புத்தாண்டு வரவு
சத்யானந்தன்
புத்தாண்டு
இரவு மணி இரண்டு
விரையும் வாகனங்கள்
அதிரும் பட்டாசுகள்
உற்சாகக் கூக்குரல்கள்
எதையும் கண்டு களிக்காது
கருமமே கண்ணாய்
குளிரிலும் வியர்வை வழிய
மூன்றடிச் சிறுவன் மற்றும்
அரும்பு மீசை ஒருவன்
மாநகர நடைபாதை
ஓரமெல்லாம் காலிப் போத்தல்கள்
கணக்கில்லா பிளாஸ்டிக் பைகள்
போத்தல்களின் மூடிகள்
பிளாஸ்டிக் கோப்பைகள்
அட்டை டப்பாக்கள்
எலும்புத் துண்டு
கறித்துண்டுகள் மீந்த
பிரியாணிப் பொட்டலக் குப்பைகள்
தன் உயர மூட்டை
இரண்டை சாலையோரம்
கிடத்தி
மூன்றாம் மூட்டை
அள்ளும் போது
காயலாங்கடை தரப்போகும்
வரவை எண்ணி
முகம் மலர
வாண்டு கேட்டான் விடலையை
“அண்ணே அடுத்த மாசம்
எப்போ இப்புடி ராத்திரியெல்லாம்
கொண்டாடுவாங்கோ?”
“மாசாமாசம் வராதுடா இது”
என்று அவன் தலையில் தட்டினான்
பல குப்பிகளில்
மீந்தவற்றை அருந்திய
போதையுடன்
விடலை.
(image courtesy:sumit4all.com)
Advertisements