண்படுத்தி இருக்கிறது. இன்னொரு பதிப்பகம் ஒரு புத்தகம் 1000 ரூபாய் என ஆயிரம் பிரதிகள் விற்றும் அசோகமித்திரனுக்குக் கிடைத்த சன்மானம் மிகவும் அற்பமானது. இவற்றை வருத்தத்துடன் நினைவு கூறுகிறாரே ஒழிய எந்த வன்மமும் அவருக்குள் இல்லை. தமிழ் பதிப்புலகம் படைப்பாளிகளை எந்த இடத்தில் வைத்துள்ளது என்பது மறுபடியும் நமக்கு அவரால் நினைவூட்டப் படுகிறது.
3.ஆன்மீகம் பற்றிய கேள்விக்கு அவர் தந்துள்ள பதில் இது:
“ஆன்மீகம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அது தெரியவில்லை என்று ஒத்துக்கொள்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை. ஆன்மீகவாதிகள் நிறையப் பேரைப் பார்த்துவிட்டேன். எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் நமக்குப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக ஆகி விடுகிறார்கள். நான் சொன்ன இந்தச் சித்தர் செத்துவிட்டார். அவருடைய குழந்தைகள் செத்துப் போய்விட்டார்கள். அந்தப் பெண் பட்டினி கிடந்தே செத்துவிட்டாள். நான் அவளைப் பார்த்தேன். அவளை சித்தருடைய மகளாகத்தான் பார்த்தேன். அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்று தோன்றவில்லை. அன்றைக்கு கும்பகோணத்தில் மழையான மழை. அந்தப் பெண்ணுக்கு அப்போது ஒரு நூறு ரூபாயாவது கொடுத்திருக்கலாம். நான்கு நாள்கள் சாப்பிட்டிருப்பாள். ஆனால் நான் கொடுக்கவில்லை. பிறகு அதைப்பற்றி யோசித்தேன். கொடுக்க வேண்டும் என்று ஏன் எனக்குத் தோன்றவில்லை? அதை வருத்தம் என்று சொல்கிறீர்களா? இது மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள். ஆக ஆன்மீகம் என்று எதை வரையறுப்பது?”
மற்றொரு கேள்வியில் புராணம் அதன் கதைகளைப் பயன் படுத்துவது பற்றிய பதில் இது:
“என்னைப் புராணங்கள் பிரமிக்க வைக்கின்றன.இதிகாசம் என்னை மலைக்க வைப்பதோடு பல இடங்கள் புரியாமலும் உள்ளன. ஆரம்ப நாட்களிலிருந்தே நான் புரியாததைத் தவிர்த்திருக்கிறேன். என்வரை இதிகாசங்கள் புரிந்துவிடக் கூடாத புதிர்கள். சில சமிக்ஞைகளை உணரலாம். ஆனால் இதிகாசங்களின் கால அளவை, தூர அளவை, தர்க்கம் நம் அறிவுகொண்டு கற்பனைசெய்து கொள்ளக்கூடியது அல்ல என்று நான் நம்புகிறேன். இது கிரேக்க இதிகாசங்களுக்கும் பொருந்தும். ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது விட்டுவிட வேண்டும். விட்டுவிடுவது, இந்தியாவரை நாத்திகர்களுக்கும் சாத்தியமில்லை. இராமாயணத்து தசரதர் 60000 ஆண்டுகள் ஆண்டவர். 60000 மனைவிகள் கொண்டவர், இவ்வளவு நாட்கள் ஆண்டுவிட்டு அவருக்கு மகன் இல்லை என்று புத்திரகாமேஷ்டி யாகம் புரிந்து மூன்று மனைவிகள் மூலம் நான்கு மகன்கள் அடைகிறார். அந்த இதிகாசக் களம் இந்தியா முழுதும் பரவி இருக்கிறது. அதே போல பாரதமும் இந்தியா முழுதும் நிகழ்ந்த கதையாக இருக்கிறது. யுத்தங்களில் நால்வகைப் படைகள். இதில் தேர்ப் படை எப்படி இயங்கியது? வழியெல்லாம் மாண்டவர்கள், கைகால் இழந்து துடிதுடிப்பவர்கள் – இவர்கள் மீது எப்படி ஓட்டிச் சென்றிருக்க முடியும்? நமக்குத் தெரிந்த தர்க்கத்தைக் கொண்டு இதெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. அப்புறம் விஸ்வரூபம்.
பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவர்களாகப் படைக்கப்பட்டவர்கள். ஒரு மகாமனிதர் இவ்வளவு நுணுக்கமாகப் படைத்த பாத்திரத்தை நான் பயன்படுத்துவது நியாயமாகப்படவில்லை. ‘இரண்டாம் இடம்’ என்று பீமனை வைத்தோ பரதனை வைத்தோ எழுத முடியாது.வியாசரும் வால்மீகியும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் எழுதியிருக்கிறார்கள். படிக்கப் படிக்கத் திகட்டாதவை. என்னால் என்ன கூட்ட முடியும்?
