முற்பகல் ஆயுத விற்பனை செய்யின்?
பிற்பகல் ஐஎஸ் ஐஎஸ் வரும் என்று தமது கட்டுரையில் பதிவு செய்கிறார் எச்.முஜீப் ரஹ்மான் தீராநதி நவம்பர் 2014 இதழில். ஈராக்கில் சதாம் ஹூஸைனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக பல குழுக்களுக்கு அமெரிக்காவும் இங்கிலாந்தும் ஆயுதங்களை விற்பனை செய்தன. சிரியாவில் 2011ல் பஷார் அசத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் போது சன்னிப் போராளிகளுக்கு அமெரிக்கா ஆயுத உதவியைத் தந்தது. பல அரேபிய நாடுகள் பல குழுக்களுக்கு நிதி உதவி தருகின்றன. மறுபக்கம் சூபித்துவம் அமைதியை நாடுவது – சூபிகள் வெட்டும் கத்தரி போன்றவர் அல்லர். தைத்து ஒட்டும் ஊசிகளைப் போன்றவர் என்று குறிப்பிடுகிறார். வகாபிகள் என்னும் தீவிரவாதிகளே அமைதிக்கு எதிராக வேலை செய்ய மத உணர்வுகளைத் தூண்டுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
முஜீப் ரஹ்மான் சுதந்திர சிந்தனை கொண்டவர் என்பது அவரது கட்டுரையில் மோடி குறிப்பிட்ட ‘தீவிரவாதம் என்பது மனித குலத்துக்கே எதிரானது’ என்னும் கருத்தை ஏற்பதில் தென்படுகிறது.
மதத்தின் அடிப்படையில் ஒருவர் மதத்துக்கோ அல்லது அந்த மதத்தின் வழி நடக்கும் சமுதாயத்துகோ செய்யும் அதிக பட்ச சேவை அவர்களை நல்வழிப்படுத்தும் அம்சங்களை நினைவுபடுத்தி மக்களைப் பிளவு படுத்தும் கருத்துக்களை விட்டுவிடுவதே. மத நூல்கள் உலகின் மேம்பாட்டுக்கு ஒட்டு மொத்த வழிகாட்டிகளாக இருக்க முடியும் என்றால் உலகம் இன்று இவ்வளவு சுயநலமும் வன்முறையும் போரும் சுரண்டலும் நிறைந்ததாக உருவாகி இருக்காது. மதம் அறவழி சொல்லும் அமைதிவழியாக ஒரு வழிகாட்டி என்னும் வரையறைக்குள் மட்டுமே இயங்க முடியும். ஒரு மதம் உயர்ந்து ஆயுதம் ஏந்தி உலகை உய்விக்க இயலாது என்பதை யாருமே ஏற்பார்கள்.
வல்லரசு நாடுகள் என்றுமே உலகம் அமைதியாகவும் போரின்றியும் இருப்பதை விரும்பியதாக வரலாறு இல்லை. சித்தாந்தங்களின் அடிப்படையில் மத அடிப்படையில் சிறிய – பின் தங்கிய நாடுகள் பிளவு படும்போது அங்கே அமைதியை நிறுவ முன்னுரிமை கொடுக்காமல் ஆயுத விற்பனை அல்லது தன்னுடைய தலையீடு இவையே வல்லரசுகளின் கவனத்தைப் பெற்றன.
தனிமனிதன் ஆயுதம் வைத்திருப்பது – தாறுமாறாகப் பலரைக் கொல்வது அமெரிக்காவின் தலைவலிகளுள் ஒன்று. உலகமே ஆயுதப் போட்டியால் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிக்கான நிதியை அழிவு வழியில் செலவழிப்பதும் அமெரிக்க உட்பட்ட வல்லரசுகள் மனித குலத்துக்குத் தந்த ஒரு பெரிய சாபம். வணிக நிறுவனங்கள் மற்றும் விரல் விட்டு எண்ணக் கூடிய செல்வந்தர் வளரவும் கோடானு கோடி ஏழை எளிய மக்கள் நலியவும் உதவும் முதலாளித்துவக் கொள்கையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆயுதம் என்பது அதிகாரத்தின் அல்லது பலத்தின் அடையாளமா இல்லை அச்சத்தின் அடையாளமா? இந்தக் கேள்விக்கான பதிலைத் தம் வாழ்க்கையின் மூலம் உலகுக்கு அளித்தார் மகாத்மா காந்தி.
அமெரிக்கா உலகின் வில்லன் என்று நாம் முத்திரை குத்தவும் முடியாது. மனித உரிமைக்கும் சுதந்திர சிந்தனைக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் அவர்களது நாட்டில் மதிப்பு உண்டு. ஒரு நல்ல முன்னுதாரணம். சுதந்திர சிந்தனையும் கருத்துச் சுதந்திரமும் கூடவே கூடாது என்பதாலேயே கம்யூனிஸ கட்சி மட்டுமே ஆளும் என்னும் சீனா வடகொரியா போன்ற நாடுகள் சிந்தனையாளர்களின் மதிப்பை இழந்தன. ஆயுதங்களை மட்டுமே நம்பி தமது அரசுகளை நடத்துகின்றன.
உலகத் தலைவர்களால் உலகின் பிரச்சனைகளை திசை திருப்ப முடியும். தீர்த்து வைக்க முடியாது. சுதந்திர சிந்தனையும் , மனிதகுல நலம் விரும்பும் நேயம் உள்ள சிந்தனையாளர்கள் மட்டுமே ஆயுதம் ஏந்தி மதத்தின் பேராலோ அல்லது சித்தாந்தத்தின் பேராலோ உலக அமைதியையும் சுதந்திர சிந்தனையையும் சூறையாடுவோரை எதிர்கொள்ள முடியும். எவ்வளவு மெல்லிய குரலாயிருந்தாலும் மனித உரிமைக்காகவும் மனிதகுல மேன்மைக்காகவும் எழுப்பப் பட வேண்டும். மனித குல மேன்மை என்பது கோடிக்கணக்கில் உணவு, உடை, உடல் நலம், அடிப்படை உரிமைக்களுக்கு வழியில்லாதோரையும் சேர்த்து அனைவரும் மேம்படும் ஆகச்சிறந்த கனவு ஆகும். இந்தக் கனவு இல்லாதவர்களின் குரலே இப்போது மேலோங்கி இருக்கிறது. உலகின் எல்லாத் துன்பங்களுக்கும் இதுவே காரணம். எச்.முஜீப் ரஹ்மான் என்னும் சிந்தனையாளரின் கருத்துக்களைத் தந்த தீராநதி இதழுக்கு நன்றி.
(image courtesy:wiki)