நவீனத் தமிழ்க் கவிதையில் செம்மொழிக் கூறுகள்- முருகேச பாண்டியன் கட்டுரை
உயிர்மை நவம்பர் 2014 இதழில், செம்மொழியான தமிழுக்கு உள்ள தனித்த சிறப்பியல்புகள் இவை என்று பாண்டியன் பட்டியலிடுகிறார்:
1.சங்கத் தமிழில் பல்வேறு இனக்குழுக்களின் பண்பாடு பற்றிய பதிவுகள்’
2.இரண்டாயிரம் ஆண்டுளாகக் காலந்தோறும் காத்திரமான படைப்புகள் தொடர்ந்து வருகின்றன.
3.பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இலக்கியம் பல தலைமுறைகளாகக் கருதப் பட்டு வருகிறது.
4.பிறமொழிகளை ஒப்பிடத் தமிழ்ப் படைப்புகள் தனித்தவை.
5.தொடர்ச்சியான இலக்கியப் பாரம்பரியம்,
செவ்விலக்கியப் படைப்புகளில் தொன்மையான ஒரு மையக் கரு மனிதர்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பு. சண்முகம் சரவணனின் நவீனக் கவிதையில் பாண்டியன் (துறவியின் இசைக் குறிப்புகள்) அதைக் காண்கிறார்:
ஆளரவமற்ற நீண்ட வெளி
பெருமரங்களின்
இசையில் அமைதி கொள்ள
நேற்றையும் நாளையும்
துறந்து அமைதியுற்றேன்
தமிழ் செவ்விலக்கியத்தின் தனித்துவம் எஸ்.வைத்தீஸ்வரனின் “நினைவுகள்” காதலைப் பதிவு செய்யும் விதத்தில் இவ்வாறு:
மலர் வாடிய பின்னும்
மணம் கமழ்கின்றது ஞாபகத்தில்
நீ மறைந்த பின்னும்
உன் காதல் என்னைத் தழுவிக் கொள்கிறது
காற்றைப் போல
சக்தி ஜோதியின் வரிகளில் காதல்:
ஓடும் நதியில் தவறி விழும் ஒற்றையிலையென
சலனப் படுத்துவதில்லை நீரின் போக்கினை
என்றறிந்திருந்த மனம் விம்மிக் கசிகின்றது
தாய்மைப் பண்பு செவ்விலக்கியத்தில் தொடங்கி நவீன கவிதையில்-
ஃபஹீமா ஜஹானின் ‘அழிவின் பின்னர்’ கவிதையில் இருந்து-
அந்த மனிதர்களைச் சபிக்கிறதோ
தனது கூட்டை எண்ணித் தவிக்கிறதோ
தாய்மையைப் பற்றிய கலாப்ரியா கவிதை வரிகள்:
அந்திக் கருக்கலில்
இந்தத் திசை தவறிய பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
செவ்விலக்கிய காலம் முதல் தொடரும், இலக்கியச் செறிவு- ரவிசுப்ரமணியனின் “பருகத் தெரிந்த சௌந்தர்யம்” கவிதையிலிருந்து-
மூங்கில் சதங்கையின் முதல் அசைவை
நீதான் துவக்கி வைத்தாய்
பின்
காற்று பார்த்து கொண்டது
கவிஞனின் நடுநிலைமை- மனுஷ்ய புத்திரனின் ‘அரசி’ கவிதையிலிருந்து-
அரசி எப்போதும் ஸ்தம்பிக்கும் நகரங்களை
மிகவும் நேசித்தாள்
ஸ்தம்பித்தல் சக்தியின் வெளிப்பாடு
பொதுமை என்னும் மரபில் நரனின் ‘சூரியச் சாறு’ கவிதை-
இரு மலைகளின் நடுவே மறையும் சூரியன்
ஒரு பீட்சா துண்டைப் போலுள்ளது.
றியாஸ் குரானாவின் ‘நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு’ கவிதையில் பண்பாட்டுக் கூறுகள்-
ஒவ்வொரு பயணியின் நெஞ்சிலும்
ஆறாத காயத்தின் வரலாறு
புதிதுபுதிதாய் எழுதப் பட்டுக் கொண்டே இருக்கிறது
உயரிய சிந்தனைக்கு உதாரணம் கரிகாலனின் ‘மின்னலின் தீண்டல்’
அலுப்பெனும் தீரா நோயின்
மருந்துடன் வருகிறீர்கள்
இலக்கியத் தனித்துவத்துக்கு உதாரணமாக அய்யப்ப மாதவனின் ‘பாடல் இசைக்கும் கூந்தல்’ கவிதையிலிருந்து-
இரவில் புரளும் கூந்தலில் பூக்கள்
தானாகவே பூக்கத் தொடங்கி விட்டன
முருகேச பாண்டியன் எடுத்தாண்டுள்ள கவிதைகள் ஆழமும் கலையுமற்றைவையாகப் போனது சோகமே. இருந்தாலும் சமகாலப் பதிவுகளை வாசித்து எடுத்தாள்வது மிகவும் அரிதாகி வருகிறது. உலக இலக்கியமோ இல்லை இந்திய மற்றும் தமிழ் இலக்கியமோ சமகால எழுத்தாளர்களை கவனிப்பு பெறச் செய்ய மூத்த எழுத்தாளர்கள் விரும்புவதே இல்லை. அந்த வெறுமையைப் போக்கும் கட்டுரை இது. நல்ல முயற்சி.
(image courtesy: wiki)