ஜெயகாந்தன் பற்றி அ.மார்க்ஸ்


A.-Marx

ஜெயகாந்தன் பற்றி அ.மார்க்ஸ்

ஜெயகாந்தன் நினைவாக முதல் அஞ்சலிக் கூட்டம் சென்னையில் நேற்று டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனால் நடத்தப்பட்டது. இணையதளம், ஆனந்த விகடன், தினமணி என அவருக்கு அஞ்சலி செலுத்துவோரின் பதிவுகள் நிறையவே வாசிக்கக் கிடைக்கின்றன. வருத்தம் என்னவென்றால் எல்லோரும் அவர் சபாவுக்குத் தான் போய்வந்த அனுபவம் மற்றும் அவருடன் தனிப்பட்ட முறையில் இருந்த நினைவுகளை மற்றுமே பகிர்கிறார்கள். ஆனால் அவரது நாவல்கள், சிறுகதைகளைக் குறிப்பிட்டுப் பேசுவதற்காகக் கடைசி நிமிடத்தில் கூட அவரை வாசிக்கவில்லை. இதுவரை ‘கோகிலா என்ன செய்து விட்டாள்?’ என்னும் குறுநாவலை எஸ்.ரா. கூடக் குறிப்பிடவில்லை. தமிழில் வெளியான ஆகச்சிறந்த படைப்புகளில் அது ஒன்று. மணவாழ்க்கையில் ஆணாதிக்கத்தை அந்த நாவல் தோலுரித்தது போல பெண் எழுத்தாளர்கள் படைப்பு ஒன்று கூட வந்ததில்லை. அஞ்சலி செலுத்தும் போது அன்னா கரீனாவை நினைவுபடுத்தும் ஜெயகாந்தனின் சிறுகதையைக் குறிப்பிட்டார் எஸ்.ரா. ‘பாரீசுக்குப் போ’ நாவலில் அன்னாகரீனா பற்றிய விரிவான விவாதம் உண்டு. ‘சமுதாயம் என்பது நாலு பேர்’ , மனவெளி மனிதர்கள் அவரது அரிய படைப்புகள்.

எனவே இப்போது ஜெயகாந்தனைப் படித்தவர்கள், அவரது இலக்கியத்தை எண்ணி அஞ்சலி செலுத்துவோரின் பதிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அ.மார்க்ஸை கொள்கை அடிப்படையிலும் இலக்கியம் குறித்த அவரது அணுகு முறையிலும் ஜெகேவின் எதிரணி என்றே குறிப்பிடலாம். ஆனால் அவர் ஜெகேயை அவரது முரண்பாடுகளுடன் புரிந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார். அவரது கட்டுரையில் சில பகுதிகள்:

