கைதிகள் மனம் திருந்த ஊக்கப் படுத்தும் தமிழகக் காவல்துறையின் நட்புக் கரம்
குடியரசு தின விழாவில் சிறையில் இருந்து விடுதலையாகித் திருந்தி, சாதாரண வாழ்க்கை வாழும் பல முன்னாள் குற்றவாளிகள் கௌரவிக்கப் பட்ட செய்தியை ஊடகங்களில் பார்த்தேன். சென்னை , திருச்சி உட்படப் பல சிறைச் சாலைகளில் நடந்த விழாக்களில் , திருந்தி வாழும் பலர் இப்போது சிறைகளில் இருப்போர் முன்பு மேடையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டனர். ஏடிஜிபி என்னும் மாநில அளவான பொறுப்பில் உள்ள திருபாதி என்னும் உயர் அதிகாரியின் வழிகாட்டுதலில் இது நடந்திருக்கிறது.
இது மிகவும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் நல்ல முயற்சி. சிறைகள் பலவற்றில் பல திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் தரப்படுகின்றன. ஒரு கைதி வெளியே வரும் போது வேலை கிடைப்பது சந்தேகம் தான். ஆனால் தானே செய்யக் கூடிய தொழில்கள் எதையேனும் கண்டிப்பாகச் சிறிய அளவில் தொடங்கி நடத்த முடியும்.
சிறைச்சாலைகள் அதன் அதிகாரிகள் ஒரு தீவு போல ஊழலில்லாமல் இருக்க முடியாது. குற்றவாளிகளை நல்வழிப்படுத்தாத அதிகாரிகள், அவர்களுக்கு கைபேசி போன்ற தடுக்கப் பட்டவற்றைத் தருவோர் பற்றிய செய்திகளையும் ஊடகங்களில் பார்க்கிறோம்.
கைதிகள் நல்வழிப்படுத்தப் பட வேண்டும் என்னும் முனைப்புடன் அவர்களுக்கு நன்றாகத் திருந்தி பிறரைப் போல வாழும் வாய்ப்பு உண்டு என்னும் நல்ல செய்தியைத் தரும் காவல்துறையின் இந்த முயற்சி மிகவும் பாராட்டப் பட வேண்டியது.
கிரண் பேடி இந்த திசையில் காவல்துறையை ஈடுபடுத்திய முதல் அதிகாரி. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திகார் சிறையில் உள்ள கைதிகள் திருந்தி மனம்மாறி வாழும் பல ஆன்மிக, யோகா வகுப்புகள் மற்றும் திறன்களுக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்து ஒரு நல்லுதாரணத்தை அவர் கொடுத்தார். இன்று அவரது அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்து நான் கட்டுரை எழுதியிருக்கிறேன். அது வேறு. அவரது நல்ல பணிகளை மறக்க முடியாது.
தமிழகக் காவல்துறைக்கு நம் பாராட்டுகள்.