சமூகத்தில் எழுத்தாளனின் இடம்


426715_340028782686979_1116474517_n

சமூகத்தில் எழுத்தாளனின் இடம்

தமிழ் ஹிந்துவில் ஞாயிறு தோறும் ‘சொல்லத் தோணுது’ என்னும் பத்தியை தங்கர் பச்சான் எழுதி வருகிறார். சாருநிவேதிதா இந்தப் பத்தியை ஒட்டியே சில கேள்விகளை எழுப்பித் தமிழில் எழுத்தாளனின் இடம் என்ன? என்ன என்பதை சமீபத்தில் ஒரு கட்டுரையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். அதன் ஒரு பகுதி கீழே:

——————————————————————————————————————————-
உங்களுக்கெல்லாம் சம்பளம் கோடிகளில். ஆனால் இங்கே எழுத்தாளர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கோபி கிருஷ்ணன் என்று ஒரு எழுத்தாளன் இருந்தான். க்ரியா, நக்கீரன், பாக்கெட் நாவல் என்று பல இடங்களில் வேலை பார்த்தான். கடைசியில் அவனால் எங்கேயும் நிலைக்க முடியவில்லை. எனக்கு அவனை மிக நன்றாகத் தெரியும். குடும்பத்தை நடத்துவது அவனுடைய மனைவி. அவன் என்னிடம் சொன்னதுண்டு. மாசம் ஐநூறு இருந்தால் போதும்; பிழைத்துக் கொள்வேன். மாதாந்திர செலவுக்கானது அந்தப் பணம். சிகரெட்டுக்கும் டீக்கும். அவனுடைய கதையை எடுத்துக் கொண்டு பிச்சைக்கார ஐநூறு ரூபாய்க்காக ஒவ்வொரு பத்திரிகையாக அலைந்திருக்கிறேன். தர்மு சிவராமு எந்த வேலையும் செய்யாமல் நண்பர்களின் உதவியிலேயே வாழ்ந்து செத்தான். மற்ற எழுத்தாளர்கள் அத்தனை பேரும் ஏதோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்தே வாழ்ந்தார்கள். வண்ணதாசனும் கலாப்ரியாவும் வங்கிகளில். வண்ணநிலவன் துக்ளக் அலுவலகத்தில். பூமணி ஒரு அரசு அலுவலகத்தில். நீங்கள் சோற்றுப்பாட்டுக்கு ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டா ஒளி ஓவியம் செய்கிறீர்கள்? வேறொரு அடிமை உத்தியோகம் பார்த்துக் கொண்டா ஆவேசக் கட்டுரை எழுதுகிறீர்கள்?

