காவியத் தலைவன் – மாறுவேடத்தில் வணிக சினிமா
ஜெயமோகன் இணைய தளத்தில் குறிப்பிட்டது ஒரு காரணம் மறு காரணம் நாடகக் குழுக்கள் பற்றிய படம் என்பது. இந்த இரண்டு காரணங்களால் நான் காவியத்தலைவன் சினிமாவை பார்க்க முடிவு செய்தேன்.
தமிழ் சினிமாவில் இப்போது மிகவும் வித்தியாசமான படங்களின் காலம். எனவே 1935 – 1940 என்று யூகிக்கக் கூடிய ஒரு கால கட்டத்தை அப்போது ஒரு நாடகக் குழுவில் நடந்த விஷயங்கள் என்னும் களன் கா.த. படத்தின் பெரிய பலம். இணையான மற்றொரு பலம் ஏ.ஆர். ரஹ்மானின் இன்னிசை. அந்தக் காலத்து மெட்டுகளில் நெஞ்சில் நிற்கும் இசை. பின்னணி இசை மிகவும் சிறப்பானது.
இந்த இரண்டு பலங்களைத் தவிர பிற எல்லாமே பலவீனங்களே. பிருத்திவிராஜ் தவிர எல்லா கதாபாத்திரங்களுமே மிகவும் நல்ல, மிகவும் தூய மிகவும் நல்லெண்ணம் உள்ளவர்கள். சித்தார்த் நல்லவர், வெள்ளை உள்ளம் கொண்டவர், தீயோருக்கும் நன்மை செய்பவர், எதையும் விட்டுக் கொடுக்கும் தியாகி. இதுவே மிகவும் மிகையான அலுப்பூட்டுவதான அம்சம். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலவீனம்.
நான் சிறிய பாத்திரங்களில் நாடகங்களில் நடித்தவன். நாடகத்தில் ஒருவர் வர முடியவில்லை என்றால் அவரது பாத்திரத்தை மற்றொருவர் செய்வது சர்வ சகஜம். இதை ஒரு பெரிய பிரச்சனையாகக் காட்டும் அளவு நாடகங்கள் அந்தக் காலத்தில் இல்லை. தேவையானால் ஒரு கதாபாத்திரத்தை விட்டு விடுவோம். குருவின் கைப்பிடிக்குள் அந்தக் குழு இருப்பதாகக் காட்டுகிற போது ஒரு பெண்ணைப் பகடி செய்யும் சித்தார்த்தின் ;சுய கற்பனை எப்படி மன்னிக்கப் பட்டது? ஒரு அரண்மனை போன்ற பங்களாவில் இரவில் வெகு எளிதாக சித்தார்த் சென்று ஜமீன் மகளை சந்தித்து வருகிறார். இப்படி எப்படி வேண்டுமானாலும் ஜோடிக்கப் பட்ட சம்பவங்கள்.
ஆறுதல்கள் – ஒன்று சித்தார்த்தின் முதிர்ச்சி மிக்க நடிப்பு. இரண்டு- காந்தியடிகளின் பேச்சைக் காட்டி இருப்பது மட்டுமல்ல நல்ல கலை இயக்குனர். அவர் 40களுக்கு நம்மைக் கொண்டு செல்வதில் வெற்றியடைந்திருக்கிறார்..மற்றது படத்தின் திருப்பு முனைகளும் விறுவிறுப்பும். பழைய காலப் படத்தில் காட்டப் பட்டுள்ள இந்த விறுவிறுப்பு ஒரு சாதனை தான்.
இரண்டு கதாநாயகிகள். ஏகப் பட்ட கனவுப் பாடல்கள். பரிதாபப் படுங்கள் என்று மிகையாய்த் சித்தரிக்கப் பட்ட காட்சிகள். வணிகப் படமே இது. மாறு வேடத்தில் கலைப் படம் போன்ற ஒரு ஜாலம் காட்டுவதில் இயக்குனருக்கு வெற்றி. இவ்வளவு நீள வசனங்கள் எழுதாமல் படம் எடுக்க அவர் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் சினிமா சற்றே மாறி வருகிறது.
(image courtesy: wiki)