தகவல் தொழில்நுட்ப வேலையின் சவால்கள் – ஜெயமோகன் கட்டுரை
ஒரு தந்தையின் குரலாகக் கவலையுடனும் மறுபக்கம் தைரியமாகச் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்னும் கருத்தை முன் வைத்தும் ஜெயமோகன் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அவரது அறிவுரைகளை இளைஞர்கள் அனைவருமே படிக்க வேண்டும். அவர்களுக்குத் தொழிற்சங்கம் வேண்டும் ஆனால் அது அரசியல் தலையீடு அற்றதாக இருக்க வேண்டும் என்னும் ஜெயமோகனின் எதிர்பார்ப்பு நியாமானது. ஆனால் எந்த அமைப்புமே அரசியல் தலையீடு இல்லாமல் இயங்க இயலாத சூழல் இப்போது. இடதுசாரித் தொழிற்சங்கங்கள் எல்லாமே வீண் என்று கூற முடியாது. ஒரு காலத்தில் நிறுவனத்துக்கே வழி காட்டும் அளவு தீர்க்கமான சிந்தனை உள்ள தலைவர்கள் இருந்தார்கள். இப்போது ஜாதி அடிப்படையில் தலைமையைக் கைப்பற்றுவோர் இடதுசாரித் தொழிற்சங்கங்களில் ஊடுருவி விட்டார்கள். அது கூடப் பரவாயில்லை. ஆனால் ஊழியர் நிறுவனம் இருவரது நலம் இணையும் புள்ளியைக் கண்டறிந்து பேச்சுவார்த்தை நடத்தும் தலைவர்கள் இப்போது தேவை. நேர்மறையான சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் தலைவர்கள். தகவல் துறையில் தொழிற்சங்கம் கட்டாயம் தேவை. வேலை நேரமே வரையறுக்கப்படாமல் உடல்நலன் பாதிக்குமளவு ராப்பகலாக இளைஞர்கள் உழைக்க அதற்கு இணையான ஊதியம் கண்டிப்பாக இல்லை.
அவரது கட்டுரையில் விடுபட்டுள்ள சில விஷயங்களை நான் குறிப்பிடுவேன். இவை ஏற்கனவே நான் எழுதியவை தான்.
1. தனது மகன் அல்லது மகள் பொறியியலில் கணிப்பொறி சம்பந்தமாகப் படிக்க வேண்டும் – கல்லூரி நேர்முகத்தில் வேலைக்குத் தேர்வாக வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர் பெரும்பான்மையினர். ஆனால் அந்த மாணவர்களுக்கோ அந்த வேலை தனக்கு ஆர்வமுள்ளதா என்னும் அடிப்படை அனுமானம் இருப்பதே இல்லை. கிடைத்த வேலை என்று எடுத்துக் கொண்டு தன்னால் ஆர்வமாகப் பணியாற்ற முடியாத போது மன உளைச்சலும் வேலை இழப்போமோ என்னும் அச்சமுமே எஞ்சுகின்றன. என்றுமே வேலை வாய்ப்புள்ளவை அடிப்படைக் கட்டுமானத்துக்கு உதவும் படிப்புகள். Core எனப்படும் Mechanical, Chemical, Electrical மற்றும் Civil படிப்புகள். இந்தப் படிப்புக்களின் வேலை வாய்ப்பு வளர்ந்து கொண்டே போகும். திடீர் வேலை இழப்புக்கு வாய்ப்பே இல்லை. இதைப் பெற்றோர் மாணவர் இருவருமே கருத்தில் கொள்ள வேண்டும்.
2. பெரு நிறுவனங்களைக் குறை கூறலாம். ஆட்குறைப்புச் செய்வது தவறு என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் அவர்கள் தமக்குக் கிடைக்கும் ஒப்பந்தங்களை வைத்தே ஆட்களின் எண்ணிக்கையை முடிவு செய்கிறார்கள். உலக அளவில் பெரிய ஒப்பந்தங்களைக் கைப்பற்றப் போட்டாப் போட்டி நிலவுகிறது. உலக அளவில் பொருளாதாரம் இப்போது மந்த நிலையில் தான் இருக்கிறது. அதன் தாக்கம் இந்தத் துறையில் கட்டாயம் தெரியும். வியாபாரப் போட்டி மற்றும் வருமானம் குறைவது இரண்டுமே தவிர்க்க இயலாதவை.