எனக்கு நேற்று ராயல்டி ஸ்டேட்மெண்ட் வந்தது. நீங்கள் குடும்பத்தோடு இரவு உணவுக்குப் போனால் எவ்வளவு பில் வருமோ அவ்வளவுதான் என் வருடாந்திர ராயல்டி தொகை. தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்தேன். நிறைய வேலை பாக்கி இருக்கிறது. அதனால் மல்லாக்கப் படுத்துக் கொண்டு காறித் துப்பிக் கொண்டேன். கூலியே இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கிறோம் தங்கர். இங்கே எங்களுடைய இடத்தைப் பிடுங்கி எழுதிக் கொண்டு, உங்கள் எழுத்தைப் படித்து யாரும் தெருவில் இறங்கிப் போராடவில்லை என்று எழுத உங்களுக்கு எவ்வளவு தில் இருக்க வேண்டும்? இந்த ’தில்’லை நான் சினிமாவில் இருப்பவர்களிடம் மட்டுமே பார்க்கிறேன். காரணம், தமிழர்கள் உங்களை கடவுள் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். அதுதான் உங்களுக்கு அந்த ’தில்’லைக் கொடுக்கிறது. உங்களிடம் – அதாவது, சினிமா கலைஞர்களிடம் – உள்ள அதிகாரம் பற்றி என்றைக்காவது நீங்கள் யோசித்துப் பார்த்ததுண்டா? நினைத்தால் நீங்கள் முதல்மந்திரியோடு பேசலாம். ஒரே ஒரு படம் எடுத்து விட்டால் போதும். அது ஓடியதா இல்லையா என்பது கூடத் தேவையில்லை. பருத்தி வீரன் எடுத்தார். அடுத்த கணமே அவர் தெருவில் இறங்கிப் போராடினார். தமிழகத்தின் சே குவேரா. எழுத்தாளன் அப்படி இறங்கினால் சந்தேகக் கேஸில் போட்டு சூத்துக் கறியை அறுத்து விடுவார்கள். எங்களுக்கு இங்கே அடையாளமே இல்லை. இவ்வளவு சலாம் வரிசை எடுக்கிறீர்களே, ஜெயமோகன் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? அவர் எழுதிய அளவுக்கு இந்த உலகத்திலேயே எந்த எழுத்தாளனும் எழுதியது இல்லை. காசு? எல்லாம் ஓசி. இணையத்தில் ஓசியில் எழுதுகிறார். ஆனாலும் அவர் சினிமாவுக்கும் எழுதுவதால் பணம் வருகிறது. எஸ்.ராமகிருஷ்ணனை அன்றொரு நாள் தருண் தேஜ்பாலுக்கு அறிமுகம் செய்த போது இவர் 150 புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றேன். தருண் மிரண்டு போனான். அந்த அளவுக்கு இங்கே எழுதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் காசு? பிரபஞ்சன் என்னை நக்கல் செய்தார். நான் வாசகர்களிடம் பிச்சை எடுக்கிறேனாம். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த போது தேவைப்பட்ட ஐந்து லட்சத்தையும் கொடுத்தது ஒரு இயக்குனராம். எப்படி இருக்கிறது பாருங்கள்! என்னைப் பிச்சைக்காரன் என்று சொன்னவரின் நிலை அது! ஞாநி தான் முதலில் இதைக் குமுதத்தில் எழுதினார். சாரு ஒரு இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று. என் பெயரைப் போடாமல் கூட இருந்திருக்கலாம். அது முக்கியம் இல்லை. பெயரைப் போடாவிட்டாலும் ஆள் யாரென்று தெரியாதா? இப்போது ஞாநிக்கு சனி திசை போல. அவரே எனக்கு மாசம் 40,000 ஆகிறது, என்ன செய்வது என்று தெரியவில்லை என்று இணையத்தில் எழுதியிருக்கிறார். என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று நக்கல் செய்தவருக்கு அந்த நிலை. புரிகிறதா தங்கர், நான் என்ன சொல்ல வருகிறேன் என்று? ஞாநி 40 ஆண்டுகளாக பத்திரிகைகளில் சமூக நீதி குறித்து எழுதி வருகிறார். அவருக்கே இதுதான் நிலை. பிரபஞ்சன் 50 ஆண்டுகளாக எழுதுகிறார். அவருக்கும் இதுதான் நிலை. சுஜாதா எழுத்துலக ரஜினி. இல்லையா? அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த போது கையில் காசு இல்லாமல் இயக்குனர் மணி ரத்னம் தான் 50,000 ரூ தந்தார் என்று பத்திரிகைகளில் படித்தேன்.
——————————————————————————————–

சாருவின் ஆதங்கத்தைக் கண்டிப்பாக நாம் பகிர்ந்து கொள்கிறோம்.

மறுபக்கம் எழுத்தாளனுக்கு இணையாகப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் பலரின் கதியும் இதுவே தான். நாட்டுப்புறக் கலைஞர்கள், நவீன ஓவியக் கலைஞர்கள், நவீன நாடகக் கலைஞர்கள், இசைக் கலைஞர்களில் நாதசுவர வித்துவான்கள் இவர்களின் நிலையும் மிகவும் மோசமானதே.

எழுத்தாளனின் பங்களிப்பு இவர்களின் கலையை விட ஆழ்ந்தது என்பது வேறு. தமது தொழிலின் மீது உள்ள ஈடுபாட்டில் இவர்கள் எழுத்தாளனை விட எந்த விதத்திலும் குறைந்தவர்களில்லை. இந்தப் புள்ளியை மையமாகக் கொண்டே இந்தக் கட்டுரை மேற்செல்கிறது.

தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகள் தமிழ் தங்கள் உயிர் என்று பறைசாற்றித் துவங்கினார்கள். இன்று தமிழ் நாட்டின் நாட்டுப் புறக் கலைகளுக்கு அவர்கள் தொலைக்காட்சிகளில் அனேகமாக இடமே இல்லை என்று கூறி விடலாம்.

எழுத்தாளனுக்கும் கலைஞர்களுக்கும் உரிய உயரிய இடத்தைக் கொடுக்காத ஒரு சமூகம் பண்பாட்டில் பின்னோக்கியே செல்கிறது. கலை, இலக்கியம் இவை பண்பாட்டின் முக்கிய அம்சங்கள்.

இழிவான இடம் தானே சமுதாயம் தந்தது என்பது ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை கலைஞனுக்கு. உதாசீனம் சிறிய கோடாக ஆகுமளவு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் பெரிய கோடுகளாக நீள்கின்றன. ஈடுபாட்டின் காரணமாக வயிற்றுப் பாடும் வறுமையும் ஒரு பொருட்டே இல்லை அவனுக்கு.

தன் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே மிகவும் குறைந்த இடைவெளி உள்ள ஒரு எழுத்தாளனுக்கு சமூகத்தில் அவலங்கள் தன் சொந்த சோகங்களை விடவும் மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கின்றன.

அவன் வாழ்க்கைத்தரம் அவனை வாட்டுகிறது. அதற்கு இணையாக சமூகத்தின் வெறுமையும் குரூரமும் அவனை பாதிக்கின்றன.

