தேவதேவனின் இரண்டு கவிதைகள்
தீராநதி ஏப்ரல் 2015 இதழில் வெளிவந்துள்ள தேவதேவனின் இரண்டு கவிதைகளுமே நம் அற உணர்வைச் சுண்டுபவை.
முதல் கவிதை “ஒற்றைக்கை மனிதன்” கவிதையில் மிகவும் சவாலான ஒரு கற்பனையைக் கவிதையாக்குகிறார் தேவதேவன். சற்று பிசகினாலும் மாற்றுத் திறனாளியைப் பகடி செய்தது போல முடிந்து விடும்.
நவீனக் கவிதைகளின் சிறப்பு சொற்சிக்கனமும் சரியான சொல்லைச் சரியான இடத்தில் பயன்படுத்துவதும். ஆனால் இதை ஒரு மாறாவிதியாகக் கொள்ள முடியாது. கவித்துவம், வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த தரிசனம் தரும் கற்பனை ஆகியற்றை வெளிப்படுத்த நீண்ட கவிதை வரலாம். அப்படி ஒரு கவிதை இது.
பணமே முக்கியம் என்று மனித உறவுகளுக்கு மதிப்பளிக்காத ஒருவன். அவன் கையை அவனால் பாதிக்கப் பட்ட ஒருவன் வெட்டி விடுகிறான். ஆனால் முறையற்ற வழியில் பணம் சேர்த்தவனுக்கு பணத்தை வைத்து வள்ளல் வேடம் போட்டு ஏழைகளை ஏமாற்றிப் பணம் தவிர மிகவும் தேவையான கௌரவம் கிடைத்து விடுகிறது. பாவம் அந்த ஏழை மக்களுக்கு இந்த மாதிரி ஆட்களைத் தாம்தான் உருவாக்குகிறோம் என்பது தெரியவில்லை.
ஒருவன் மீது மதிப்புக்கொள்ள சிறிய தருமச் செய்கை மக்களுக்குப் போதும். அவனை நம்ப அவன் அழகாக இனிக்கப் பேசித் தரும் வாக்குறுதிகளே போதும். அவன் மீது இரக்கப்பட அவன் தீயசெயல்களால் அடைந்த இழப்புக் கூட ஒரு காரணமாகிவிடும். ஒற்றைக் கை இந்த இடத்தில் ஒரு படிமமாக வருகிறது. குற்றம் செய்த கை தான் வெட்டப் பட்டது. ஆனால் தற்காலிகமாகவே அந்த தண்டனை தருவது போன்ற பழிவாங்கல் பயன் பட்டது. அவனது குற்றங்களை ஊரறிய வைத்திருந்தால் மட்டுமே அவன் கையை வெட்டியவரது சீற்றத்துக்கு ஒரு ஆறுதல் கிடைத்திருக்கும்.
மக்களின் விழிப்புணர்வு மட்டுமே ஒரு புத்திசாலி செய்யும் ஏமாற்றுகள்-சுரண்டல்கள்- கபட நாடகங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியும்?
ஆனால் மக்கள் ஏன் திரும்பத் திரும்ப வரலாற்றின் வெவ்வேறு பக்கங்களில் ஏமாறுகிறார்கள்? இதற்கான பதில் அடுத்த கவிதையில் இருக்கிறது.
‘வீதி எங்கும் சிதறிக் கிடக்கும் கற்கள்’ என்னும் கவிதை பரஸ்பர விரோதத்தில் எதிராளியை இழிவு படுத்த இரு பக்கமும் முனைவது கண்கூடாகக் காண்பது. விளைவு மொத்த சமூகமுமே கேவலப்பட்டுக் கிடக்கிறது இல்லையா? கற்கள் இந்தக் கவிதையில் படிமமாக வருகின்றன. ஒருவரை ஒருவர் தாக்கக் கற்களைப் பயன்படுத்துகிறோம். அவை விழுந்த இடத்திலேயே காலகாலமாகக் கிடக்கின்றன. அவற்றின் மீது குப்பைக் கூளங்கள் படிந்து நம்மைத் தவிர இருக்கும் உலகின் பிறமனிதர்கள் நம்மைக் கேவலமாகப் பார்க்கும் நிலை வந்து விட்டது.
