கேகேகேயும் நானும் -1
“சிறிய கள் பெறுமின் எமக்கீயுமன்னே
பெரிய கள் பெறுமின் பகிர்ந்துமன்னே”
தமிழ் வாத்தியார் இதன் பொருளை விளக்கி மேலே செல்லவேயில்லை. அது இலக்கண வகுப்பு.” கள் குடிக்கிறது தப்பா சரியா ஐயா?” என்று எழுந்துவிட்டான் கேசவன். அவனது அப்பா பெயர் கா.கைலாசம். ஆங்கிலத்தில் அவன் KKK. ஆனால் வகுப்பில் அதற்கு வேறு விரிவு வைத்திருந்தோம். கேள்வி கேட்கும் கேசவன். அன்று தமிழைய்யா அவனுடன் தனிமையில் போராடினார். இறுதியில் “பண்பாடு காலத்துக்குக் காலம் மாறும்” என்று சொல்லித் தப்பித்தார். நானும் அதன் பிறகு சுமார் 20 வருடங்களுக்கு முன்வரை அவனிடமிருந்து தப்பித்திருந்தேன். ஒரு நாள் பல்லவன் வண்டியில் பகலெல்லாம் நசுங்கு பட்டு இரவு ஒன்பது மணிக்கு அம்மா வீட்டில் நுழைந்தால் “டேய் கேகேகே வந்திருக்காண்டா” என்றார் என் அம்மா நான் செருப்பைக் கழற்றும் முன். அப்படியே திரும்பி ஓடும் அளவு விவரமானவன் தான் நான். அன்று களைப்பையும் மீறி ஓடியிருப்பேன். டக்கென்று வாயிலுக்கு வந்து என் கையைப் பிடித்துக் கொண்டான்”வா பாஸ். டீச்சர் இம்புட்டு நேரம் உன்னைப் பத்தித்தான் பேசிக்கிட்டிருந்தாங்க” .விதிவலியது.
நிகழ் காலத்துக்கு வருவோம். அவன் திருவான்மியூரில் தனது (தகவல் தொழில்நுட்ப வேலையிலுள்ள) மகனுடன் குடி வந்ததுமே என்னைச் சந்தித்து நலம் விசாரித்துத் தான் வேலையை விட்ட விவரமும் சொல்லி சுமார் நூறு கேள்விகள் கேட்டான். அதில் 98 கேள்விகள் என் குழந்தைகள் பற்றியவை. 99வது கேள்வி என் மனைவியுடன் “இவுரு ரொம்பக் கோவக்காரராச்சே. எப்படிம்மா காலம் தள்ளுறீங்க?” இப்படியாக வந்தவுடன் காபி மற்றும் “அண்ணே” என்னும் வரவேற்புக்கு வழி செய்து கொண்டான். 100ம் கேள்வியில் நான் அம்பிகாபதி போல ஒரு தவறு செய்து விட்டேன்.
“இப்பமெல்லாம் எழுதுறது இல்லியா?”
“எழுதுறேன். இணையத்தில் மட்டும் தான்”
என் இணைய தளம் பற்றிய துணைக் கேள்விகளுக்கு பதிலளித்ததும் நானே. இதன் பின் விளைவுகளை நான் தீர்க்கதரிசிக்கவே இல்லை.
நேற்று மாலை அலுவலகம் முடிந்து வழக்கம் போல ஜெயந்தி திரையங்கரத்துக்கு அருகில் உள்ள ‘சிக்னல்” அருகே இறங்கிக் கொண்டேன். அங்கே வண்டிகள் நகர மேலும் 10 நிமிடமாகும் அதற்குள் பொடி நடையாய் காய்கறி வாங்கப் பழமுதிர் வரை போய்விடலாம். அப்படிப் போகும் போது தான் உள்ளூர்க்காரனின் மேன்மை பிடிபடும். நடைபாதையில் ஏறி குறுக்கே கடை வந்தால் இறங்கி மறிக்கும் இருசக்கரவாகனத்துக்குள் முதுகுப்பை அகப்படாமல் தப்பித்து இறுதியில் ‘சிக்னல்’ அருகே இடிபடும் கும்பலில் புகுந்து புறப்படும் லாகவம் என்னை ஒப்பிட வெளியூர்க்காரர்களுக்கு வரவே வராது.
இந்த சாகசங்களை நான் நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ” ஏம்பா… சத்யா ” அவன் தான். என்னைப் புனைபெயரில் கூப்பிடும் போது அதில் கிண்டல் உண்டு. அப்பாவியாக முகத்தை வைத்திருப்பதே அவனது திறமை.
“காட்டன் ஹவுஸிலிருந்தும் ஹாட் சிப்ஸிலிருந்தும் எங்களைத் தள்ளிக் கொண்டு போகிறவர்களைப் பொருட்படுத்தாமல் “என்னப்பா நேத்திக் காலையிலே ‘வாக்கிங்க்’ முடிச்சிட்டு வந்தா அண்ணி சொல்லுறாங்க நீ திருச்சிக்கிப் போனியாமே?”
அதனாலென்ன என்பதைப் போல் பார்த்தேன்.
‘டீச்சர் எப்பிடி இருக்காங்க?”
வெறுமனே தலையாட்டினேன்.
“வாப்பா பேசிக்கிட்டே போவுலாம். இங்கிட்டு ஒரே நெரிசலா இருக்கு” என்று என் வழி இன்று தனிவழியல்ல என்று ஆக்கிவிட்டான்.
“ஏம்பா… ஜெயகாந்தனைப் பத்தி நெறயவே எளுதியிருக்கியே. அம்புட்டு வாசிச்சிருக்கியா?”
வெறுமனே தலையாட்டினேன்.
“டீச்சரு அப்பமெல்லாம் அவுரு பத்தி சொல்லியிருக்காங்க. அவுங்களும் ரொம்ப வருத்தப் பட்டாங்களோ?”
அம்மா ஏன் என்னை விசாரிக்கவே இல்லை என்று எனக்குளேயே கேள்வி அரிக்கிறது. அன்பு நண்பன் அண்ணன் லப்பை கூடவா மறந்து விட்டார். அவரும் தொலைபேசியில் கூட விசாரிக்கவில்லை. கேகேகேவுக்கு மட்டும் எக்குத்தப்பாக விசாரிக்க எதாவது இருக்கிறது.
அதற்குள் அவனது கைபேசி ஒலித்தது. “டீச்சரு மவன் எழுத்தாளரு சத்யானந்தனோடதாம்மா இருக்கேன்.கொடுக்காப்புள்ளி இங்கிட்டும் கிடைக்கிதும்மா. வாங்கிப்புட்டேன்.. நான் அவன் தோளில் தட்டிக் கையை அசைத்து விடை பெற்றேன்.
கேகேகேயின் கேள்விகளிலிடமிருந்து தற்காலிக விடுதலை.
(என் முதல் கேலிச்சித்திரம் என்று இதைக் கொள்ளலாம்)