குழந்தைத் தொழிலாளிகளில் அனேகர் கடத்தப் பட்டவரே
சுகிதா அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி பற்றிய விரிவான கட்டுரையை “தளிர்களின் காவலன் ” என்னும் தலைப்பில் உயிர்மை 2014 இதழில் எழுதியிருக்கிறார். கால்பந்து தயாரிப்பு முதல், தரை விரிப்பு, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, கண்ணாடி வளையல்கள், பட்டாசுகள் ,கல் குவாரிகள் என குழந்தைத் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டாத தொழிலே இல்லை. ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கால்பந்துகளை வாங்கும் முன் குழைந்தைத் தொழிலாளிகள் இதில் ஈடுபடுத்தப் படவில்லை என்பதை முன்னெடுத்தவர் சத்யார்த்தி. பல தாக்குதல்கள் அச்சுறுத்தல்களை மீறி அவர் இடைவிடாது குழந்தைகளை மீட்டார். அவரால் மீட்கப் பட்ட 83525 குழந்தைகளின் பின்னணியை ‘பசன் பசாவோ ஆந்தோலன்’ அமைப்பு தருகிறது. ஒப்பற்ற பணியாற்றிய அவரை ஊடகங்களும் அரசு இயந்திரமும் கண்டு கொள்ளாமல் இருந்தது மட்டுமல்ல இருட்டடிப்பு செய்தது அவை வணிக நிறுவனங்களின் கைப்பிடிக்குள் இருப்பதே காரணம்.
குழந்தைத் தொழிலாளிகளில் பெரும்பாலானவர் கடத்தப் பட்டு விற்கப் பட்டவரே. பாலியல் தொழிலுக்குத் தள்ளப் படும் பல பெண்கள் கடத்தப்பட்ட குழந்தைகளே. ஆயிரக்கணக்கில் மாதாமாதம் குழந்தைகள் கடத்தப் படுகிறார்கள். தமிழில் “ஆறு மெழுகுவர்த்திகள்’ என்னும் ஒரு படம் வெளியானது. அதில் ஜெயமோகனும் பங்களிப்பு செய்திருக்கிறார். அந்தப் படம் காண்போர் மனதைக் கலங்கடித்து விடும். குழந்தைக் கடத்தல் எந்த அளவு ஒரு பெரிய அளவிலான குற்றத் தொழிலாக ஒரு மைய அமைப்புடன் இயங்குகிறது என்பதை அந்தப் படம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. “ஏழாம் உலகம்” என்னும் ஜெயமோகனின் நாவல் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் இருண்ட உலகை நமக்கு உணர்த்துகிறது.
அடிப்படையில் கீழை நாடுகளில் குழந்தைத் தொழிலாளி என்பது ஒரு மிகவும் ஏற்கப் பட்ட நடைமுறை விஷயமாகி விட்டது. கோடிக்கணக்கில் குழந்தைத் தொழிலாளிகள் பெருகுவது அவர்களின் மனித உரிமைக்கு எதிரானது. வருங்காலத்தில் ஆரோக்கியமும், அறிவு வளர்ச்சியும் அவர்களுக்கு இல்லாமல் போவதால் இது தேசத்துக்கும் மிகவும் கெடுதி தரும் விஷயமே. சுகிதாவின் கட்டுரையிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் மற்றொரு விஷயம் விவசாயத்திலும் குழந்தைகள் மிகுந்த அளவு ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்பது. தேசத்தின் மிகப் பெரிய பலம் மனித வளமே. பிஞ்சுகளைக் கூலிகளாக ஆக்கி நாம் தேசத்துக்குப் பின்னடைவானதும் அவர்களது உரிமைக்கு எதிரானதுமான சுரண்டலையே செய்கிறோம்.