நவீன கவிதை பற்றிய புரிதல் – யுவன் கட்டுரை
நவீன கவிதை பற்றிய புரிதல் ஒரு வாசகருக்கு அமைவது தான். கவிதைகள் மீது அவர் கொண்டிருக்கும் காதலைப் பொருத்தது அது. வாசிக்க, வாசிக்க ஒரு கவிதையின் பல பரிமாணங்கள் பிடிபடும். கவிதை எந்த சன்னலைத் திறக்கிறது எந்த உலகைக் காட்சியாக்குகிறது அல்லது எந்த தரிசனத்தின் ஒரு சாயலை மட்டும் விட்டுச் செல்கிறது என்பதை வாசிக்க வாசிக்க ஒரு வாசகன் மேலும் மேலும் புதிராய் முதல் வாசிப்பில் தென்படும் கவிதைகளை விண்டு விளங்கி மேலும் வாசிக்கிறான்.
காலச்சுவடு நவம்பர் 2014 இதழில் யுவன் சந்திரசேகர் தேவதச்சனின் ஒரு கவிதையை வாசிக்கிறார்.
எப்பவாவது ஒரு
கொக்கு பறக்கும் நகரத்தின் மேலே
என்
கவசமும் வாளும்
உருகி ஓடும்
ஊருக்கு வெளியே.
தஞ்சாவூரின் அருகிலுள்ள வயல்வெளிகளில் எங்கும் தென்படும் கொக்குகள். அவை கூட்டம் கூட்டமாக, சிறு புழுக்கள் மீன்களைத்
தேடிப் பசுமையான வயல்வெளிகளுக்கு இன்னும் அழகூட்டும் வெண்மை வரிசையாய். ஆனால் ஒரு நகரில் அபூர்வமாகவே ஒருவனுக்கு கொக்கு காணக் கிடைக்கிறது இல்லையா? நகரின் இறுக்கமான கட்டாயங்களுடன் போராடி வாழும் ஒருவனுக்கு, கவசங்களும் வாளுமான கவனங்களும், கடுமையான வேலைச்சுமையும் இருந்து கொண்டே இருக்கும். கொக்கு கிராமத்து நினைவுகளை மீட்டெடுக்கும். ஒரு கணம் கவசமும் வாளும் இல்லாமல் உடுப்பு லேசாகி புத்துயிர் பெறும். நகரின் கவசங்கள் உருகி வெளியே ஓடி விட்டால்? கிராமத்தின் நெருக்கடி இல்லாத அவசரமில்லாத ஒரு சூழல் நம் வசமாகும் இல்லையா?
ஆனால் அப்படி உருகி ஓடப் போகிறதா? அல்லது இந்தக் கவிஞனாவது அந்த நகரத்தை விட்டு நீங்கி விடப் போகிறானா? இரண்டுமே நடக்கப் போவதில்லை? ஆனால் கொக்கின் சுதந்திரம் அவனுக்குத் தான் விட்டுக் கொடுத்துவிட்ட சுதந்திரங்களைப் பற்றிய ஆற்றாமையைத் தூண்டுகிறது. என் கவசமும் வாளும் என்பதற்குப் பொருள் வேறெதுவும் மாறாது. சில நொடிகள் என் கவசமும் வாளும் இல்லாமல் இருப்பது சாத்தியம் என்னும் ஆழ்ந்த வலியுடன் கூடிய பதிவு.
யுவன் புதுக்கவிதை வாசிப்பைத் தொடராக எழுதுகிறார். காலச்சுவடுக்கு நன்றி.
(image courtesy: wiki)