இதெல்லாம் நான் எனக்கு வகுத்துக்கொண்டவை.இதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்த மாட்டேன். இறுதியாக ஒரு கருத்து. எல்லா நேர்காணலிலும் கேள்வி கேட்பவர் அவர் சிந்தித்து அடைந்த சில முடிவுகளின் அடிப்படையில்தான் கேள்வி கேட்பார். தவறில்லை. ஆனால் என்வரை ஆன்மிகம், முன்ஜன்மம், மறு ஜன்மம், கர்மம் எல்லாமே நிழலாக உள்ளவை. இவற்றுக்கு எனக்குப் பதில்கள் இல்லை. இன்று ஒருவர் வாழ அன்றாட வினை – விளைவு போதுமானது. இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் செயல்படுகிறதா? இல்லை. காரணம், நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாத காரணிகள். எனக்கு ஆன்மிக வேட்கை உள்ளது என்பதே சுயமயக்கம். என்னால் எனக் குத் தெரிந்தது மேல்தான் வேட்கை கொள்ள முடியும்.”
ஆன்மீகத்தை அசோகமித்திரன் மலினப் படுத்த அணுகுமுறையில் காண விரும்பவில்லை. அதன் சாயல் ஒன்றே நமக்கு அவ்வப் போது கிடைக்கிறது. புரிதலின் எளிய எல்லைக்குள் அடங்குவது அல்ல ஆன்மீகம். உணர்தலின் விளிம்பில்லா வெளிக்குள் அகப்படலாம். ஆனால் அது வரையறுத்த ஒரு தடத்தில் சென்று எட்டிவிடக் கூடியது அல்ல. மதத்தின் சதுர, செவ்வக, நேர்கோட்டு வழிகளில் ஆன்மீகம் நமக்கு எட்ட வாய்ப்பே இல்லை.
ஆனால் அசோகமித்திரன் வாழ்க்கையை அணுகும் போது ஆன்மீகவாதியாகத் தென்படுகிறார். “வேலையை விட்டது அப்போது எடுத்த ஒரு தீர்மானமான முடிவு. எழுத்தினால் எளிய வாழ்க்கையையே வாழ வேண்டி இருந்ததில் எந்த வருத்தமும் இல்லை” என்பதாகவே அவரது பதில் இருக்கிறது.
தம்மை ஒரு பெரிய இலக்கிய ஆளுமையாக, பிரம்மாண்டமான ஒரு படைப்பாளியாக அவர் நிலை நிறுத்திக் கொள்ள முயன்றதே இல்லை. அவருக்கென ஒரு வாசகர் வட்டமோ, நிறுவனமோ எதுவும் கிடையாது. அவரது நூல்கள் அவற்றின் செறிவுக்கும் படைப்புக்கும் தரப் பட்ட மரியாதையாலேயே மொழி பெயர்க்கப் பட்டன. அவர் அதற்கான முயற்சிகள் எடுத்து அதை நிறைவேற்றும் தன்மையானவரே அல்லர். படைப்புகள் ஒருவரால் நிகழா விட்டால் இன்னொருவரால் நிகழவே செய்யும் என்றும் அவர் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
அவரது கதைளில் கூட ‘இப்படி இருந்தது. இது என் கண்ணில் பட்டது’ எனத் தொட்டுச் செல்லும் புள்ளிகளை நாம் இணைத்தால் மட்டுமே அதன் பின்புலத்தில் உள்ள ஒரு வடிவம் வெளிப்படும். அந்த வடிவத்தில் சுயநலமும் மூர்க்கமான பொருட் தேடலும் நிறைந்த நடைமுறை வாழ்க்கையின் கசப்பு பூடகமாக வெளிப்படும். சகிப்புத் தன்மை மிகுந்த ஒரு கதாபாத்திரம் தன்னை அல்லற்படுத்தும் விஷயங்கள் தன் கைக்கு மீறியவை என்னும் புரிதலுடன் மேற்செல்லும் பிம்பம் நம்முன் நிற்கும். மனித நேயம் மரித்த உலகின் பரிமாணங்கள் நம்மை அவரது படைப்புகளின் ஊடாக உறுத்தும்.
பேட்டியின் தொடக்கத்தில் நவீனத்துவத்துக்கு எனத் திட்டமிட்டு எழுதினீர்களா என்னும் கேள்விக்கு அவர் “வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புகளே அவை ” என்பதன் மூலம் வாழ்க்கையை அதன் விடை தெரியாத கேள்விகளோடு சித்தரிப்பதில் நவீனத்துவமான அதாவது இடைவெளிகளே சம்பவங்களின், பாத்திரங்கள் கொள்ளும் நகர்வுகளின் தடத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று நமக்கு உணர்த்துகிறார்.
