வாசிப்பு என்னும் எல்லையில்லாப் பெருவெளி


Books
வாசிப்பு என்னும் எல்லையில்லாப் பெருவெளி

வாசிப்பின் மகத்துவம் குறித்தும் வாசகர்கள் குறைந்து வருவது குறித்தும் எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையை வாசித்தேன். பல நினைவுகள் என்னுள் எழுந்தன. என் வாழ்க்கையில் வாசிக்க வாய்ப்புக் கிடைத்த போது நான் படித்தவற்றுள் என் நினைவில் நிற்பவற்றின் காலவரிசை அல்லது தரவரிசை இல்லாத ஒரு பட்டியல் இது:

டால்ஸ்டாய் – போரும் அமைதியும்
காஃப்கா- The transformation
ஹாரியட் பீச்சர் ஸ்டோவ்-Uncle Tom’s Cabin
பிரான்ஸின் சேலோர்மி- குறுகிய வழி
ராபர்ட் எம்.பிர்சிக்- Zen and the Art of Motor cycle Maintenance.
முன்ஷி பிரேம் சந்த்- கபன்
மஹா ஸ்வேதா தேவி- திரௌபதி, கசப்பு மண்
தஸ்லிமா நஸரீன்- லஜ்ஜா
யூ ஆர் அனந்த மூர்த்தி- சம்ஸ்காரா
லலிதாம்பிகா அந்தர்ஜனம்- அக்னி சாட்சி
எம் டி வாசுதேவன் நாயர் – நல்லுகெட்டு
பூமணி- வெக்கை
இமையம்- கோவேறு கழுதைகள்
கண்மணி குணசேகரன்- அஞ்சலை
ஜி.நாகராஜன்- குறத்தி முடுக்கு
தஞ்சை பிரகாஷ்- கரமுண்டார் வூடு
எம்.வி.வெங்கட் ராம்- காதுகள்
சு.வேணுகோபால்- நுண்வெளிக்கிரணங்கள்
சா.கந்தசாமி-சாயாவனம்
சுப்ரபாரதி மணியன்- சாயத்திரை
அகிலன்- எங்கே போகிறோம்?
ஜெயகாந்தன்- யாருக்காக அழுதான்?, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
அசோகமித்திரன்- கரைந்த நிழல்கள், மானசரோவர்
நீல பத்மநாபன்- தலைமுறைகள்
ராஜாஜி- திக்கற்ற பார்வதி
ஜெயமோகன்- ரப்பர் மற்றும் அறம் கதைத் தொகுதி
எஸ்.ராமகிருஷ்ணன்- நெடுங்குருதி
புதுமைப் பித்தன்- சிறுகதைகளில் சாபவிமோசனம், கயிற்றரவு
ஆதவன்- காகித மலர்கள், இரவுக்கு முன் வருவது மாலை
மௌனி- சிறுகதைகளில் ‘சாவில் பிறந்த சிருஷ்டி’
சுந்தர ராமசாமி- ஜேஜே- சில குறிப்புகள்
சுஜாதா- இயந்திர மனிதன் மற்றும் மீண்டும் ஜினோ
ஸ்ரீவேணுகோபாலன்- திருவரங்கன் உலா மற்றும் மதுர விஜயம்
கிராஜநாராயணன்-கரிசல் காட்டுக் கடுதாசி, கோபல்லபுர கிராமம், கோபல்லபுர மக்கள்
கவிஞர்கள்- ஹிந்தியில் கபீர், மஹாதேவி வர்மா, தமிழில் பாரதியார், ந.பிச்சமூர்த்தி, பிரமிள், ஆத்மா நாம், யுவன், மனுஷ்ய புத்திரன், குட்டி ரேவதி, உமா மகேஸ்வரி, சல்மா, தேவதேவன், சங்கர ராம சுப்ரமணியன். ஆங்கிலத்தில்- கீட்ஸ், எலியட், எமிலி டிக்கின்ஸன், டென்னிஸன்.

கட்டுரைகள்- வெங்கட் சுவாமிநாதன், தமிழவன், அ.மார்க்ஸ், ஜெயகாந்தன், அசோகமித்திரன், இரா.வெங்கடாசலபதி, சமஸ், ஞாநி, பிரேம்-ரமேஷ், கௌதம சித்தார்த்தன், சின்னக் கருப்பன், யமுனா ராஜேந்திரன், பஞ்சாங்கம்.

(இதில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களின் வேறு நூல்களையும் நான் வாசித்திருந்தாலும் உடனடியாக நினைவுக்கு வரும் அடிப்படையில் பட்டியலிட்டிருக்கிறேன். )
என் வாசிப்பின் பெரும் பகுதி நான் சென்னையில் இருந்து டெல்லி பயணிக்கும் போது ரயிலிலும், அங்கே சாகித்ய அகாதமி நூலகத்திலும் நிகழ்ந்தன. ரயில் பயணத்தில் வாசித்து பெரிதும் என் பார்வை பாதிக்கப் பட்டது. நான் வாசித்தவற்றில் விடுபட்டவை நிறைய. அவற்றை இங்கே நினைவு படுத்தி எழுதத் துவங்கினால் எதேனும் ஒரு நிலையில் இந்தக் கட்டுரை நின்று விடும். குறிப்பாக லத்தீன் அமெரிக்க எழுத்துக்களில் நான் வாசித்தவற்றை உடனடியாக என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை.

