இமயமலையின் உறைபனி எல்லைப்புறம் பற்றி Frozen – ஹிந்தி திரைப்படம்
70களில் டான்னி டெங்ஜோங்க்பா அனேகமாக எல்லா ஹிந்திப்படங்களின் வில்லன். ப்ரோஸன் என்னும் ஹிந்திப்படம் 2007ல் எடுக்கப் பட்டது. அதில் அவரை ஒரு சராசரி மலைவாசித் தகப்பனாகக் காணும் போது தொடர்ந்து பார்க்கத் தோன்றியது. டிடி பாரதி தொலைக்காட்சியில் 25.7.2015 அன்று ஒளிபரப்பானது. வழக்கம் போல பாதிக்கு மேல் தான் பார்த்தேன். ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனான டான்னி வறுமை காரணமாக அவர்கள் ஊர் பக்கத்தில் உள்ள ஒரு பணக்காரனிடம் “உனக்கு அடிமையாக வேண்டுமானாலும் சேவை செய்கிறேன்… எனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது….” என்று மன்றாடுகிறார். ” நீ அடிமையாக வேலை செய்து பயனேதுமில்லை….உன் நிலம் இப்போது ராணுவம் முகாம் அமைத்ததால் விலைமதிப்பை இழந்து விட்டது… என்னோடு வியாபாரம் செய்ய உன்னிடம் என்ன இருக்கிறது? ” என்று பேச்சைத் தொடரும் அவன் “உன் மகள் இப்போது பள்ளிக்கூடம் போகிறாளா?” என வினவுகிறான் .டான்னி ” அவளுக்கு இப்போது விடுமுறை நாட்கள்..’ என்று அமைதியாக பதிலளிக்கிறார். ” அவளை அனுப்பி வை. என் மனைவி ஊரிலில்லை என்கிறான் நடுவயது கடந்த அந்தப் பணக்காரன்..” கடுமையான ஆத்திரத்துடன் டான்னி எழுந்து வந்து விடுகிறார். வீட்டுக்குத் திரும்பும் போது மலையிடையே செல்லும் “வேன்” ஒன்றில் அவர் குலுங்கிக் குலுங்கி அழுவது நெஞ்சை உலுக்கும் காட்சி. மறு பக்கம் அந்தப் பணக்காரனின் மகன் இந்த இளம் பெண்ணை மணந்து கொள்ள விரும்புகிறான். அவளுக்கு சம்மதமில்லை. இளம் வயதிலேயே அம்மாவை இழந்த அவள் தன் அப்பாவே தனக்கு யாவுமாக இருக்கிறாள். கனவுகளிலும் வானத்தில் பறப்பது போன்ற கற்பனைகளிலும் திளைக்கும் அவளுக்கு, அவளது வீட்டின் மிக அருகில் வந்த ராணுவ முகாம் மிகப் பெரிய தடையாக ஆகிவிடுகிறது. அவளால் பழையபடி எங்கும் போய்வர இயலவில்லை. முகாமின் வேலிக்குள் புகுந்தே அவள் எங்கும் போய் வர வேண்டும். ஏதோ ஒரு தூரத்து ஊரில் உள்ள கடைவீதியில் பல பொருட்களை வாங்கி வரும் தந்தை அவள் கண்ணெதிரேயே துப்பாக்கிச் சண்டையின் ஊடே மரணமடைகிறார். அவர்களது வீடும் தரைமட்டமாகிறது. ஒருவருடம் கழித்து என்னும் ‘ஸ்லைடு” க்குப் பிறகு அந்தப் பெண் காட்டப் படுகிறாள். அவள் ராணுவ உடை அணிந்து அந்தக் கூடாரத்துக்கு உள்ளேயே சமைக்கும் பணியில் இருக்கிறாள்.
“இந்தக் கூடாரத்துக்கு வெளியே இருந்ததை விடவும் உள்ளே மிகவும் சுதந்திரமாக உணர்கிறேன் என்று கூறி அவள் தன் பாழடைந்த வீட்டின் நிலைப்படியைத் தாண்டி விரியும் மலையைக் காண்கிறாள். அப்போது தான் திரையில் முதன் முதலாக வண்ணத்தில் மலை காட்டப் படுகிறது. அதுவரை படம் கருப்பு வெள்ளையாகவே காட்டப் பட்டது.
எல்லைப்புறத்தில் உள்ள மக்கள் படும் இன்னல்கள் நாம் அறியாதவை. நமக்கு அக்கறையுமில்லாதவை. பனியில் வறண்ட மலைப்பகுதியில் போக்குவரத்து வசதி அல்லது பொருட்களுக்கான சந்தை, வேலைவாய்ப்பு எதுவுமே இல்லாமல் வாழ்க்கையுடன் போராடும் மக்கள் பற்றித் தெரிந்து கொள்கிறோம்.
படத்தில் ஒரு முக்கியமான காட்சி இது. டான்னி புத்த மடத்தின் பிட்சுவிடம் தன் காலத்துக்குப் பின் தன் மகளின் கதி என்னாகும் என்ற கவலையைப் பகிர்ந்து கொள்கிறார். நேரடியாக பதில் சொல்லாத பிட்சு. புத்தரிடம் தனது ஒரே மகன் இறந்த பின் அவனை உயிர்ப்பிக்க வேண்டிய தாயிடம் “மரணமே நிகழாத வீட்டில் இருந்து ஒரு பிடி எள் வாங்கி வாருங்கள்” என்று கூறிய கதையை விளக்கிச் சொல்லி எல்லாம் இறையறுளில் மேற்செல்லும் என்று கூறுகிறார். ஆழமான படம் இது.
இப்படம் பெற்ற விருதுகள்:
National Film Awards
Indira Gandhi Award for Best First Film of a Director – Shivajee Chandrabhushan
National Film Award for Best Cinematography – Shanker Raman
Durban International Film Festival – Best Cinematography – Shanker Raman
Osian-Cinefan Film Festival, Delhi – Special Jury Award
(award details courtesy:wiki)