“முரண்பாடுகளின்மூட்டை. அட, இதுவும் அவரே தன்னைப் பற்றிச் சொன்னதுதானே. மனிதர்கள் முரண்பாடுகளின் மூட்டையாகத்தான்இருக்க இயலும். முரண்பாடுகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டுமானால் நாம் மாடாகத்தான் பிறந்திருக்கவேண்டும். பெரியாரும் கூடத்தான் இந்த நாட்டுக்குக் காந்தி தேசம் எனப் பெயர் வைக்க வேண்டும் என்றார். காந்தி கிணறு எனப் பெயர் வைக்கவும் செய்தார். பின் காந்தி “பொம்மை”களை உடைத்தார். தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். பின் கள் வேண்டுவோருக்கு ஆதரவளித்தார்.
நான் இங்கு தந்தைபெரியாரை அதிகம் மேற்கோளிடுவதற்குக் காரணம் தம்மைப் பெரியாரிஸ்டுகளாக நினைத்துக் கொண்டுள்ளவர்கள் அதிகம் ஆடுவதால்தான்.
தி.மு.க வை விமர்சித்தார்,பிரபாகரனை விமர்சித்தார். ஆமாம் இவர்களெல்லாம் என்ன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களோ? இந்த அம்சங்களில் ஜெயகாந்தன் தவறுகள் செய்து இருந்தால் அவற்றைச் சுட்டிக் காட்டுவோம். அதற்காக அவரை நிராகரிப்போமோ?
காங்கிரசை ஆதரித்தார்.ஆமாம் ஆதரித்தார். காங்கிரஸை அவர் மட்டுந்தான் ஆதரித்தாரோ? கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கவில்லையா, உமது கலைஞர் ஆதரிக்கவில்லையா? தேர்தல் அரசியல் என்று வந்தால் இதெல்லாம் சகஜம்தான். கவுண்டமணியிடம் பாடங் கேளுங்கள். ஜெயகாந்தன் இவற்றால் அடையாளப் படுத்தப்படவில்லை. அவரின்அடையாளம் இதுவல்ல, இவற்றுக்காக நாம் அவரைத் தமிழ் வரலாற்றில் ஓர் அத்தியாயம் எனச் சொல்லவுமில்லை.
சமஸ்கிருதம் தமிழைவிட உயர்ந்தது, அது தமிழின் தாய் எனச் சொல்லும் அபத்தத்தையும் அதன் பின் உள்ள அரசியலையும் தான் நாம் கண்டிக்கிறோம். மற்றபடி சமஸ்கிருதம் உயர்ந்த மொழிதான். தமிழைப்போல ஒரு செவ்வியல்மொழிதான். மகா காவியங்கள், அறிவியல், மருத்துவம், இலக்கணம் என எண்ணற்ற பங்களிப்புகளச் சுமந்து நிற்கும் மொழிதான். வேத உபநிடதங்கள் அதில் வெறும் 5 சதந்தானப்பா.
நீங்கள் பாவம்.உங்களுக்கு என் அநுதாபங்கள். உங்களால் ஒரு கலைஞனை மதிப்பிட இயலாது. “மகா காளிபராசக்தி கடைக் கண்” வைத்ததால்தான் ருசியப் புரட்சி தோன்றியது எனப் பாடியவன்தான் எனப்பாரதியை ஒரு கணத்தில் புறந்தள்ளுவது எளிது. அதே நேரத்தில் நினைவு கொள்ளுங்கள். உலகில் வேறெங்கும்சம காலத்தில் ருஷியப் புரட்சியை இப்படி வாழ்த்தியவர் யாருமில்லை. ருஷ்யப் புரட்சிக்கு எதிராக முதலாளிய நாடுகள் அனைத்தும் ஏகப்பட்ட அவதூறுகளைப் பரப்பிக் கொண்டிருந்த சூழலில் ‘மான்செஸ்டர் கார்டியன்’ இதழ் “ருஷ்யாவில் பெண்கள் எல்லாம் பொதுவுடைமை ஆக்கப்படப்போகின்றனர்” என அவதூறு பரப்பியது. இன்று போலல்ல. மவுசை நகர்த்தினால் தகவல்கள் கொட்டுவதற்கு. எங்கிருந்து தேடினாரோ தெரியவில்லை. “ருஷ்யாவில் விவாகச் சட்டங்கள்” என்றொருகட்டுரை. ஶ்ரீமான் லெனினின் ஆட்சியில் விவாகச் சட்டங்கள் எத்தனை முற்போக்காக உள்ளன என்பதை அலசி ஆராய்ந்திருப்பார் பாரதி.”

அ.மார்க்ஸின் “உடை படும் புனிதங்கள்” என்னும் இலக்கிய விமர்சன நூல் வாசிப்பின் வழி ஒரு நூலில் உள்ளார்ந்த அரசியலை அது முன் வைக்கும் சமுதாய- அதிகார அடுக்குகளை இனம் காண உதவும்.

சமுதாயம் மாற வேண்டும் என்னும் கனவு இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளை சமாதானமாக ஏற்கும் குரலை எத்தனை எழுத்துத் திறமை இருந்தாலும் ஒரு படைப்பாளி ஒளித்துவிட முடியாது. சமுதாயம் மாற வேண்டும் என்னும் கனவே ஒரு படைப்பைக் காலத்தை வெல்ல வைக்கும்.

