எம்.எஸ்.சுப்புலட்சுமி – மாண்டலின் ஸ்ரீநிவாஸ்- இசையுலகில் பேரிழப்புகள்
“காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்’
கல்லும் கனியும் கீதம் (காற்றினிலே
பட்ட மரங்கள் துளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம் – நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம் (காற்றினிலே
சுனை வண்டுடன் சோலைக் குயிலும்
மனம் குளிர்ந்திடவும்
வான வெளி தனில் தாரா கணங்கள்
தயங்கி நின்றிடவும் – ஆ என் சொல்வேன்
ஆ என் சொல்வேன் மாயப் பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம் (காற்றினிலே
நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான் — காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம் (காற்றினிலே
பத்து வயதில் இந்தப் பாடலை முதன் முதலில் கேட்டு அப்படியே அதில் லயித்து விட்டேன். இன்று வரை இந்தப் பாடல் எம்.எஸ். அவர்களின் குரலில் அவ்வப்போது என்னுள் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்தப் பாடல் சற்றே வேகமான தாள கதியில் பாடப் படுவது. எனவே என்னால் பத்து வயதில் அதன் வரிகளை பிடித்துக் கொள்ள இயலவில்லை. டேப் ரிகார்டர் எங்கள் ஊர் போன்ற கிராமங்களுக்கு அதிசயமான ஒன்றாக இருந்த கால கட்டம் அது. எனக்கோ அதை முணுமுணுத்தாவது பார்க்க வேண்டும். எனவே என் அம்மாவை மிகவும் தொல்லை செய்ய அவர் அலுத்துக் கொண்டே எழுதிக் கொடுத்தார்.
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு தான் அவர் நடித்த மீரா படத்தைப் பார்த்தேன். அவர் என்னால் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பலராலும் அம்மாவாக மிகவும் நேசிக்கப்பட்டவர். அவர் காலமான போது நான் டெல்லியில் இருந்தேன். மிகவும் வருந்தினேன். அவரது பாடல்களை மற்றவர்கள் அனேகமாகத் துணிந்து பாட மாட்டார்கள். அப்படிப் பாடும் போதெல்லாம் கண்டிப்பாக வித்தியாசம் தெரியும். எம்.எஸ். மற்றும் பர்வீன் சுல்தானா இருவருமே வெகு அபூர்வமான கலைஞர்கள். அவர்களுக்குப் பின் வருவோர் அவர்களை வழிகாட்டியாக் எடுத்துக் கொள்ள நிறையவே அவர்களிடம் உண்டு. எம்.எஸ் பாடும் போது ‘பாவம்’, உச்சரிப்பு மற்றும் கணீரென அவரது குரல் இவை கேட்பவர்களை மெய்மறக்கச் செய்யும். பர்வீன் சுல்தானா குரலை கம்பி வாத்தியங்களில் சாத்தியமாகும் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி எதற்கும் கொண்டு செல்லும் அளவு அதைப் பாடம் செய்தவர். அவர் ஆலாபனைகளைக் கேட்காதவர் வாழ்க்கையில் பேரிழப்பு அடைந்தவர். ஐயமேயில்லை. அவர் இன்னும் இசைக் கச்சேரிகள் செய்து கொண்டிருப்பது மகிழ்ச்சியானது.
மாண்டலின் என்னும் மேலை நாட்டுக் கருவியில் கர்நாடக இசையை வெகு அருமையாகக் கொண்டு வரும் சின்னஞ்சிறு வயதினராகவே மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அறிமுகமானார். ஒரு முறை நேரில் அவர் இசையைக் கேட்டதாக நினைவு. அவர் ஒரு புதிய வாத்தியத்தைக் கையாளுபவராக அல்ல – வெகு லாகவமாக நன்றாகப் பழகிய வாத்தியத்தை இசைக்கும் திறமையுடன் அதைக் கையாண்டார். கர்நாடக சங்கீத உலகம் புதுமைகளுக்கு இடம் தராத ஒன்றாகவே அவரது காலத்துக்கு முன் இருந்தது. அதை மாற்றியவர் அவரே. பலருக்கும் அதை அவர் கற்றுக் கொடுத்தார் அதுவும் சிலருக்கு இலவசமாகவே என்பதைக் கேள்விப் பட்டது மனதை நெகிழ வைத்தது. இசைத் துறையினரானவராகவே அவரது மனைவியார் இருந்தும் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை என்பது மிகவும் வருத்தமளிப்பது. அவர் மிகவும் இள வயதில் மரித்ததும் தான். இன்னும் பல காலம் அவரது பங்களிப்பால் கர்நாடக சங்கீதம் மிகவும் பயன் பெற்றிருக்கும். அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி.
கலைகளில் இசைக் கலைஞர்கள் மட்டுமே ஒரு நாளில் பெரும் பகுதியை இசைப் பயிற்சி அல்லது கச்சேரியில் செலவிடுபவர்கள். அவர்களது உலகமே இசை தான். இடைவெளி விட்டால் குரல் மற்றும் பாடும் இசையின் தரம் இரண்டும் பறிபோவது உறுதி. தான் நேசிக்கும் கலைக்காகத் தன்னை அர்ப்பணிப்பது எல்லோருக்கும் அமைவதில்லை.
(image coirtesy:wiki)