காடு-சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இதழ்
தடாகம் வெளியீடாக வருவது ‘ காடு’ இதழ். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று தனியாக சிலர் இருப்பது ஏன்? சுற்றுச்சூழல் இயல்பாக எப்படி இருக்கும்? அது எந்த அளவு மாசு பட்டுச் சீரழிந்துள்ளது? நாம் அனைவரும் இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்து கொள்ள வேண்டும். எது இயற்கையின் இயல்போ அதை ஆவணப்படுத்தி வைக்க வேண்டி வந்துள்ளது. அரிய பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அழிந்து வருகின்றன. காடுகளும்தான். ஆனால் மனித வாழ்க்கை என்பது ப்சுமையும் பசுமை சார்ந்த உயிரினங்களும் (நம்முடன்) சேர்ந்து வாழ்வதாலேயே முழுமையடைகிறது.
தொழில் வளர்ச்சியுடன் இரண்டு விஷயங்கள் இணைந்துள்ளன இல்லையா? ஒன்று வேலை மற்றும் தொழில் வாய்ப்பு – மற்றது வாழ்க்கை வசதி மேம்படுவது. உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என்னும் வலியுறுத்தல் ஐக்கிய நாடுகள் மூலம் முன்னெடுக்கப் படும் போதெல்லாம் இந்தியா உட்பட வளரும் நாடுகள் தொழில் வளர்ச்சியை விட்டுக் கொடுத்து மாசுக் கட்டுப்பாட்டை முன்வைக்கத் தயாராக இல்லை. தம்மைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதே அவர் தரப்பு வாதம்.
ஒருவர் ஒரு மாதம் முழுவதும் தினசரி வெவ்வேறு துணி தான் உடுத்துவேன் என்றாலே என் கருத்தில் அது ஆடம்பரமே. ஆனால் ஆறு மாதம் வரை துவைக்கவே தேவையில்லை என்னுமளவு நடுத்தர மக்களே துணியை வாங்கி அடுக்கி மகிழ்வது இன்றைய நிலை. சாயத் தொழில் அந்த அளவுக்கு அதிகரிக்கிறது. விளைவு விளை நிலங்களை வாழ வைக்கும் நிலத்தடி நீரை சாயம் விஷமாக்கி விடுகிறது. தோல் பொருட்களைப் பயன்படுத்துவது பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது இவையும் வாழ்க்கை முறை சம்பந்தப் பட்டவையே. இப்படியே பார்த்துக் கொண்டே போனால் மாமிச உணவு சாப்பிடுவதே தவறு என்று வாதிடும் சிந்த்னைப் பள்ளி உண்டு. சுற்றுச் சூழலில் நாம் இயற்கையை அழித்து வாழவே பழகி இருக்கிறோம். இது ஒரு கசப்பான உண்மை. எந்த அளவு நம் வாழ்க்கை முறைய மாற்றிக் கொள்ள முடியும் என்பது நம் முன் உள்ள சவால். மிதமான ஒரு துய்ப்பு என்னும் எல்லைக் கோட்டை நாம் வைத்துக் கொண்டால் படிப்படியாக சூழல் மாசும் அழிவும் கட்டுப்படும்.
‘காடு’ இதழில் இலை, மரப்பட்டை அல்லது கல்லின் நிறத்துக்கு மாறும் ஊர்வன பறப்பனவான ஓணான்கள், பச்சோந்திகள் பல்லிகள், பூச்சிகள் இவை பற்றி ‘உருமறைத் தோற்றம் என்னும் கட்டுரையில் நாம் தெரிந்து கொள்கிறோம். ‘ஓங்கு மால் வரையாடு’ என்னும் ஆட்டினத்தைச் சேர்ந்த அரிய வகை விலங்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பட்டது என்பது ஒரு ஆறுதல் தரும் செய்தி.
தோடர்கள் பற்றிய பல தகவல்கள் நாம் அறியாதவை. அவர்கள் சைவ உணவே சாப்பிடுபவர்கள். தடை செய்யப் பட்ட ராட்சச வலைகள் மற்றும் ராட்சதப் படகுகளால் நாம் கடல் வாழ் உயிரினங்களைஅழித்து வருகிறோம் என்பதை ‘காணாமல் போகும் கடல் வளம் கட்டுரையில் தெரிந்து கொள்கிறோம். பிளாடிபஸ் பரிணாமத்தில் வித்தியாசமான ஒரு பாலூட்டி என்பதை ஒரு கட்டுரை விளக்குகிறது. பூச்சிக் கொல்லிகள் நிறைந்த தாவரங்களை உண்ணும் விலங்குகளின் இறைச்சியை உண்ணும் வல்லூறுகள் இறந்து வல்லூறு இனமே அழிவின் விளிம்புக்குத் தள்ளப் பட்டு வருகிறது.
சுற்றுச் சூழல் பற்றி எல்லோருக்குமே அக்கறை வேண்டும். ஏனெனில் அது எல்லோரையுமே பாதிப்பது. வரும் தலைமுறைக்கு இயற்கை வளம் எதாவது விட்டு வைக்கப் படுமா என்பதே இன்று மிகவும் கவலை அளிப்பது.
தடாகம் அமைப்பின் பணி பாராட்டுக்குரியது.