தமிழ் ஹிந்துவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி
எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, ஜெயமோகன் மூவரும் தமிழின் சமக்காலத்தில் தீவிரமாக இயங்கும் மூன்று முக்கியமான இலக்கிய ஆளுமைகள். எஸ்.ரா மூவரில் அவரது ஆரவாரமற்று இயங்குதலுக்காகவும் எளிய தொனிக்காகவும் நம்மால் நேசிக்கப்படுபவர். எழுத்தாளனுக்கான பீடத்தை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. உலக இலக்கியம் மற்றும் தமிழ் இலக்கிய வாசிப்பில் அவர் கடுமையான உழைப்பையும் அளப்பரிய ஈடுபாட்டையும் வைத்தவர்.
”நெடுங் குருதி” என்னும் அவரது நாவலே அவரது படைப்புக்களீல் நான் வாசித்ததாகும். அவர் எந்த இனக்குழுவைப் பற்றி அந்த நாவலைப் பின்னியிருந்தாரோ அவர்களின் வாழ்க்கைமுறை பற்றிய இன்னும் ஆழ்ந்த சித்திரம் கிடைத்திருக்க வேண்டும் என்னும் விமர்சனத்தோடுதான் என் வாசிப்பு இருந்தது. அவரது சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிப்பவன்.
ஹிந்து நாளிதழில் தமிழ் இலக்கியம் பற்றி அவர் தெரிவித்த சில ஆழ்ந்த கருத்துக்கள் நம் சிந்தனைக்குரியவை.
பேரிலக்கியங்கள் எப்போதும் ஒரு காலகட்டத்தில், சமூகச் சூழலில் உருவாகுபவை. மனிதத் துயரங்கள் பெரிதாக நிகழும் காலகட்டமாக இருக்க லாம். மனித மனம் அதிகபட்சமாகச் சஞ்சலங்களையும், திகைப்பையும் அனுபவிக்கும் நிலைமைகளில் பேரிலக்கியங்கள் படைக்கப்படும். 19-ம் நூற்றாண்டு அதற்குச் சாட்சியாக இருக்கிறது.
————————–
20-ம் நூற்றாண்டு உரைநடையில் நவீனத் தமிழ் இலக்கிய கிளாசிக்குகள் என்று எந்தப் படைப்புகளைச் சொல்வீர்கள்?
கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம், ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, ஜெயகாந்தனின் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், மோகமுள், சா. கந்தசாமியின் சாயாவனம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு போன்றவற்றைச் சொல்வேன்.
தமிழ் நாவல்களுக்குள் செவ்வியல் கூறுகள் இருக்கின்றன. ஆனால் முழு செவ்வியல் பிரதியாக ஒரு படைப்பு உருவாகவே இல்லை. ஏனெனில் 20-ம் நூற்றாண்டு வாழ்க்கை முழுமைத்தன்மை உடையதாக இல்லை. சிதறடிக்கப்பட்ட வாழ்க்கையைச் சிதறடிக்கப்பட்ட நிலையில்தான் கலைஞன் சொல்ல முடியும்.
இந்த நூற்றாண்டின் தனித்துவமான நெருக்கடி எது?
இந்த நூற்றாண்டில்தான் ஒரு மனிதனின் இருப்பைக் கிட்டத்தட்ட இயந்திரங்கள் இடம்பெயர்த்துள்ளன. ஒரு மனிதனிடம் பேசுவதற்கு நமக்குத் தொலைபேசி போதும். தொலைவு என்ற ஒன்றையே இது இல்லாமல் ஆக்கிவிட்டது. ஆனால் மனிதர்களுக்கு இடையிலான தொலைவை அறிவியல் இல்லாமல் ஆக்கிவிட்டாலும், பிரிவு என்பதும் தனிமை என்ற உணர்வும் தொடர்ந்து இருக்கவே செய்கிறது.
—————————
1947, 48ல் வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி, ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப் பகுர்ஹிகலில் மற்றும் கிழக்கே வங்காளத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப் பட்டனர் பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டனர்., லட்சக் கணக்கானோர் வீடிழந்தனர்- நாடிழந்தனர்.