கவிதையை அந்தக் கற்கள் தாம் ஒரு மேடையாக விரும்பும் கனவு காண்பதாக முடிக்கிறார். அது பொன் மேடையாகவும் கூரையும் மதில்களும் இல்லா மாளிகையாகவும் இருக்கும்.
மாளிகை ஒரு பிரம்மாண்டத்தின் அடையாளம் இல்லையா? சுதந்திரக் காற்றும் மானுடம் பேசும் கருத்தும் நிறைந்த ஒரு மேடை ஒரு மாளிகையின் பிரம்மாண்டத்தையும் மேடையின் சுதந்திரத்தையும் ஒருங்கே கொண்டு இருக்கிறது. கற்களின் கனவா அது? ஒரு கவிஞனின் கனவு. மனித நேயம் மங்காது ஒளி வீசும் எண்ணிக்கையில் மிகவும் குறைந்த சிலரின் கனவு.
இரண்டாவது கவிதையில் இரு பிரயோகங்களை நான் ரசித்தேன். தஞ்சை திருச்சிப் பகுதியில் துடைப்பம் என்பது வாருகல். தேவதேவன் வாரியல் என்று பயன்படுத்தி இருக்கிறார். நாட்பட்டது என்பதற்கு நாளாந்த என்னும் பயன்பாடு ரசிக்க வைக்கிறது.
இரண்டு கவிதைகளின் ஊடாக ஒரு தனித்துவமான ஒரு சிந்தனையை தேவதேவன் முன் வைக்கிறார்.
வரலாறு என்பது ஒரு வற்றா நீருற்றாக ஒரு மூலிகைக் காடாகக் கொண்டாடப் படுகிறது. ‘அந்தக் காலத்தில் எல்லாம் சரியாக இருந்தது’ என்னும் வறட்டுப் பெருமிதம்- பாரம்பரியம் மற்றும் முன்னோர் மீது ஒரு குருட்டுப் பிடிமானம் இதற்குக் காரணம்.
உண்மை என்ன ? தொன்மைக் காலத்திலிருந்து அண்மைக்காலம் வரை நாம் வன்மம், வன்முறை, மானுடத்தைத் துண்டாடும் போக்கு இவற்றில் குரூர ரசனை காட்டி வருகிறோம். இது மாறும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மக்கள் நம்பத்தகாதவர்களை நம்புவதும், குறுகிய நோக்கம் உள்ளோர் பின்னாடிப் போவதும் மாறவே இல்லை. தனிமனிதனின் தன்னலமும்,குரூரமும் குறையவே இல்லை.
வரலாறு ஒவ்வொரு தலைமுறையும் முன்னோரின் தவறைப் பார்த்துத் தன்னைத் திருத்திக் கொண்டது என்று காட்டுகிறதா? இனிமேலாவது அப்படி ஒரு வரலாறுக்கு வாய்ப்புண்டா?
வரலாறை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதன் சிறப்புகளைக் கொண்டாடுவதில் ஒரு வசதி உண்டு. வரலாற்றில் உள்ள 90% தேக்கத்தை, குப்பையை, களையை ஆய்ந்து 10% நம்பிக்கை தருவதை மட்டும் பகுத்து எடுக்கும் ஆர்வம் உள்ளவர் வெகு குறைவு. வரலாற்றைத் தோண்டித் தோண்டி அதற்கு இல்லாத சிறப்பெல்லாம் கொடுப்பவர்களுக்கு தனிப்பட்ட ஒரு பயன் உண்டு. கண்கட்டி வித்தைக்காரனுக்கு எப்போதுமே கிடைக்கும் கவனமே அது.
ஆட்டு மந்தைகளுக்கு நடுவில் வரலாறு இப்போது போலவே குரூரமாய்த்தான் இருந்தது என்று எழுதிய தேவதேவனின் கவிதைகள் நம்பிக்கை தருபவை.
(image courtesy:http://poetdevadevan.blogspot.in/search/label/poet%20devadevan)