நவீனக் கவிதைகளுக்கான இடம்- ஜெயமோகனின் மனத்தடைக்கு எதிர்வினை
சமீபத்திய பேட்டி ஒன்றில் நவீனக் கவிதை காவியங்களுடன் ஒப்பிட இரண்டாமிடமே பெறும் என்னும் ஜெயமோகனின் பதிவைக் கீழே காண்போம்:
18. மொழியின் உச்ச வெளிப்பாடு கவிதை. எந்த ஒரு மொழியிலும் கவிஞனே எழுத்தாளனுக்கு மேல் உயர்ந்தவனாய்க் கொண்டாடப்படுகிறான். (இரவு நாவலில் வரும் கவிதைகள் தவிர்த்து) நீங்கள் ஏன் கவிதை ஏதும் எழுதுவதில்லை?
பதில்: மொழியின் உச்சவெளிப்பாடு கவிதை அல்ல, காவியம்தான். இன்றைய கவிதை ஒரு முழுமையனுபவத்தை அளிப்பதில்லை. அது ஒரு துளியில் வாழ்க்கையை நோக்கி அமைகிறது. ஆகவே அது குறைபாடு கொண்டது. நவீனக் கவிதையின் இந்தத் துளித்தன்மை அதன் பலம். அதன் பலவீனமும் அதுவே. வரலாற்றை,பண்பாட்டை, மானுட அகத்தை நோக்கி எழுதும் எழுத்தாளனுக்கு அது ஆழ்ந்த போதாமையுணர்வை அளிக்கும்
இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான நாவல்கள் பெரும்பாலும் கவித்துவத்தால் ஆனவையே. பாஸ்டர்நாக் சொன்னார் இருபதாம் நூற்றாண்டில் கவிஞன் எழுதவேண்டியது நாவலையே என்று. கவிஞரான அவர் டாக்டர் ஷிவாகோ எழுதி அதனூடாகவே அறியப்படுகிறார். நான் கவிதைகள் எழுதினால் அது ஒரு நாவலின் பகுதியாகவே இருக்கும். என் வரையில் கொற்றவை, நீலம் இரண்டும் தமிழின் எந்த கவிஞரின் மொத்தக் கவிதைத் தொகுதிகளைவிடவும் கவிதைகளைக் கொண்டவை.
அவரது இந்தக் கருத்து முதல் முறையாக அவரால் பதிவு செய்யப் படுவது அல்ல. ஏற்கனவே கவிதை என்னும் வடிவம் மற்றும் நவீனத்துவம் குறித்த அவரது மனத்தடைகளை அவர் பதிவு செய்துள்ளார்.
ஜெயமோகனின் சமீபத்திய பேட்டி (21.3.15) இது. தற்செயலாக அதற்கு சில வாரங்கள் (15.2.15) முன்பு தான் புனை கதையை ஒப்பிட கவிதையின் மகத்துவம் பற்றி எழுதி இருந்தேன். அதன் ஒரு பகுதி இது :
புனைகதையில் உள்ள கற்பனையும் வாழ்க்கை பற்றிய தரிசனமும் குறுகலானவை.தான் சார்ந்த சமுதாயம் மற்றும் அது தனது என்று பெருமிதம் கொள்ளும் வரலாற்றை ஒட்டியவை. புனை கதையின் ஒரே பலம் ஒரு கதாபாத்திரத்தை அல்லது வாழ்க்கையைச் சித்தரிப்பதற்கான விரிந்த படுதா.
ஆனால் கவிதையின் கற்பனையின் விரிவிற்கு ஒரு எல்லையே கிடையாது .கவிஞன் எடுத்துக் கொள்ளும் களன்கள் காட்சிகள் மற்றும் படிமங்கள் விதங்களில் மற்றும் தரிசங்களில் இயற்கை, தத்துவங்கள், மானுடத்தின் கனவுகள், மானுடத்தின் கையறு நிலைகள், சுயம் மற்றும் மயக்க நிலை என எத்தனையோவற்றைத் தொட்டுச் செல்லும்.
கவிஞனின் மிகப்பெரிய பலம் அவனது கற்பனையின் விரிவும் வீச்சும். பலவீனம் அவனால் புனைகதை எழுதுபவர்கள் போலக் கும்பலின் நடுவே குதூகலிக்க முடியாது. புனைகதை எழுதுவோருக்கு நிறையவே கும்பல் தேவை. அவர்கள் தம் எழுத்தை பிரபலப் படுத்துவது எளிது.
கவிதையின் சொல்லாடல் வாழ்க்கையின் எல்லாத் தோற்றங்களையும் தாண்டிய தரிசனம். அது கொண்டாட்டங்கள் அறியாத மோனத்தில் இருந்து வருவது. பலரும் ஏற்ற அவலங்களை ஆற்றாமையுடன் கூர்மையாகப் பதிவு செய்பவை கவிதைகள். புனைகதையை வாசித்தபின் நாம் சிந்திப்பது கதை உண்டாக்கிய தாக்கத்தை ஒட்டியது. ஆனால் கவிதையில் நம் சிந்தனை இது நாள் வரை நாம் காணாத கோணத்தில் காணும் நிகழ்வுகள் காட்சிகள். நாம் திறக்கவே யத்தனிக்காத கதவுகளைத் திறப்பதோ அல்லது கடப்பதோவானது கவிதையின் வீச்சு.