வாசிப்பு என்பது எனக்கு என் வாழ்க்கையின் பெரும் பயனான பொழுது என்பதாகும். இருந்தாலும் நான் நாவல் அல்லது தொடர் ஆய்வுக்கட்டுரைகளில் ஆழும் போது எதையுமே வாசிப்பதில்லை.

எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இருவரும் தூங்குவார்களா இல்லையா என்று நான் வியப்பதுண்டு. அவ்வளவு வாசிப்பு.

மீண்டும் விஷயத்துக்கு வருவோம். வாசிப்பு என்பது வாசிப்பைப் பகிர்வது என்னும் மனித உறவுப் பரிமாற்றத்தில் முழுமை பெறுகிறது. மனம் விட்டு இருவர்
பேசும் போது தாம் படித்த ஒரு விஷயத்தைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள்.

எனது எளிய கருத்து இது.

நாம் ஒருவருடன் பேசுவதோ அல்லது ஊடகம் வழியே ஒன்றைக் கேட்பது அல்லது புரிந்து கொள்வதோ இரண்டுமே ஒன்று தான். ஒரு தயாரிப்பு கண்டிப்பாக அதில் உண்டு. ஆனால் நல்ல இலக்கியத்தில் நாம் ஒரு கதாபாத்திரத்தை அவன் அல்லது அவள் செய்வது சொல்வதைத் தாண்டிப் புரிந்து கொள்கிறோம். அவர்களுடன் பயணிக்கிறோம். மனித வாழ்க்கை தனி மனிதனுக்குக் குறுகியதே. ஆனால் வாசகனுக்கோ அவன் வாசிக்க வாசிக்க அது விரிந்து கொண்டே செல்கிறது.

தன் சகஜீவியை சமூக அதிகார அடுக்குகளில் எங்கேயோ பொருத்திப் பார்த்தே நம்மால் புரிந்து கொள்ள முடியும். அவர்களை அவதானிப்பதும், புரிந்து கொள்வதும் வம்பு அல்லது தன்னோடு ஒப்பிட்டுக் கொள்ளும் சில்லரைச் சுகத்தின் அடிப்படையிலேயே. பிறரின் வாழ்க்கையின் மூலம் மானுட வாழ்க்கையையே புரிந்து கொள்வது அதனாலேயே சாத்தியமில்லாததாக ஆகி விடுகிறது.

அசலான வணிக நோக்கற்ற இலக்கியத்தில் மானுட வாழ்க்கையைப் பற்றிய படைப்பாளியின் தரிசனமும், பிடிபடாத புதிர்கள் பற்றிய கேள்விகளும் நம்மை மனம் விரித்து மானுட வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் திசையில் இட்டுச் செல்கின்றன.

ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் கூர்மை, மரத்துப் போன மனித நேயப் புள்ளிகள் இதயத்தில் உயிர்ப்புடன் துடிக்கும் அனுபவம் இவை நமக்கு வாசிப்பு ஒன்றே வாழ்வின் உன்னதமான தருணம் என்று புரிய வைக்கும்.

அப்படி ஒரு வாசிப்பு அனுபவம் நிகழ்ந்த பின் அதைப் பகிரும் ஊக்கம் தன்வயமாக நிகழும். அப்போது மனம் விட்டுப் பேசும் தருணம் ஒன்றை மனம் எதிர் நோக்கும். இப்படிப் பட்ட தருணங்கள் குறைவதே வாசிப்புக் குறைவதற்கு முக்கிய காரணம் என்பது என் கருத்து. வாழ்க்கையின் அவசரம் இடையறா தொடர் நிகழ்வாக, தவிர்க்கவியலாத கட்டாயமாக சிறு நகரம் முதல் மாநகர் வரை விரவி விட்டது.

வாசிக்காதவர்களுக்கு என்ன இழப்பு அது என்னும் அனுமானம் கூட இருக்காது. ஆனால் வாசிப்பின் மகத்துவம் புரிந்தும் வாசிக்கக் குறைந்த வாய்ப்பே கிடைக்கும் அவஸ்தை மிகவும் வலி மிகுந்தது.

வாசிப்பு பற்றி நாம் பேசும் போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய வேண்டும். திரைப்படம் என்னும் ஊடகம் கண்டிப்பாக வாசிப்புக்கு இணையான அந்தஸ்தைப் பெறவே முடியாது. பல்வேறு பலவீனங்கள் காட்சி ஊடகத்துக்கு உண்டு. கற்பனையில் விளிம்பே இல்லாத சாத்தியம் எழுத்தில் மட்டுமே உண்டு. நல்ல சினிமா, கலை சினிமா , நுட்பமான சினிமா என்று புத்தகங்களுக்கு இணையாக சினிமாவைக் கொண்டாடுவது எஸ்.ராமகிருஷ்ணனும், சுப்ரபாரதிமணியனும். ஜெயமோகன் சினிமாவின் இடத்தை சரியாகப் புரிந்து வைத்துள்ளார்.

வாசிப்பின் அனுபவம் மிகவும் அந்தரங்கமானதும் ஆழ்ந்ததும் ஒப்பற்றதுமாகும். ஒருக்காலும் சினிமாவோ வேறு எந்தப் படைப்புமோ அதன் இடத்தைப் பிடித்துக் கொள்ளவே முடியாது.

வாசிப்பு அதாவது நல்ல புத்தகங்களின் வாசிப்பு உள்ளவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் வாழ்நாளில் பயனுள்ள பொழுதாக அதை மட்டும் இறுதி நாட்களில் நினைவு கூருவார்கள்.

(image courtesy: wiki)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s