கேகேகேயும் நானும் -5
நான் வீட்டுக்குள் நுழையும் போதே கேகேகே எனக்காக் காத்திருந்தான். அவன் கையில் ஒரு “ப்ரேஸ்லெட்”.
“என்னப்பா? புதாசாயிருக்கு?” சும்மா கேட்டு வைத்தேன்.
“அவங்க மச்சுனருக்கு அவரு வாங்கித் தராரு” என்றபடி என்மீது ஒரு பொருள் பொதிந்த பார்வையையும் வீசி விட்டுச் சென்றாள் என் மனைவி.
“மச்சுனருன்னா ரெஜிஸ்டிரார் ஆஃபீஸ்ல சம்பளம் மட்டும் வாங்கிக்கிட்டிருந்தாரே அவராப்பா?”
‘அவரே தாம்ப்பா…. எதோ நம்ப சக்திக்கு ஏற்ப செய்யாலாமின்னிட்டு”
“இதானே வேணாங்கிறது.. உன் சக்திக்கின்னா டைமண்ட்லதானேப்பா செய்யிணும்”
“நீ வேறே சத்யா… எதோ அறுபதாங்கல்லியாணத்துக்கு விட்டுக்கொடுக்காம செய்யறோம்ப்பா”
“அறுபது வயசுக்கு அப்புறம் தங்கம் போட்டு அழகு பாக்குறதுக்கா?’
“ஆசைக்கி வயசு உண்டாப்பா?”
“பெரிய கொண்டாட்டமா பண்ணறீங்கன்னு சொல்லு”
“இல்லியா பின்னே… எல்லா உறவும் ஒண்ணாக் கூடி சின்னப் பசங்க கல்லியாணம் மாதிரியே இல்லே கொண்டாடப் போறோம்”
“நமக்கும் கொண்டாடறத்துக்கு எதாவது வேணும்தானே”
“சத்யா… வயசாக வயசாக நாமளாவே ஒடுங்கிடறோம். அது தப்பு. கொண்டாட்டம்… சந்தோஷம் இதுக்கெல்லாம் வயசு கிடையாது”
“பிள்ளை இருக்குற வீட்டிலேயே கிழவன் துள்ளி விளையாடலாம்கிறே”
“அப்பிடி இல்லாப்பா.. அது ஒரு சாதனையாளருக்கு நடத்தற கௌரவிப்பு விழா…”
“எந்தெந்த சாதனைக்கு…. அறுபது வருஷம் தன்னலமே குறியா வாழ்ந்ததுக்கா?
“உனக்கு சுயநலம் கிடையாதா? நீ எழுத்தாளனா சாதிக்க நினைக்கிறது சுயநலம் இல்லையா?”
“அது சுயநலம்னு நான் ஒத்துக்க மாட்டேன். அப்பிடியே வெச்சுக்குவோம். எனக்கு அறுபது வயசு ஆகும் போது கொண்டாட என்ன இருக்குங்கிறது தான் என் கேள்வி?”
” இது என்னப்பா சின்னப் புள்ளே மாதிரி கேட்டுக்கிட்டு… உன் மனைவி பசங்க எல்லாரும் கொண்டாடணுமின்னு ஆசைப் பட மாட்டங்களா?”
“அவங்க ஆசைப்படறதெயெல்லாம் நான் செஞ்சேனா? இதுல மட்டும் என்ன அவங்க பேரைச்சொல்லிக்கிட்டு நானே ஏற்பாடெல்லாம் செஞ்சி என்னோட அறுபதை ஊரே கொண்டாடுங்கங்கிறது”
இல்லேப்பா முப்பது வருஷம் குடும்ப வாழ்க்கையைக் கொண்டாட வேணாமா?”
“அந்த ஆள் அறுபது வயசுக்குள்ளே என்ன நல்லது பண்ணியிருக்கான் அல்லது அந்தக் குடும்பம் 30 வருஷத்துலே என்ன பண்ணியிருக்கின்னு யோசிக்காம கெடச்ச சான்ஸை எதுக்கு விடறதுன்னு கொண்டாட வேண்டியது தான்.. அதானே?”
“ஒரு நாள் முழுக்கக் கொண்டாட இதையெல்லாம் யோசிக்கணுமா?”
“நிறைய செலவாவுதே?”
” அதாம் பாதி மொய்யில வந்திருமே….’
‘கொடுத்த மொய்யை வசூல் பண்ண அனேகமா இறுதி வாய்ப்புங்கற. அதுக்குள்ளே பிள்ளைங்க கல்லியாணம் முடிஞ்சிருந்தா அதுதானே லாஸ்ட் சான்ஸ்”
“ஏம்பா… சமுதாயத்துக்கு எதாவது செய்யறது அது இதுங்கிறியே அவுங்க மட்டும்தான் கொண்டாடணுமின்னா வருஷத்துக்கு தமிழ்நாட்டில ஒரு கல்லியாணம் தேறினாப் பெருசு….”
“அப்பிடி சமுதாய நோக்கும் மனசாட்சியும் இருக்குறவன் அறுபதாம் கல்லியாணம் கொண்டாடுவானா? கண்டிப்பா மாட்டான்”
” இந்தப் பத்து லெட்சத்த எடுத்து தர்ம காரியத்துக்கு குடுங்கறியா?”
“அறுபது வருஷமா வசூல் பண்ணியே பழக்கப் பட்டுட்டு திடீர்னு கொடுக்க வருமா?”
“நீ அறுபது கொண்டாடாம அண்ணி மனசை வருத்தப்படுத்திடுவே போலிருக்கே…”
“என் பேரைச் சொல்லிக்கிட்டு ஏகப்பட்ட பேரு டைத்த வேஸ்ட் பண்ணறத விட இதுவே பெட்டர்”