கள்ளங்கபடமுள்ள குழந்தைகள் உலகம்
குழந்தைகள் உலகம் கள்ளங்கபடமற்றதாக, அப்பாவித்தனமாக, வெளிப்படைத்தனம் கொண்டதாக இருக்க வேண்டுமா? இருக்க முடியுமா? இருக்கிறதா? இந்தக் கேள்விகள் நாம் எதிர்கொள்ளாமலேயே கடந்து செல்பவை. நாம் லட்சிய வடிவமான ஒரு அப்பா, அம்மா, சகோதரன் , சகோதரி, கணவன், மனைவி என்று நம்மிடம் பிம்பங்களின் பட்டியல் ஒன்றே இருக்கிறது. இந்தப் பட்டியல் வெளி உலகத்துக்குப் பொருந்தக் கூடும். ஆனால் ஒரு குடும்பத்துக்குள் இந்த அணுகுமுறை மூச்சுமுட்டும் சில சதுரங்களை உருவாக்கி விடுகிறது. ஒவ்வொருவருக்கும் தனக்கென ஒரு தொல்லையில்லா இடம் கிடைப்பதில்லை. லட்சிய அம்மா அப்பா சகோதரன் சகோதரி என்னும் பிம்பங்களின் அடிப்படையில் எதிர்பார்ப்புகளை சுமத்தி விடுகிறது மொத்தக் குடும்பம் அல்லது அதன் ஒரு அங்கத்தினர். மூச்சுமுட்டாத அளவு இடம் கொடுக்க எந்தக் குடும்பத்துக்கும் முன்னுதாரணங்கள் அல்லது பாரம்பரியம் இல்லை. அதனால் இப்போதும் இல்லை. இது அனேகமாக படித்த வசதியான குடும்பங்களில் கூட இருப்பதில்லை. இதனால் எழும் உறவுச்சிக்கல்கள் மற்றும் உரசல்களை சமகால இலக்கியங்களில் சில தொடுபவை.
மறுபடியும் குழந்தைகள் உலகத்துக்கு வருவோம். குழந்தைகளைப் பெரியவர்கள் பாதிக்கிறார்கள் என்பது சொல்ல வேண்டிய அவசியமே இல்லாத ஒன்று. எந்த அளவு பாதிக்கிறார்கள்? அதன் விளைவுகள் என்ன? குழந்தைகள் உலகம் வன்முறை மிகுந்தது தானா?
இந்தக் கேள்வியை மையமாக்கிய சிறுகதை காலச்சுவடு ஜூன் இதழில் கே.என்.செந்திலின் இரண்டாமிடம். பத்து வயதை நெருங்கும் ஒரு பெண் குழந்தைக்குத் தம்பிப்பாப்பா பிறக்கிறது. அவனுக்குக் கிடைக்கும் கவனம் அவளுக்குள் பொறாமையைக் கொழுந்து விட்டு எரியச் செய்கிறது. அவள் அவனைப் பனியில் கொண்டு போய்க்காட்டி குளிர் ஜூரத்துக்கு ஆளாக்குகிறாள். பின்னர் அம்மா தன்னிடம் மருந்து கொடுக்கச் சொன்னால் அவள் கொடுக்காமல் விட்டு விடுகிறாள். அவன் இறந்தால் நல்லது என்று சாமியிடம் வேண்டிக் கொள்கிறாள். அப்பா அம்மாவின் சோகம் அவள் மனதை மாற்றிக் கடவுளிடம் அவன் பிழைக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறாள். அவன் பிழைத்துக் கொள்கிறான்.
வித்தியாசமான நாம் அனேகமாக கண்களை மூடிக்கொள்ளும் ஒரு முக்கியமான மனப்பாங்குச் சிக்கலை மையமாக்கிய கதை.