முடிவிலியின் கண்கள்- யுவனின் நவீன பின் நவீன விளிம்பு நாவல்
காலச்சுவடு ஜனவரி 2015 இதழில் யுவன் சந்திரசேகரின் குறு நாவல் வந்துள்ளது. நவீனத்துவத்தின் விளிம்பில் பின் நவீனத்துவக் கூறுகளுடான குறுநாவல் இது. கதை சொல்லி அத்தியாயங்களின் இடைப்பட்டு கதையை விளக்கும் தொனியில் எழுதப்பட்டுள்ளது.
ஒரு நாவல் அல்லது குறு நாவலின் அடுத்தடுத்த அத்தியாயங்களின் இடைப்பட்டு ஊடாடும் சரடு ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். பின் நவீனத்துவ நாவலுக்கு இந்தச் சரடை எதிர்பார்க்காது நாவலின் எதேனும் ஒரு புள்ளியில் துவங்கி அதன் உள்ளீட்டை அடைய விரும்பும் வாசகனே தேவை.
யுவனின் நாவலில் ஊடாடும் சரடு நம் வாழ்க்கையில் சில காலம் நெருக்கமாயிருந்த ஒரு நண்பன் அல்லது உறவு பற்றிய நினைவுகளும் அவர்கள் பற்றி அப்போது விடை தெரியாமலிருந்த கேள்விகளும். காதல் வயப்பட்டு குடும்பத்தை விட்டு வெளியேறும் உறவுக்கார இளைஞன், நக்ஸல்வாதிகளுடன் சேர்ந்து விட்ட உறவுக்கார இளைஞன், கல்லூரி நாட்களுக்குப் பின் தொடர்பில்லாமல் போன நண்பன் இந்த நான் கு கதாபாத்திரங்களும் நவீனத்துவத்துக்குள் அடங்குகிறார்கள். ஒரு ஓவியத்தை முத்தமிட்டு அதனுள் கலந்து கரைந்து போன இளைஞனும், தான் படிக்கும் நாவலில் தான் படித்து முடித்த அத்தியாயங்கள் காணமற் போவதில் துவங்கி இறுதியில் நூலகக் காப்பாளர் அப்படி ஒரு நூலே அங்கே இருந்ததில்லை என்று கொடுக்கும் அதிர்ச்சியில் உறையும் இளைஞனும் பின் நவீனத்துவத்தை நினைவூட்டும் கதா பாத்திரங்கள்.
நவீனத்துவம் பின் நவீனத்துவம் இவை இரண்டிலும் மாய யதார்த்தம் பயன் படுத்தப் படுவதற்கு ஒரு காரணம் உண்டு. நாம் தூக்கத்தில் வியர்த்து வெலவெலத்து எழும் அளவு ஒரு அச்சம் தரும் அனுபவத்தை அடைகிறோம் இல்லையா? அது நினைவுலகில் விடுபட்டுப் போன ஒரு அனுபவத்தின் விளைவு இல்லையா? கனவை விளைவித்த அந்த இயலாமைச் சூழல், அதன் வலி, அதன் உண்மையான பின்னணி இவை இலக்கியத்தின் முக்கியமான பதிவுகள் ஆகியே தீர வேண்டும்.
என் ஏக்கம் என் ஆற்றாமை என் கையறு நிலை என் கசப்பு என் வலி இவற்றின் வலிமூலம் சமுதாயத்தின் அதிகார அடுக்குகளில் தான் ஒளிந்துக் கொண்டிருக்கிறது. அந்த அடுக்குகள் மாறுமா இல்லையா என்பது அரசியல். அவை மனித உறவுகளில் உண்டாக்கும் சிக்குகள், பின்னல்கள் மற்றும் முடிவற்ற சங்கிலித் தொடர் போன்ற ஏற்றத் தாழ்வு இடமாற்றங்கள் இவையே இலக்கியத்தின் குறி.
நவீன பின் நவீனத்துவ சாத்தியங்களை யுவன் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். ஆனால் முடிவிலியாக இருப்பது மனித உறவுகளின் புதிர்கள் என்கிறார் யுவன். காலமே முடிவிலி இல்லையா?
(image courtesy:veoh.com)