குழந்தைகள் கடத்தலைத் தடுக்கும் ரயில்வே துறையின் நடவடிக்கை
“தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” 24.7.2015 நாளிதழில் “சைல்ட் லைன்” என்னும் தன்னார்வ அமைப்பு எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த மூன்று வாரங்களில் 40 குழந்தைகளை மீட்டிருப்பது செய்தி. குழந்தைகள் மீட்கப் பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் வாரத்துக்கு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமற் போகிறார்கள் என்பது மிகவும் கவலை அளிப்பது. “ஆறு மெழுகுவர்த்திகள்” என்னும் திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு குழந்தைக் கடத்தல் திட்டமிட்டு நடத்தப் படுவதும் அவர்கள் கொடுமைப் படுத்தப்படுவதும் என்றும் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் “சைல்ட் லைன்’ என்னும் தன்னார்வ அமைப்பும் ரயில்வே நிர்வாகமும் இணைந்து காணாமற் போகும் குழந்தைகளுக்காக நடத்தும் தகவல் மையம் பற்றிய விவரங்கள் http://tamil.livechennai.com/ல் கிடைத்தன:
“முதல்கட்ட நடவடிக்கையாக தமிழ்நாட்டில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் உள்பட 20 ரெயில் நிலையங்களில் ‘குழந்தைகள் உதவி மையம்’ அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு ரெயிலில் காணாமல் போகும் மற்றும் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரியும் ஆதரவற்ற குழந்தைகள் பற்றி 1098, 1512 என்ற இலவச எண்களில் தகவல் தெரிவிக்கலாம். காணாமல் போகும் குழந்தைகள் பற்றி உடனடியாக தகவல் தெரிவிப்பதன் மூலம் ரெயில்வே போலீசார் விரைந்து செயல்பட முடியும்”
குழந்தைக் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மனம் குரூரமானது மட்டுமல்ல திட்டமிட்டு சதி செய்யும் நுட்பமும் கொண்டது. ரயில்வே மற்றும் மாநில காவல்துறை இருவரும் ஒருங்கிணைந்து செயற்படும் முன் குழந்தைகளை வெகு தொலைவு கடத்தி விடுவார்கள்.
அரசு மற்றும் தனியார் ஊடகங்களில் குழந்தைக் கடத்தல் பற்றிய எச்சரிக்கை நிறையவே வந்தபடி இருக்க வேண்டும். ஒரு வேகத்தில் வீட்டை விட்டுக் கிளம்பி விடும் குழந்தைகளுக்கும் அது உதவும். ரயில்வேயின் நல்ல பணி பாராட்டுக்குரியது.
(image courtesy:http://tamil.livechennai.com/)