சமகாலத் தமிழ் நாவல்கள் – முருகேச பாண்டியன்
உயிர்மை மே 2015 இதழில் “நம் காலத்து நாவல்களின் போக்குகள்’ என்னும் ந.முருகேச பாண்டியனின் கட்டுரை ஒரு காரணத்துக்காகவே மிகவும் முக்கியத்துவமானது. மூத்த எழுத்தாளர்கள் பலருக்கும் ஆர்வமில்லாத விஷயம் சமகால எழுத்தை விமர்சிப்பது. ஆனால் அவர்கள் தனது எழுத்தை வாசிக்காமல் தனக்கு அஞ்சல் அனுப்பியவர்களில் தொடங்கி மற்றும் கோடிக்கணக்கான தமிழ் வாசகர்களை சபித்துக் கொண்டே இருப்பார்கள்.
சமகால எழுத்தை வாசிக்காத போது நாம் இழப்பது சமகால இலக்கியவாதிகளை பாதிக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியாமற் போவது. தொன்மைக் காலத்திலிருந்து சமகாலம் வரையான எத்தனையோ விஷயங்கள் எழுத்தாளர்களை பாதிக்கின்றன. அதில் அவர்கள் பதிவு செய்யத் தேர்ந்தெடுத்தவை எவை என்பது மிகவும் முக்கியமானது. அந்தத் தேர்வின் பின்னால் உள்ள மனப்பாங்கு ஒன்றைத் தெளிவு படுத்துகிறது. தாம் மையப்படுத்தும் விஷயம், தாம் பதிவு செய்யும் அளவு முக்கியமானது என்று அவர் கருதுவது மட்டுமல்ல, அதற்கு முன்னால் யாரும் அதைப் பதிவு செய்யவில்லை என்பதையும் நமக்கு உணர்த்துகிறார்.
முருகேச பாண்டியன் குறிப்பிடும் படைப்பாளிகளில் நாம் ஓரிருவரைத்தவிர யாரையும் வாசித்ததில்லை. கள்ளழகர், ஆர். அபிலாஷ், எஸ்.அர்ஷியா, ம.காமுத்துரை, லஷ்மி சரவண குமார், குமாரசெல்வா, விநாயக முருகன், செல்லமுத்து குப்புசாமி, ஆர்.வெங்கடேஷ், ஏக்நாத், சி.மோகன், இரா.முருகவேள், நக்கீரன், அரவிந்தன், ராம்சுரேஷ், இ.ஜோ.ஜெயசாந்தி, அசோகன் நாகமுத்து, மு.ராஜேந்திரன், கே.என்.சிவராமன், சைலபதி, கிருஷ்ணமூர்த்தி, சயந்தன், ஸ்ர்மிளா ஸெய்யித், க.சுதாகர், கலைச்செல்வி, அன்வர் பாலசிங்கம், வளவ துரையன், குமரகேசன், வீரபாண்டி என, தீவிரமாக இயங்கும் பல படைப்பாளிகள் பற்றித் தெரிந்து கொள்கிறோம். முருகேச பாண்டியன் அவர்களது படைப்புகளின் சுருக்கத்தைத் தந்திருக்கிறார். அவற்றுள் என் கவனத்தைக் கவர்ந்தவை இவை.
ஏக் நாத்தின் “கிடை காடு ” நாவல் அரிய களன் கொண்டது. பலகாலமாக நெல்லை மாவட்டத்துக் கோனார் சமூகத்தினரிடம் வெய்யிற் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மாடுகளைக் கொண்டு சென்று, கோடைக்குப் பின் சமவெளிக்கு அழைத்து வரும் பழக்கம் இருக்கிறது. அது இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை முறை. இதன் பின்னணியில் சமகால வாழ்க்கை முறையை மையப் படுத்திய நாவல்.
இரா.முருகவேளின் ‘மிளிர்கல்” சிலப்பதிகாரத்தை மீள் வாசிப்பு செய்யும் விதமாகக் கண்ணகிக்கும் பண்டைத் தமிழர் பண்பாட்டுக்கும் நவீனத் தமிழர் வாழ்க்கைக்கும் ஊடாடும் சரடை ஒட்டியது. மிகவும் வித்தியாசமான படைப்பு.
ராம் சுரேஷின் ‘கரும்புனல்’ நாவல் தமிழ் நாட்டிலிருந்து பிகார் மாநிலத்தின் சுரங்கத்தில் பணிபுரியச் செல்லும் உழைப்பாளி மூலம் சமகால அரசியலை மையப்படுத்திய நாவல்.
சுகுமாரனின் ‘வெலிங்க்ட்டன்’ நாவல் நீலகிரி மலைப்பகுதியைத் தமக்கு ஏற்றமாதிரி ஆங்கிலேயர் உருவாக்கியதை மையப்படுத்திய நாவல்.
அசோகனின் ‘போதியின் நிழல்’ நாவல் யுவான் சுவாங்கின் இந்திய விஜயக் காலத்தை ஒட்டிய நாவல்.
அசோகனின் ‘வடகரை’ நாவல் அறுநூறு ஆண்டு குடும்பக் கதையாகப் பல தலைமுறைகளின் கதைகளைச் சொல்வது.
கே.என்.சிவராமனின் “சகுனியின் தாயம்” நாவல், கிருஷ்ணமூர்த்தியின் ‘பிருஹண்ணளை” இவை மகாபாரதப் பின்னணியில் சமகால அரசியலை சமூகத்தைக் காண்பவை.
சமகால எழுத்து பற்றிய முருகேச பாண்டியனின் வாசிப்பும் பகிர்வும் நம்பிக்கை ஊட்டுபவை. சமகாலத்தில் தீவிரமான இலக்கிய ஆக்கங்கள் மற்றும் விமர்சனங்கள் மிகவும் அவசியமானவை. மூத்த படைப்பாளிகள் , சிறந்த புனைகதைகளை ஆக்கியோரைப் பற்றித் திரும்பத் திரும்பத் தன்பங்குக்கு கிட்டத்தட்ட எல்லோருமே பேசியாகி விட்டது. சமகாலத்தில் உருவாகி வரும் படைப்பாளிகளுக்கு கவனிப்பும், விமர்சனமும், ஊக்குவிப்பும் தேவை. தமிழ் இலக்கியத்தின் முன்னகர்வும் நவீனத்துவத்தின் புதிய படைப்புகளும் அப்போதே சாத்தியமாகும். இந்த திசையில் முருகேச பாண்டியனின் பணி பாராட்டுக்குரியது.
(image courtesy: facebook)