என்னை அறிந்தால் திரைப்படம் – சமஸ் கட்டுரை எழுப்பும் கேள்விகள்


Yennai_Arindhaal

என்னை அறிந்தால் திரைப்படம் – சமஸ் கட்டுரை எழுப்பும் கேள்விகள்

தமிழ் ஹிந்து இதழில்  வெளி வந்த கட்டுரைகளில் 10.2.15 அன்று வெளியான சமஸ் கட்டுரை ‘எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும் கௌதம்‘ முக்கியமானது. பழிக்குப் பழி என்னும் மையக்கருவுடன் வெளிவரும் படங்களின் தாக்கம் குறித்துக் கவலை கொள்வது. கட்டுரையின் பின்வரும் பகுதி மிகுந்த சமூக அக்கறை உள்ளது:

“கௌதம்… எல்லோரிடத்திலும் அன்பு இருக்கும். அவ்வாறே வெறுப்பு, வன்மம், இயலாத்தன்மை, கருணை, அற்பத்தனங்கள், மகோன்னதங்கள்… எல்லாமுமே எல்லோரிடத்திலுமே கலந்திருக்கும். ஒரு நல்ல கலைஞனின் வேலை சமூகத்தில் உள்மனதில் புதைந்திருக்கும் கருணையை வெளிக்கொணர்ந்து விளிம்பு நிலையில் இருப்பவர்கள் மீது அவற்றை விரவச் செய்வதுதான். வெறுப்பையும் வன்மத்தையும் விதைப்பது அல்ல.

உச்சக் காட்சியில், சத்யதேவ் தன் காதலி கொல்லப்பட்டது போலவே விக்டரைப் பிச்சுவா கத்தியால் சீவித்தள்ளும்போது அரங்கம் அதிர்கிறது. உணர்ச்சி மேலிடக் கத்துபவர்களில் குழந்தைகளும் இருக்கிறார்கள். அவர்களில் எவரேனும் சின்ன வயது சத்யதேவ்போல தந்தையை இழந்தவர்கள் இருந்தால் என்னவாகும்?

கௌதம் கொஞ்சம் யோசிக்க வேண்டும்!”

சமஸின் கட்டுரை அடிப்படையில் கௌதம் மேனன் படங்கள் முன் வைக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் குற்ற வாளிகளாகவும், குற்றம் செய்த அவர்கள் கொல்லப் பட வேண்டியவர்களாகவும் சித்தரிக்கப் படுவதே. நாம் அந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதி எழுப்பும் ஒரு கேள்வி நம்முள் எழுப்பும் பல கேள்விகளே இந்தக் கட்டுரையின் மையமாகும்.

மிருக வதைச் சட்டம் பற்றிய புரிதலில் இருந்தே நாம் துவங்க வேண்டும்.

மாமிசம் சாப்பிடுவது குற்றமில்லை. அதாவது தனது உணவுக்காக ஒரு விலங்கு அல்லது பறவையைக் கொல்வது குற்றமில்ல்லை. ஆனால் அந்த மிருகம் அல்லது பறவையைத் துன்புறுத்துவது மிகப் பெரிய குற்றம்.

இதன் சாராம்சம் என்ன? மனித இனம் பண்பாட்டில் வெகு தூரம் வந்து விட்டது. குரூரம் எந்த வடிவிலும் மனித இனத்திடம் இருக்கக் கூடாது என்பதே.

இதன் பின் விளைவாகத்தான் சர்க்கஸ், சினிமா இவற்றில் மக்களின் கேளிக்கைக்காக வாயில்லா ஜீவன்களை வதைப்பது நிறுத்தப் பட்டது. வேட்டையாடுவது இன்று கடுமையாக தண்டிக்கப் படும்.

இதற்கு அடுத்த நிலையில் தான் ‘மரண தண்டனைத் தடுப்பு’ உலக அளவில் வலியுறுத்தப் படுகிறது. மரண தண்டனை என்பது ஒரு குரூரமே. குற்றம் தண்டிக்கப் பட வேண்டியதே. ஆனால் அது நீண்டகால சிறைவாசம் அல்லது தனிமைச் சிறை வாசம் என்று இருக்கலாமே ஒழிய ஒரு அரசாங்கமும் சமூகமும் சேர்ந்து ஒருவனைத் தூக்கிலிடுவது குரூரம்.