4.கல்கியைப் பல இலக்கியவாதிகள் ஆழமில்லாத, மனக்கிளர்ச்சியூட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர் என்று நிராகரிப்பார்கள். ஆனால் அசோகமித்திரன் அப்படி நினைக்கவில்லை. மறுபக்கம் ஜெயமோகனின் எழுத்துப் பாணியை அவர் நிராகரிக்கிரார். பேட்டியின் இந்தப் பகுதியைப் பார்ப்போம்:
“மாமண்டூரில் ஒரு யுத்தம் நடந்தது உங்களுக்குத் தெரியுமா? சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும். அப்போது ஒரு வெள்ளம் வந்தது. அதற்கு ஆதாரமும் இருக்கிறது. சிவகாமியின் சபதம் இல்லா விட்டால் என்னால் அதைத் தெரிந்து கொண்டிருக்க முடியுமா?
மாமண்டூர் யுத்தம் சிவகாமியின் சபதத்தில் இடம் பெறுவது எதற்காக? வாசகனுக்கு ஒரு பல்ப் பிக்ஷன் தரக்கூடிய சுவாரசியத்தைக் கொடுப்பதைத் தவிர வேறென்ன?
எழுத்தாளன் வேறு எப்படி எழுதுவான்? ஆர்வமூட்டக்கூடியது தானே எழுத்து?
அப்படியானால் எழுத்தாளனாக இருப்பது என்றால் என்ன?
அதை நான் சொல்ல மாட்டேன். எழுத்தாளன் எதைச் சொன்னாலும் சுவாரசியமாக இருக்க வேண்டும். நம்பும்படியாக இருக்க வேண்டும். தி.ஜ. ரங்கநாதன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தாரே, அவருக்கும் கல்கியைப் பிடிக்காது. என்னைப் பார்க்கும்போது இவருக்குக் கல்கியைப் பிடிக்குமாம் என்று கிண்டல் செய்வார். நான் இப்படித்தான் என்று கிடையாது. ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தை என் மனைவியிடம் கொடுத்தேன். அவளால் படிக்க முடியவில்லை. அதில் பத்துப் பதினைந்து பகுதிகள். அதற்கு இத்தனை விவரிப்புத் தேவையா? ராஜாஜி மகாபாரதத்தை 250 பக்கங்களில் எழுதியிருப்பார். அதற்கு இருக்கிற வாசகப் பரப்பு இதற்கு இருக்குமா? மகாபாரதத்தைப் பிரச்சாரம் செய்ய நான் விரும்பினால் இதைப் பரிந்துரைக்க முடியாது. இதில் வேறு என்னென்னவோ குழப்பங்கள் இருக்கின்றன. நாகர்கள் நாகர்கள் என்று சொல்கிறார். நாகர்களுக்கு அரண்மனையெல்லாம் கிடையாது. ஆனால் அவர் அதற்கெல்லாம் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கிறார். மலையாள மகாபாரத்தில் இருக்கிறது என்கிறார்.”
இந்தப் பேட்டியில் மட்டுமல்ல. பலமுறை அவர் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார் “எழுத்து படிக்க சுவாரசியமாக இருக்க வேண்டும். நம்பகத்தன்மை உள்ளதாக இருக்க வேண்டும்”.
இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் குறிப்பிடுவது சுவாரசியம் பற்றி மட்டுமே. வாசகனை வசியப் படுத்துவதாகவோ அல்லது அவனுக்கு மனக் கிளர்ச்சி ஊட்டுவதாகவோ இருக்க வேண்டும் என்று அவர் எப்போதுமே நினைக்கவில்லை. வாசகனுக்குத் தீனி போடச் சொல்லவில்லை. அவன் படிக்காமல் நிறுத்தி விட்டுப் போக வேண்டாமே என்று கட்டாயம் கருதுகிறார்.
ஐம்பது வருடங்களாக அவருக்கு இலக்கியமே வாழ்க்கையின் மையமாக இருந்திருக்கிறது. அதைத் தம் இயல்பு என்ற புரிதலுடன் உலகின் இயல்பைப் புரிந்து கொள்ளவும், அது புரிந்த அளவு பகிர்ந்து கொள்ளவும் அவர் இயங்கினார். குடும்ப வறுமையோ, தாம் கொண்டாடப் படாத ஒருவர் இலக்கிய உலகில் என்பதோ அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.
ஏனெனில் அவர் முகமூடிகளின் அவசியம் ஏதுமில்லாதவர்.