கேகேகேயும் நானும் -7 (நரேந்திர மோடியும்)
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் ஆதார் கார்டு (புகைப்படம் இத்யாதி) விவரங்கள் பிரதான இணையத்தில் ஏறி விட்டதா என்று முயற்சித்து மறுபடியும் முயல முடிவு செய்யவிருக்கும் போது “ஏம்ப்பா… நீ ஏன் நரேந்திர மோடி பத்தி எதுவும் பேசுறதில்லே எழுதறதுமில்லே?” என்று துவங்கினான் கேகேகே.
“அவரு வருத்தப்பட்டாருன்னா சொல்லு… சும்மாப் பின்னிடுவோம்..”
“விளையாடாதப்பா… நீ அவரோட ஆதரவாளரா இல்லையா?”
“உன் கேள்வியிலேயே பதிலிருக்குப்பா”
“சிம்பிளாத்தானேப்பா கேட்டேன்…. அதுலேயே பதிலிருக்கிங்கிறே..” கேகேகே. குழம்பி விட்டான்.
“கேகேகே…. இப்போ அதிகபட்சம் ஒருத்தருக்கு இருக்குற வழி அவருடைய ஆதரவாளரா இருக்கிறது அல்லது இல்லாம இருக்கிறது…. அவருக்கு மாற்று இவர் …. அவர் போற வழிக்கு மாற்று இதுன்னு யாருமே பேசலே….”
“கொளப்பறேப்பா… எழுத்தாளருங்கன்னாலே கொழப்பிட்டுத்தான்ப்பா மேலேயே போவீங்க….”
“அவரு ஏழைக்கி எதிரி … அவரு பெருநிறுவனங்களின் தோழன்….இதானேப்பா… குற்றச்சாட்டு…?”
“ஆமாம்…”
“சரி… அவரு இதை விட்டுட்டு வேறே என்ன செய்யணும்னு யாராவது சொல்லுறாங்களா…?”
“நான் அவ்வளவு கரெக்டா… ஃபால்ல்லோ பண்ணல… சொன்னமாதிரித் தெரியலே..”
” அதுக்குக் காரணம் தெரியுமா?”
“கன்னாப்பின்னான்னு தெரியாதுப்பா… மேலே சொல்லுப்பா…’
“அவருக்கு மட்டுமில்லே எந்த நாட்டுத் தலைவருக்குமே ஒரே இலக்குத்தான்… உலகமயமாக்கத்திலே… உலகச் சந்தையிலே உன் நாட்டோட இடம் என்ன.. உன்னாலே உற்பத்தி செய்து விக்க முடியுமா…. இல்லே உன் நாட்டிலே வேறே ஒத்தன் உற்பத்தி செய்யுறதிலே கிடைக்கிற வேலைவாய்ப்பு மற்றும் வரி வகையறா வருமானம் என்னங்கிறதுதான் இலக்கு….”
“இவ்வளவு மட்டும்தான் ஒரு பிரதமமந்திரி கடமையா…?”
“இது அடிப்படையான கேள்வி… இதைத்தாண்டின பிறகுதான் வேறே கடமைகள் பத்தியே யோசிக்க வேண்டியிருக்கும்…..”
“பொருளாதாரம் தான் எல்லாமேவாப்பா?”
“கேகேகே… உன் பையன் கேம்பஸுல செலக்ட் ஆவணுமின்னு தவிச்சியா இல்லே …. ஓவரா ஊருக்கு உழைக்கிற உத்தமனின்னு பேர் வாங்கணுமின்னு நெனச்சியா?”
“என் குடும்ப வருமானப் பிரச்சனையும் என் பையனோட கேறியரும் மோடியோட எப்பிடிப்பா… கம்பேர் ஆகும்?”
“ஏன்ப்பா ஆவாது? நம்ம எல்லோருக்குமே இப்போ பொருளாதாரம் மட்டும்தான் தலைபோற பிரச்சனை… எல்லா நாட்டிலேயும் அதே தான்…..”
“அவரு எப்போப்பாத்தாலும் வெளி நாட்டுக்குப் போவுறாருன்னு சொல்லுறாங்களே….?”
“என் நாட்டுப் பொருளாதாரத்தை நீங்கதானே முடிவு பண்ணுறீங்க… உங்க கதவையே தட்றென்றாரு… வெரி பிராக்டிகல் மேன்”
“அதல்லாம் சரி… நீ அவரோட ஆதரவாளரா இல்லியா… ஆரம்பிச்ச கேள்விக்கு பதிலே சொல்லலியே….”
“இப்போதைக்கு ரெண்டுமே இல்லே…. பொருளாதாரத்தைத் தாண்டி சமூகப் பிரச்சனைகளுக்கு என்ன செய்யறாருன்னு பாக்கணும். ஆனா மக்களை அவங்க எதிர்பார்ப்பை கணிக்கிறதிலே அவரு பெரிய எக்ஸ்பர்ட்….”
“எப்பிடிப்பா சொல்லுறே?”
“இந்தியாவுலே நடக்கற எலெக்ஸனுலே நேரடியா பிரைம் மினிஸ்டரக்கு ஓட்டுப் போடற வழியே கிடையாது…. ஆனா லாஸ்ட் எலெக்ஸன் அவர் பிஎம்மா இல்லையான்னு முடிவு பண்ணும் என்கிற மாதிரி அந்த எலெக்ஸனின் பர்ப்பஸ்ஸையே அவரு மாத்திக் காட்டினாரு… மக்கள் இப்போ ஒரு தலைவரைத் தேடறாங்க… தானே அதுன்னு அவர் நிலைநாட்டினது பெரிய சாதனை… ஆதார் கார்டை உன் வோட்டர் கார்டோட லிங்க் பண்ணினியா…?”
“பண்ணமின்னு கட்டாயமா?”
“விரைவிலே கட்டாயமாகிடும்… நாளைக்கி நம்ம ஏரியாலே காம்ப்ப்…”
“ஓடர் கார்டைத் தேடணும்…” என்று விரைந்தான் கேகேகே..
(image courtesy: googleplus)
Reblogged this on vadivelkannu (வடிவேல்கண்ணு) and commented:
“பொருளாதாரம் தான் எல்லாமேவாப்பா?”