மரண தண்டனை என்னும் அச்சுறுத்தல் தேவை என்று வாதிடும் எழுத்தாளர்களே உண்டு. பாலியல் குற்றங்களுக்கு மரணமே சரியான பதிலடி என்னும் கருத்தை முன் வைப்போரே பெரும்பான்மையினர்.

மீண்டும் மிருகவதை பற்றித் தான் பேச வேண்டும். மஞ்சு விரட்டு அல்லது சர்க்கஸ் அல்லது திரைப்படக் கேளிக்கைக் காட்சி என மனிதனின் ரசனைக்காக மிருகங்களிடம் குரூரம் காட்டுவது பண்பட்ட மானுட சமுதாயத்துக்கு அழகல்ல. அது மிருகத்தனமானதே. அதை விட மோசமானது ஒரு மனிதனின் மரணத்தை எல்லோரும் ஏற்று நிறைவேற்றுவதாகும்.

சரி வன்மம் பற்றிய சமஸ் கட்டுரையுடன் பொருந்தும் நம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

சமஸ் கட்டுரை நம் மனதுள் எழுப்பும் மிக முக்கியமான ஒரு விஷயத்தை இப்போது கையில் எடுப்போம்.

சுமார் பத்தாண்டுகளாக கௌதம் மேனன் என்னும் இயக்குனர் இயக்கிய மூன்று போலீஸ்காரர் படங்களை மையமாக வைத்து கட்டுரை எழுதிய சமஸ் தினந்தோறும் கோடிக்கணக்கான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் காணும் தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டார்.

குடும்பப் பெண்கள் எவ்வளது சதிகாரிகளாக, வன்மம் கொண்ட விலங்குகளாக, பழிவாங்கும் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப் படுகிறார்கள். மாமியார், மாமனார், மைத்துனர், மருமகள், அண்ணன், தங்கை, அக்காள், நண்பன், நண்பனின் மனைவி, கணவன், கணவனின் நண்பன், சக ஊழியர், வாடிக்கையாளர் என மரியாதையும் பிணைப்புமாக உள்ள எல்லா உறவுகளும் கொச்சைப் படுத்தப் படும் விரசம் ஏறத்தாழ எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகின்றன.

நல்ல பெண்களே நாட்டில் இல்லையோ என்று மனம் வெதும்பும் அளவு இவை மட்டமான கதைப்பிரதிகளை மையமாகக் கொண்டுள்ளன. அன்றாடம் தினசரிகளில் நாம் காணும் குற்றச் செயல்களில் கூட தொலைக்காட்சித் தொடர்களில் வருமளவு மட்டமான குரூரமான செயல்கள் இல்லை.

எனவே நாம் குரூரத்தை ரசிக்கப் பழகி விட்டோம். கற்பனை வளமெல்லாம் குரூரத்தில் புதிய வகை, புதிய செய்கை, புதிய மனவக்கிரம் என்னும் திசையில்தான் செல்கின்றன.

திரைப்படமும் தொலைக்காட்சியில் வருகிறது. தொலைக்காட்சித் தொடரும் வீட்டுக்குள்ளேயே தொலைக்காட்சியில் வருகிறது. சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரும் பார்க்கிறார்கள்.

நாம் மனிதநேய மாண்புகளை இழந்து விட்டோம். அதை மீட்டெடுக்கும் முதல் அடியை எடுத்து வைக்க யாருமே இல்லை. எழுத்தாளர்களுக்குத் தம் பிம்பத்தை பிரம்மாண்டமாகக் காட்ட அதைக் கட்டமைக்கவே கவனம் அதிகம்.

சமூக ஆர்வலர்கள் தரமான வாசிப்பை விழையும் பண்பாளர்கள் மீண்டும் மீண்டும் சமூக தளங்களில் நாளேடு மற்றும் அச்சு ஊடகங்களில் குரூரமில்லாத புதிய தலைமுறையை உருவாக்கும் நம் பொறுப்பை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது ஒன்றே வழி.

சுற்றுச் சூழல், சமூக நீதி, மனித உரிமை எனப் பல முக்கிய விஷயங்களை தம் கட்டுரைகளில் அலசும் சமஸ் சமூகத்தின் மனசாட்சி போன்றவர் அவர் பணி தொடரட்டும்.

(image courtesy:wiki)

About தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in Uncategorized and tagged , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s