எனவே இந்தக் கனவு இல்லாத படைப்பை எழுதியவர் மேல்ஜாதிக்காரரா தலித்தா என்பது அல்ல பிரச்சனை. அதிகார அடுக்குக்குகளை அவர் மறுதலிக்கிறாரா, இன்றைய சமுதாயத்தின் இழி நிலை மாறவே வேண்டாம்- என்னை ஒரு போராளியாக, கலகக்காரனாகக் காணுங்கள் என்னும் தொனி உடைய படைப்புகள் ஏராளம். இந்தக் கலகக்காரர்கள் எழுதுவது உள்ளீடற்ற உள் நோக்கமுள்ள படைப்புகள்.

சென்னையில் உள்ள விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை மிகவும் துயரகரமானது. மனிதநேயம் உள்ள எந்த மனமும் கண்டு வெகுளக் கூடியது. அது ஜெயகாந்தனின் எழுத்தில் பதிவாகிய காலமே அவரைத் தூக்கி நிறுத்துகிறது. அந்தக் காலத்தில் வாசகனுக்கு வருடிக் கொடுக்கிற மேம்போக்கான படைப்புகள் வணிகப் பத்திரிக்கையில் கோலோச்சிய காலம். புதுமைப்பித்தனின் படைப்புகளே முதன் முறையாக படைப்பு என்பது போழுது போக்கு இலக்கியத்திலிருந்து மேம்போக்கு இலக்கியத்திலிருந்து தமிழை மீட்டு நவீனத்துவத்தின் முன்னோடிப்படைப்புகளாக வாசகனின் விழிப்பைத் தட்டுபவையாக வாசகனின் புரிதலை மதிப்பவையாக வெளிவந்தன. மௌனிக்கும் அதே மரியாதை உண்டு. ஆனால் அவர் படைப்புகள் விரல் விட்டு எண்ணக் கூடியவையே.

இவர்களுக்கு அடுத்ததாக இலக்கியத்தில் பிரவேசித்த ஜெயகாந்தன் நவீன எழுத்தின் எல்லா சாத்தியங்களையும் உள்ளடக்கி எழுதியவர் அல்லர். ஆனால் சுதந்திரத்துக்குப் பின் சமுதாயத்தின் முன்னுரிமை விளிம்பு நிலை மக்களைப் புறந்தள்ளியதாக இருக்கக் கூடாது என்பதை முன் வைத்தார். இந்தச் சிந்தனைத் தடமே பின்னாளில் எழுத வந்த எந்தத் தமிழ் எழுத்தாளன் மீதும் நிரந்தரமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. வணிகப் பத்திரிக்கைகளை வாசகர்களை சட்டையைப்பிடித்து நிறுத்தி “இதுவரை நீங்கள் கொண்டாடியவை இலக்கியமா?” என்று கேட்டது.

ஒரு படைப்பாளியைக் கொச்சைப் படுத்தி, ஜாதி அல்லது இஸம் அடிப்படையில் இலக்கியவாதிகளை அடையாளப்படுத்தும் முயற்சிகளை அ.மார்க்ஸே அடித்து நொறுக்கி இருப்பது தமிழ்ச்சூழல் சுதந்திர சிந்தனைக்கு அன்னியமானது அல்ல என்பதற்கான அடையாளமாகும்.

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in விமர்சனம் and tagged , , . Bookmark the permalink.

1 Response to ஜெயகாந்தன் பற்றி அ.மார்க்ஸ்

 1. Bala Sundara Vinayagam says:

  அ மார்கஸ் தன்னையும் குழப்பி பிறரையும் குழப்பியிருக்கிறார்.

