குஷ்புவின் மன உறுதி
இந்தக் கட்டுரை தமிழக அரசியல் பற்றியதே அல்ல. அதற்கு ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். தொலைக்காட்சிகள் வேறு இரவு எட்டு மணியானால் சாமியாட்டம் ஆடுகின்றன. இன்று தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்தேன். ஒரே மேடையில் குமரி அனந்தனுடன் குஷ்புவுக்கும் அவர் சேர்ந்த கட்சி இடம் அளித்தது குஷ்புவின் மன உறுதிக்குக் கிடைத்த கௌரவம். அவர் சேர்ந்த கட்சியின் மிகவும் மூத்த தலைவருக்கு இணையான அந்தஸ்து அவருக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. இது அவர் தானே வென்ற ஒரு கௌரவம்.
பெண்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் அதாவது இந்திய அளவிலேயே பத்து பேர் கூடத் தேற மாட்டார்கள்- அப்படி வெகு சிலரே அரசியலில் எதிர் நீச்சல் போடும் திராணி இருந்தவர்கள். குஷ்பு தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அல்லர். மிகவும் தாமதமாகவே சொந்தக் குரலில் தமிழில் பேசத் துவங்கியவர். கும்பல் கூடும் என்றே அரசியல் கட்சிகள் அவரை பிரசாரத்தின் போது சேர்த்துக் கொள்வது. இதையெல்லாம் கடந்து தொடர்ந்து அரசியலில் ஈடுபடும் முனைப்புக்காக அவரைப் பாராட்டலாம்.;
ஆண் பெண் பழகுவது பற்றி அவர் கூறிய கருத்துக்கள் மிகவும் விமர்சிக்கப் பட்ட போது மனம் தளராமல் நெஞ்சுரத்துடன் நின்றார். பெண்கள் சமூகத்தில் எந்த இடத்திலும் நிலைக்கவோ அல்லது மேலே செல்லவோ தடைகள் ஆண்களால் செய்யப் படும். பல பெண்கள் மனம் நொந்து விலகி விடுவார்கள். குஷ்புவுக்கு மன உறுதி நிறையவே இருக்கிறது. தமது சொந்த வாழ்க்கையிலும் ஒரு கால கட்டத்தில் அவர் இந்த மன உறுதியால் நின்றவர். பின்னடைவுகளைக் கடந்து மேற்சென்றவர்.
அவருக்குக் கோயில் கட்டியது நம் இளைஞர்களின் மனமுதிர்ச்சியின்மையின் எடுத்துக் காட்டு. அது கேவலம். மறுபக்கம் இப்போது அவரது ஆளுமை குணங்களை இளைஞர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். இன்று அவரைப் பார்த்து இளம் பெண்கள் எந்தச் சோதனையிலும் நிமிர்ந்து நிற்கப் பழக வேண்டும்.
(image courtesy: face book)