ஆத்மாநாம் உயிர்நீத்ததும் அந்த வெறுமையாலேயே. கவிஞர்களை ஒப்பிட புனைகதை எழுத்தாளர்களுக்குப் புறவுலகம் தெளிவாகத் தென்படுகிறது. கவிஞனுக்கு வளம் தந்தாலும் வதைத்தாலும் புறவுலகின் பரிமாற்றங்கள் அன்னியமானவையாகவே நின்று விடுகின்றன.

இசையில் பக்கவாத்தியக்காரர், பாடகர்களில் புகழ் பெறாதோர் இவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஒன்று செய்து விட்டு இசையே வாழ்க்கை என்று இருக்கிறார்கள்.

எழுத்தாளனுக்குத் தமிழ்ச் சமூகம் தந்துள்ள இடம் மோசமானது தான். ஆனால் அவனை அது காயப் படுத்துகிறதே ஒழிய முடப்படுத்துவதில்லை. சினிமாக்காரர்களில் தங்கர் பச்சான் இலக்கியப் பின்னணியும் படப்பிடிப்புக் கலைத்தேர்ச்சியும் கொண்டவர். அவர் பத்தியில் பல பகுதிகள் அவருக்கு நாட்டு நடப்புத் தெரியவில்லை என்பதையே காட்டுகின்றன. அவர் சினிமாவின் பாலைவனச்சோலைதான் .

எழுத்தாளன் சாதாரண மனிதனே. எப்படியோ போராட்டங்களை எதிர்கொண்டு எழுதிக் கொண்டே தான் இருப்பான். தாக்குப் பிடிக்கும் ஆன்மீக பலம் அவனுக்கு நிறையவே உண்டு.

எழுத்தாளர்களுக்கு (வாசிப்புக்கு என்றும் கொள்ளலாம்) முக்கியத்துவம் தரும் சமூகம் பண்பாட்டுத் தளத்தில் உயர்கிறது. எழுத்தாளர்களின் பங்களிப்பு – சிந்தனையாளர்களின் பங்களிப்பு- கலைஞர்களின் பங்களிப்பு மகத்துவமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சமுதாயத்தில் ஒரு எழுத்தாளனுக்கு நிகரானவர் அவனை விட உயர்ந்தவர் யாருமே இல்லை என்று கூற முடியுமா? கண்டிப்பாக அவனை விட உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். சமுதாய நலனுக்காக சமுதாய சீர்திருத்துக்காக கல்லடி சொல்லடி தாங்கிப் பணி புரிந்து சமுதாயத்துக்கு- வரும் தலைமுறைக்கு நிலையான நன்மைகளை விட்டுச் சென்ற பெரியவர்களே அவனை விடக் கண்டிப்பாக உயர்ந்தவர்கள்.

பகத்சிங், நேதாஜி, காந்தியடிகள், அம்பேத்கர், காமராஜர் அரசியல் தளத்தில், ராமானுஜர், நாராயண குரு ஆன்மீகத்தில். பெரியார், ராஜா ராம் மோகன்ராய் ஆகியோர் சமுதாய சீர்திருத்தத்தில். வினோபா பாவே, ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் ஒருங்கிணைந்த சமுதாயத்துக்கான பணியில் (inclusive society) இன்று அன்னா ஹஸாரே ஊழலை எதிர்க்கும் பேரியக்கத்தில் – இப்பெரியோர்கள் சாமானியனின் வாழ்க்கைத் தரம் சிந்தனைத் தரம் விடுதலை உணர்வு இவற்றிற்காகப் பாடு பட்டார்கள். இவர்கள் இந்திய வரலாற்றின் மீது செய்த நேர்மறையான தாக்கம் ஈடு இணையற்றது. எந்தக் கவிஞனும் எழுத்தாளனும் இவர்களுக்கு ஒரு படி கீழே தான்.

சமகாலத்தில் இந்தியாவை ஆட்டிப் படைக்கும் மிகப் பெரிய தீமை ஊழல். இதை எதிர்ப்போர் மற்றும் வருங்காலக் குழந்தைகளுக்காக இன்றைய சுற்றுச் சூழலைப் பேணுவோர் இவர்கள் ஆற்றும் பணி பல நூற்றாண்டுகளுக்குப் பலன் தருவது.

எழுத்தாளனுக்கு ஒரு பீடம் தந்த காலம் கற்காலம். எழுத்தாளன் கற்பனையும் சிந்தனையும் தன் இயல்பென்றும் அது சோறு போடாது என்றும் அறிந்தும் தன் இயல்பல்லாத ஒன்றாக இருக்க முடியாமல் தன் சுயத்தை இழக்காதவன். அதற்கான போராட்டத்தையும் வலியையும் எப்போதும் சுமப்பவன்.

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in தனிக் கட்டுரை and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s