இந்திய ஆசிரியர்களுக்கான இணையதளம்
ஆசிரியர்கள் குறிப்பாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விமர்சனத்துக்கு ஆளாகிறார்களே ஒழிய அவர்களுக்கு அண்மையான எந்த ஒரு அமைப்பும் இல்லை. அவர்கள் தம் தரத்தை உயர்த்திக் கொள்ள விரும்பினாலும் தமது பணியில் இன்னும் சிறப்பாகச் செயற்பட என்ன செய்யலாம் என்று யோசித்தாலும் பகிர விவாதிக்க ஒரு ஊடகம் இல்லை. இந்தக் குறையை நீக்குகிறது http://www.teachersofindia.org/(ஆங்கிலத்தில்). http://www.teachersofindia.org/ta/ (தமிழில்).
தமிழ் இணையதளத்தில் வகுப்பறை வளங்கள் என்னும் பகுதி என்னைக் கவர்ந்தது. வகுப்பறையில் நாம் காணொளி வழி கற்பிக்க வல்லவை, எளியதாய் காகிதத் துண்டுகளை வைத்து கோணமானி செய்யும் முறை, செய்யுளை எளிதாகக் கற்பிப்பது எப்படி, கணிதம் எளிது என்று மாணவன் ஆர்வம் கொள்ள நடத்துவது எப்படி என்னும் கட்டுரைகள், காணொளிகள் நிறையவே இருக்கின்றன.
பிற பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கான கட்டுரைகள், அவர்களுக்குள் நடக்கும் விவாதங்கள் பயனுள்ளவை. தங்களைப் பற்றி “ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சியாளர்கள், கல்விக்காக இந்தியாவில் பணியாற்றும் அனைவருக்கும் இந்த இணையம் ஒரு மின் தளமாகும். இந்த மின் தளம், தேசிய அறிவுக் கழகம் (National Knowledge Commission) மற்றும் அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன் (AzimPremji Foundation) ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியாகும்” என்று குறிப்பிடுகிறார்கள் இந்த இணையத்தில்.
எஸ்.ராமகிருஷ்ணன் இணையதளத்தில் இருந்து இந்த இணையதளம் பற்றிய விவரம் எனக்குத் தெரிய வந்தது. நிச்சயம் ஆசிரியர்களுக்கு உற்சாகம் தரும் இந்தத் தளம். தம் மனதில் உள்ளதைப் பகிரும் ஒரு ஊடகமாகவும். இதனால் அரசுப் பள்ளி ஆசிரியம் மாணவர் நல்ல பயன் பெறுவர்.