குறும்படம் பற்றிய கட்டுரையை நான் ஜூன் 2015 காலச்சுவடில் வாசித்து அந்தப் படத்தையும் பார்த்தேன். ஈரானிய இயக்குனர் பாபக் அன்வரியின் இந்தப் படத்தை முதலில் பாருங்கள்.
சாளை பஷீர் தந்துள்ள படக்கதையின் சுருக்கம் இது:
பதினைந்து மாணவர்களைக்கொண்ட வகுப்பறையானது அளவளாவல்களுடன் உற்சாகக் குமிழியிட்டுக் கொண்டிருக்கின்றது. படீரெனத் திறக்கும் வகுப்பறைக் கதவின் ஓசையும் இறுகிய முகத்துடன் நுழையும் ஆசிரியரின் வரவும் மாணவர்களின் அளவளா வலைத் திடுதிப்பென முடிவிற்குக் கொண்டு வருகின்றது. வகுப்பறையில் வலிந்து திணிக்கப்பட்ட அமைதியின் இறுக்கமானது படத்தின் கருவிற்கு முன்னுரை கூறுகின்றது.
மொத்தப் பள்ளிக்கூடத்திலும் அன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களை மாணவர்கள் கடைப்பிடித்து தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என வகுப்பு தொடங்குவதற்கு முன்னர் தலைமையாசிரியர் வேண்டுகோள் விடுக்கின்றார். 2+2=5 என கரும்பலகையில் எழுதுகின்றார் ஆசிரியர். மாணவர்களைத் திரும்பத் திரும்ப சொல்ல வைக்கின்றார். இரண்டு மாணவர்கள் அதை மறுக்கின்றனர். “இதை மறுக்கும் உரிமையை உனக்கு யார் தந்தது ? நீ உட்கார்”எனஅவர்களை அடக்கும் ஆசிரியர் வெளியில் சென்று மூத்த மாணவர்கள் மூன்று பேரை அழைத்து வருகின்றார்.
கையில் சிறப்பு காவல்படைக்கான பட்டியை அணிந்திருக்கும் அந்த மூத்த மாணவர்கள் தங்களின் வெறும் கைகளைத் துப்பாக்கியைப்போலப் பாவித்து மறுக்கும் மாணவனை நோக்கிக் குறி பார்க்கின்றனர்.
இந்த மிரட்டலின் பின்னணியில் அந்த மாணவனைக் கரும்பலகையில் புதிய பாடத்தை எழுதச் சொல்கின்றார் ஆசிரியர். அவனோ 2+2=4 என எழுது கின்றான். உடனே அந்த மாணவன் சுட்டுத்தள்ளப்படுகின்றான். குருதித்துளிகள் கரும்பலகையில் உள்ள எழுத்தின் மீது தெறிக்கின்றது. மாணவனின் எழுத்தையும் அதன் மீது படிந்திருந்த அவனது குருதியையும் ஆசிரியர் கரும்பலகையிலிருந்து எந்தச் சலனமுமின்றி அழிக்கின்றார். 2+2=5 என திரும்ப எழுதுகின்றார். மாணவர்களை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்ல வைப்பதோடு இந்தப் பாடத்தைக் குறிப்பேடுகளில் எழுதவும் சொல்கின்றார். 2+2=5 என தனது குறிப்பேட்டில் எழுதும் மாணவனின் விரல்கள் 5ஐ அடித்து விட்டு, 4 என எழுதுவதுடன் படம் நிறைவடைகின்றது.
படத்தின் செய்தியாக அவர் காண்பது என்ன? அது கீழ்க்கண்டவாறு:
அதிகார வலைப்பின்னலையும் வன்முறையையும் பயன்படுத்திப் பரப்பப்படும் பொய்யின் முன்னர் முணுமுணுப்பற்ற கீழ்ப்படிதலைக்கோரும் வெறுப்புக் கொள்கையின் அதிகாரப் பசிக்கு சமூகத்தின் ஒட்டு மொத்த மனசாட்சியும் தாழ்ந்து மண்டியிட்டு விடுவதில்லை. பொய்யும் வெறுப்பும் எத்தனை வலிமையுடையதாகத் தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொண்டு உலகம் முழுக்க ஊர்வலம் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள உண்மையின் பிஞ்சு வடிவம் மட்டுமே போதும் என மானுடத்திற்கு நம்பிக்கை யூட்டி நிறைகின்றது இந்தக் குறும்படம்.
அவர் ஏன் இப்படி சுற்றி வளைத்துக் கூறுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. உண்மையில் இந்தப் படம் நமக்கு சூசகமாகத் தரும் செய்தி இன்று இஸ்லாமிய பயங்கரவாதம் இஸ்லாமின் சாராம்சமாக முன்வைக்கும் வன்முறை இஸ்லாமின் திரிக்கப் பட்ட விளக்கம். அதன் மீது சுமத்தப்பட்ட பொய். அது துப்பாக்கி முனையில் ஏற்கச்செய்யப் படுகிறது. அதற்குத் துணை போகும் நிறுவனங்கள் உண்டு. ஆனால் மலாலா போன்று இதற்கு ;எதிர்க்குரல் கொடுப்போர் புதிய வரலாற்றை எழுதப் போகிறார்கள்.
படத்தின் முக்கியான அம்சம் இது சார்லி சாப்ளின் படம் போன்று வசனங்கள் வரிவடிவில் திரையில் வரும் ஊமைப்படம். இந்தப் படம் இலக்கு வைக்கும் தாக்கத்துக்காக இந்த வடிவம். ஆசிரியர் மற்றும் பள்ளி இவை பயங்கரவாதத்துக்குத் துணை போகாவிட்டால் இந்தப் படத்தில் தன் உயிரையே தரும் ஒரு மாணவன் போல அழிந்து தான் போக வேண்டும். ஆனால் நம்பிக்கை நட்சத்திரங்கள் இதை நிராகரிக்கும் முடிவுடன் பொறுமை காக்கும் இளைய தலைமுறை.
(image courtesy:youtube)