ச.சத்தியமூர்த்தியின் கவிதை ‘பட்டாம்பூச்சியானவன்”
தூரிகை சிந்திய
வியர்வை
துளித்துளி வண்ணங்களாய்
சட்டை முழுவதும்
சிதறிக் கிடக்க
கட்டிடக் காட்டில்
சுவர்களுக்கு
வண்ணம் தீட்டும்
கூலித் தொழிலாளி
இனிய உதயம் ஜுலை 2015 இதழில் வெளிவந்துள்ள சின்னஞ்சிறிய கவிதை இது. இந்தக் கவிதையில் எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்திருந்தன. ஒன்று ஒரு தொழிலாளியைப் பட்டாம்பூச்சியாகக் காட்டும் உருவகம். அடுத்தது சுறுசுறுப்பாக இயங்கும் போது மனிதனுக்கு மட்டும் வியர்க்காது தூரிகைக்கும் வியர்க்கலாம் என்னும் கற்பனை.
எளிய கற்பனை என்று தோற்றம் தந்தாலும் பட்டாம்பூச்சிக்கும் கூலித்தொழிலாளிக்கும் நிறையவே ஒப்புமைகள் உண்டு. இருவரும் சுறுசுறுப்பானவர்கள். இருவருக்கும் ஆயுள் குறைவு. இருவருமே மிகவும் தேடப்படுபவர்கள். பயன் முடிந்ததும் மறக்கப் படுபவர்கள். அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அற்பாமகவும் கருதப்படுபவர்கள். “கான் கிரீட் ஜங்கிள்” என்று ஒன்று இருந்தால் ஒரு பட்டாம் பூச்சி இருக்கத்தானே வேண்டும். இந்தத் திசையில் சென்ற கற்பனை கவித்துவம் மிகுந்தது.
இவர் சிறுபத்திரிக்கைகள் வாசிக்கிறாரா, மனுஷ்ய புத்திரன், தேவதேவன், தேவதச்சன்,யுவன், சங்கர ராமசுப்ரமணியன், சத்தியமோகன், கு.அழகர்சாமி, ஐயப்ப மாதவன் ஆகிய நவீனத்துவக் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கிறாரா என்பது தெரியவில்லை. அவர் வாசித்து அந்தக் கவிதைகள் சொல்லாமல் விட்டவை பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் தேடலும் கொண்டால் இவர் கவனிப்பும், எதிர்ப்பார்ப்பும் பெறும் நவீனக் கவிஞராக நிறைய வாய்ப்பு உண்டு. வாழ்த்துக்கள்.
(image courtesy:123rf.com)