————————————————————
புனைகதை மற்றும் கவிதை இரண்டும் கைவருவது வெகு அபூர்வம். அப்படி ஒரு முக்கியமான ஆளுமையை நவீனக்கவிதையில் நாம் அடையாளம் காண வேண்டுமென்றால் யுவன் சந்திரசேகர் நல்ல உதாரணம்.
ஒரு கவிஞர் தமது புனைவை கவிதை என்னும் வடிவத்தில் அல்லது புனைகதை என்னும் வடிவத்தில் படைப்பது தற்செயலாய் அல்ல. தமது கற்பனையில் தாம் காணும் தரிசனம் எந்த வடிவில் வாசகனைச் சென்றடைய வேண்டும் என்னும் தேர்வே.
புனை கதை எழுதுகிறவர்களுக்குக் கவிஞர்கள் மீது பொறாமையும் கவிஞர்களோடு ஒப்பிட ஒரு தாழ்வுணர்ச்சியும் இருப்பது இயல்பே. அதை மறைக்க அவர்கள் செய்பவை மேலும் அவற்றை வெளிப்படுத்தவே செய்கின்றன.
ஒரு கவிதை நூறு வார்த்தைகளுக்குள் திறக்கும் வாழ்க்கையின் இருண்ட பகுதிகளின் இறுக்கமாக மூடிய கதவுகளை. ஆனால் அது பல நூறு பக்கங்களில் ஒரு நாவலுக்குச் சாத்தியமாகாமயே போகலாம்.
கவிதை இலக்கியத்தின் ஆகச்சிறந்த அடையாளம் என்பது இலக்கியவாதிகள் எல்லோருக்குமே புரிந்த ஒன்று தான். இலக்கியத்தின் கலையம்சம் மிகுந்த மிளிருகிற அடையாளமும் கவிதையே. இலக்கியம் என்னும் கோயிலின் சிற்ப நுணுக்கமெல்லாம் கவிதையில் காணப்படும்.
எழுத்தாளர்கள் பலருக்கும் கலைகளின் மீது ரசனை அதிகமிருப்பதில்லை. அது குறித்த வருத்தமும் அவர்களுக்கு இருப்பதில்லை. கவிதைமீது பிடிமானம் இல்லாமல் போவதற்கும் இந்த ரசனைக் குறைவே காரணம்.
கலைகளுடன் ஒப்பிடத்தக்க உயிர்ப்பும் அசலின் பெருமிதமும் கொண்டது கவிதை. நவீன ஓவியம் மிக முக்கியமான கலையாகும். நவீனத்துவம் பின்நவீத்துவம் இவற்றைப் புரிந்து கொள்ள நவீனக் கவிதையும் நவீன ஓவியமும் தரும் அனுபவங்களுக்கு இணை வேறு ஏதுமில்லை. நவீன ஓவியத்தை ரசிக்க நமக்கு கண்காட்சிகளுக்குப் போன பிறகு பல முறை போன பிறகு நம் மன இறுக்கம் – அதாவது பார்வை பழக்கப் பட்டிருக்கும் குறுகிய நோக்கு மாறவே பலகாலமாகும்.
அந்த மரத்துப் போன கற்பனையற்ற தட்டை நோக்கு நெகிழ்ந்த பின் நாம் ஒரு ஓவியனின் தூரிகை நம்மை இட்டுச் செல்லும் கற்பனைப் பெருவெளியை நாம் வெவ்வேறு பரிமாணங்களில் கண்டு ரசிப்போம்.
இந்த இணைய தளத்தில் Category கவிதை என்று தேடினால் என் கவிதைகள் வாசிக்கக் கிடைக்கும். இந்தக் கட்டுரையை எழுதும் தகுதி எனக்கு இருப்பதைக் கண்டிப்பாக என் கவிதைகள் உறுதி செய்யும். அந்தக் கவிதைகளைத் தவிர்த்து முள்வெளி என்னும் நாவல் இதே தளத்தில் உள்ளது. அதன் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு கவிதை உண்டு. 24ம் அத்தியாத்தில் உள்ள கவிதையுடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தம்:
பூக்கள் ஓர் நாள் இதழ்கள்
சிறகுகள் என்று விரித்தன
வானமெங்கும் வண்ணமயமானது
பிரம்மாண்டமான நவீன ஓவியமாய்
பிணந்தின்னிக் கழுகுகள் வல்லூறுகள்
திசையறியாது தரை இறங்கின
சில நொடிகளில் கிரகணம் போல்
சூரியன் ஒளிந்து கொண்டது
பறவைகள் அச்சத்தில்
சலசலத்து மரங்கள் கூடுகள்
பொந்துகளில் ஒடுங்கின
மொட்டுகள் மட்டுமிருந்த
செடி கொடிகளில்
வண்டுகள் மோதி மயங்கி
விழுந்தன
தெருவில் ஆர்ப்பரித்த
பிள்ளைகள் மனமின்றி
வீடு திரும்பினர்
சில நிமிடங்களில்
மெல்ல கதிரவன்
ஒளி தென்பட்ட போது
தரையெங்கும் கருகிய
மலர்கள் உதிர்ந்து கிடந்தன
மேலும் மேலும் குப்பையாய்
அன்று தான் பூக்கள்
பறத்தல் அன்னியமென்று
தெளிந்தன
(image courtesy:photobucket)