  ஜெயகாந்தன் எழுதியது இலக்கியத்தில் ஒருவகை. அவ்விலக்கிய வகையையும் பலரும் எழுதியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை பற்றி. நீங்கள் படிக்காமலிருந்திருக்கலாம். எனவே உங்களுக்கு மலைப்பாக இருக்கிறது. இவ்வகை தவிர பிற வகைகளும் உண்டு.

  பொழுதுபோக்கு இலக்கியம் என்றே கிடையாது. எல்லா இலக்கியமுமே பொழுதுபோக்கவே என்றும் எடுக்க முடியும். ஜெயகாந்தனை நான் பொழுது போக்கத்தான் படிக்கிறேன் என்றால் நீங்கள் என்ன செய்துவிட முடியும்? என்னை மடையன என்று சொல்லிவிட்டுப்போகலாம். ஆனால் நான் என்னை மடையன் என்று கருத முடியாது. ஏனென்றால், விளிம்பு நிலை மனிதர்களிடையே பிறந்து அவர்களுள் ஒருவனால் எனக்கு ஜெயகாந்தன் சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை. எனினும் படிக்கிறேன்; காரணம் அவர் எப்படி எங்களைப்பார்க்கிறார் என்பதைத் தெரியத்தான். இஃதொரு பொழுது போக்கு என்றுதான் என்னைப்பொறுத்தவரை ஆகும். மேட்டுக்குடியைச் சேர்ந்தவர், இம்மனிதரை அறியாதவருக்கு ஜெயகாந்தனின் படைப்புக்கள் வேறுமாதிரி தோன்றலாம்.

  சுருக்கமாகச் சொன்னால், எதையும் முடிவாக எழுதிவிடாதீர்கள். இலக்கியம் என்பது பலருக்குப் பல மாதிரியாகத் தோன்ற வேண்டும் அஃதே அதன் சிறப்பு. அதைக்குறுக்கி விடாதீர்கள்.

  எழுத்தாளனை பலவிதமாக எடுக்கலாம். அவன் படைப்புககளை மொத்தமாக வாசித்துவிட்டு அவனின் எழுத்தாளன் என்ற ஆளுமையை ஒரு மொத்தமாக எடைபோட்டு தமிழ் இலக்கியத்தின் அவன் இடத்தை நிர்ணயித்துப்பேசலாம். அல்லது, அவனின் ஒவ்வொரு படைப்பையும் தனித்தனியாக படித்துப்பார்த்து விமர்சிக்கலாம். சிலர் அவன் சமூகக்கருத்துக்களை அவன் படைப்புக்களில் தேடலாம். இப்படி எப்படியும் விமர்சனம் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் பொது: அவன் படைப்புக்களை வாசித்தல். அவன் கருத்துக்களையும் அவன் படைப்புக்களை முழுவதும் ஏற்று, அவனை ஏத்தவேண்டுமென்று சொல்லவேண்டியதே இல்லை. கருநாநிதி சமீபத்திய இராமனுஜரைப்பற்றிய பேட்டியில், தான் மாணிக்கவாசகரைப் போற்றுவதாகக் கூறினார். அவர்தம் மதத்தை தான் ஏற்கவில்லை; ஆனால் அவரின் தமிழ்ப்பற்றையும், தமிழுக்குச் செய்த அணியையும் போற்றுவதாக கூறி திருவாசகத்தைப் படிக்கிறதாக. இதையே ஜி. யு. போப்பும் சொன்னார்.

  இப்படியும் ஒரு எழுத்தாளனைப் பார்க்கலாம். எப்படியாகினும் சுதந்திரமாக உங்களை விட்டுக்கொடுக்காமல், எழுத்தாளன் வாசகருக்குத்தான் எழுதினான்; வாசகன் அவனுக்காக அவதாரம் எடுக்கவில்லை என்றுணர்ந்து நூல்களைப் படிப்போம். As I have already written in Thinnai, Jeyakantan will be truly read and analysed only after the dust of adulation and heroworship dies down and disappear. Lets wait for that time to come soon.

  இவண்
  பால சுந்தர விநாயகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s