3. என் அலுவலகத்தில் இருந்து அதிகாரியாக ஓய்வு பெற்ற ஒருவர். கிராமப்புறப் பின்னணி உள்ளவர். தலித். அவரை ஒரு நாள் சந்தித்த போது தான் ஒரு BPO வைத்துப் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதாகக் குறிப்பிட்டார். சமூகத் தடைகள், வயது, அரசாங்க வேலைப் பின்னணி இவற்றையெல்லாம் தாண்டி அவர் சாதித்து வருகிறார். ஏன் தாமே ஒரு நிறுவனம் தொடங்குமளவு இளைஞர்கள் தன்னம்பிக்கையும் – தொழிலில் நிபுணத்துவத்தையும் வளர்த்துக் கொள்வதில்லை?
4.சமூகத் தளங்கள் Face Book, Twitter WhatsApp, Linkedin என்று பல ஊடகங்களின் வழியாக நல்ல அனுபவசாலிகள்- திறமைசாலிகளுடன் தொடர்பு வைக்க இளைஞருக்கு வாய்ப்பு இருக்கிறது. எத்தனை பேர் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள்? முன்னேறுவோருடன், திறமைசாலிகளுடன் தொடர்பு இருப்பதை விடப் பெரிய அதிர்ஷ்டம் எதுவும் கிடையாது.
5.கல்வி என்பது வேலை கிடைப்பதுடன் முடிவது கிடையாது. இன்றைய தொழில் நுட்பம் என்ன என்று எந்தத் துறையானாலும் ஆர்வமுடன் அதைக் கவனிக்க வேண்டும். தேவையான அளவு மேற்படிப்புக்கு முயல வேண்டும். வேறு வழியே இல்லை.
6. நான் எவ்வளவோ எடுத்துரைத்தும் என் மகன் அரசு வேலை தேடவே விரும்பவில்லை (அவன் ரசாயனத்துறையில் பொறியியல் பட்டதாரி). பல இளைஞர்கள் இப்படி இருப்பதை நான் பார்க்கிறேன். இது தவறான போக்கு. அரசு வேலையில் நிறைய சவால்கள் உண்டு. அந்த வேலையே இளப்பம் என்னும் கருத்து முற்றிலும் தவறானது.
7.பயனுள்ள இணைய தளங்களைத் தொடங்கி நடத்தலாம். சுயவேலை வாய்ப்பாக அதைச் செய்ய முடியும். இது ஒரு உதாரணமே. தகவல் தொழில் நுட்பத்தில் பல நிறுவனங்களை அணுகி அவர்களுக்கு ஏற்ற மென்பொருளைச் செய்து தரும் வாய்ப்பு இருக்கிறது. Games, Apps என்னும் வகை மென்பொருட்களை உருவாக்கும் வாய்ப்புக்கு முடிவே இல்லை.
8. நீண்ட கால சிந்தனை, உழைப்பு இவை இளைஞர்கள் பட்டியலில் இல்லை. கணினி விளையாட்டு, வீண் இணைய உலா, திரைப்படம், ‘மால்’களில் பொழுதுபோக்கு இவை ஊறுகாய் போல இருந்தால் பரவாயில்லை. தீனியே இவைதான் என்பதே பெரிய சோகம்.
நம் இளைஞர்கள் தான் நாளைய இந்தியா. அவர்கள் தன்னை வலுவானவர்களாக உயர்த்திக் கொள்ள நாம் நினைவூட்டிக் கொண்டே இருக்கத்தான் வேண்டும். ஜெயமோகனுக்கு நன்றி.
(image courtesy:Jeyamohan.in)