சமூக வலைத்தளங்கள் வழியில் செய்தித் தாள்கள்
சமூகவலைத்தளங்கள் மற்றும் ‘வாட்ஸ் அப் ‘ போன்ற தொடர்பு செயலிகள் இவற்றில் பல சில்லறை விஷயங்கள் எளிதாகப் பலரின் கருத்தைக் கவர்வதைக் காணலாம்.
சினிமா வதந்திகள் , துணுக்குகள், நகைச்சுவை, அரசியல் என்று அதைப் பிரிப்பவர் எந்த மனநிலையில் இருந்தாலும் ரசிக்கவோ மனதில் கொள்ளவோ எதுவுமே இல்லாமல் இருக்கும். நோக்கம் உடனடி கவனம் பெறுவதே. இவற்றை உடனடியாக வெட்டித் தள்ளா விட்டாலும் கவனிக்காமல் விட்டு விடுவோம் . இணையத்தில் இது போன்ற பரிமாற்றங்கள் சகஜமே.
நாளிதழ்கள் இதே வழியில் செல்வது மிகவும் கவலையளிப்பது . நாளிதழில் ஒருவர் எதிர்பார்ப்பது காலையில் நேரமில்லாவிட்டாலும், அலுவலகத்தில் உணவு இடைவேளையிலோ அல்லது இரவு படுக்கும் முன்போ கட்டா யம் படிக்க வேண்டும் என்னுமளவு , சாரமும் சமூக அக்கறையும் உள்ள கட்டுரைகளே.
தமிழ் ஹிந்து நான் மிகவும் பாராட்டும் ஒரு நாளிதழ். அதிலேயே நரேந்திர மோடியின் சொக்காய் பற்றி விலாவாரியான ஒரு பதிவைப் பார்த்து மிகவும் வருத்தப் பட்டேன். அவரது பொருளாதார, அரசியல், வெளியுறவுச் செயற்பாடுகளை, கொள்கைகளை விமர்சித்து அல்லது ஆதரித்து எழுதுவதே ஆரோக்கியமானது.
குறுகிய காலப் பயன்கள், வர்த்தக நோக்குகளில் விரசத்தையும் தாண்டிச் செல்வது ஆகிய மட்டமான காரியங்களைச் செய்ய தொலைக்காட்சிகள், வாரப் பத்திரிக்கைகள் இருக்கவே இருக்கின்றன.
ஒரு நல்ல நாளிதழ் இப்படி இறங்குவது கவலை அளிப்பது. நரேந்திர மோடி, சோனியா இவர்கள் நாட்டின் எதிர்காலத்துக்காக உழைக்கும் கடமையுள்ளவர்கள். நாலாவது தூணான பத்திரிக்கைகள் குறிப்பாக தினசரிகள் இவர்களின் பணிகளை மற்றும் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து விமர்சிக்க வேண்டும். நடை உடை பாவனை சொந்த வாழ்க்கை பற்றியெல்லாம் எழுதித் தரம் தாழக் கூடாது.
(image courtesy: google)