பீஷம் சஹானியின் ஹிந்தி நாவலான தமஸ் ஒரு உதாரணம். தமிழ் நாட்டில் கடந்த நூறு வருடங்களில் தேசப் பிரிவினைக்கு நிகரான ஒரு சரித்திர நிகழ்வு இல்லை. இதையே எஸ்.ரா குறிப்பிடுகிறார். தென்னாட்டில் பேரிலக்கியத்துக்கு மூலமாகும் துயரங்கள் தெலுங்கானாப் போராட்டத்தில் காணக் கிடைக்கின்றன. பிரிவு மற்றும் தனிமை பற்றிக் குறிப்பிடுகிறார்.
முக நூல் உட்பட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் கைபேசியில் உள்ள செயலிகள் தனிமையின் வெற்றிடத்தை நிரப்ப இயலாத தொழில் நுட்ப உருவாக்கங்கள். பயனின் அடிப்படையில் அதாவது சார்பின் அடிப்படையில் ஒரு நல்ல மனித உறவு உருவாக வாய்ப்பே இல்லை. உணர்வு பூர்வமான புரிதல் மட்டும் அதன் விளைவான கழிவிரக்கமும் பரிவும் மட்டுமே நீண்ட நாளுக்கான பலன் எதிர்பாராத மனித உறவைக் கட்டமைக்கும்.
எஸ்.ரா.வுக்கு இலக்கியம் பற்றி உள்ள புரிதல் அனேகமாக சமகாலத்தில் யாருக்குமே இல்லை. எஸ்.ராவின் இந்தக் கருத்தை புரிந்து கொள்ள முயலுவோம்:
“20ம் நூற்றாண்டு வாழ்க்கை முழுமைத் தன்மை உடையதாக இல்லை. சிதறடிக்கப் பட்ட வாழ்க்கையைச் சிதறடிக்கப் பட்ட நிலையில்தான் கலைஞன் சொல்ல முடியும்'”
அப்படி என்றால் அவர் சமகால வரலாறை அல்லது வாழ்க்கையைப் பதிவு செய்யும் இலக்கியங்களை மட்டும் குறிப்பிடுகிறாரா? கண்டிப்பாக இல்லை.இதிகாசங்களை மையப்படுத்தி எழுதுவதில் அவரது படைப்பான உபபாண்டவம் மிக முக்கியமானது. முன்னோடியானது. அவர் இங்கே குறிப்பிடுவது சமகால வாழ்க்கை எழுத்தின் மீது அதாவது இலக்கியத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம். இந்தப் புரிதலும் முதிர்ச்சியும் எழுத்தாளர்கள் எல்லோருக்குமே ஒரு செய்தியைத் தருவது. புராண காலம் செவ்விலக்கிய காலம் அல்லது காவியச் சுவை என்னும் குறியீடுகளில் இலக்கியத்தின் உயிர் நாடி இல்லை. இலக்கியத்தின் ஆதார சுருதியின் மீது அது படைக்கப்படும் காலகட்டத்து வாழ்க்கை முறை ஏற்படுத்தும் தாக்கம் அதன் உருவ உள்ளடக்கங்களில் பிரதிபலிக்கப்படுகிறது. அப்படி பிரதிபலிக்கப் படாவிட்டால் அது அசல் அல்ல நகல். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட சாபவிமோசனம் சிறுகதையில் புதுமைப்பித்தனின் காலத்தில் நீறுபூத்த நெருப்பாய் பெண்ணுரிமைக் கனல் கக்கத் துவங்கியது. எனவே அது அசல் படைப்பானது. ராமாயணத்துக்கு மறு வடிவத்தை இதிகாச காலத்தின் வாழ்க்கைமுறையை ஒட்டிப் புதுமைப்பித்தன் முயற்சித்திருந்தால் இன்று அவருக்கு நவீனத்துவத்தின் முன்னோடி என்னும் இடம் கிடைத்திருக்காது. எஸ்,ரா, சமகாலத்தின் ஆகச் சிறந்த இலக்கியவாதி.
(image courtesy: face book)