வாஸந்தியின் சிறுகதை “கருவறையின் ஓலம்”
என்றும் மீளாத் துயராக ஆழ்மனதில் நீள்வது புத்திர சோகம். படைப்புகள் இந்தத் துயரை மையமாக வைத்து நிறையவே வந்திருக்கின்றன. ஒவ்வொரு படைப்பும் அந்த சோகத்தின் மற்றொரு பரிமாணத்தை நம் முன் நிறுத்துகிறது.
ஒரு தாய் பல ஆண்டுகளுக்கு முன் தான் பிள்ளையைப் பறி கொடுத்த சோகம் மீண்டும் புதிய ரணமாக ஆழ்மனதில் இருந்து வெளிப்பட அவள் கொள்ளும் வலியும் போராட்டமுமே வாஸந்தியின் சிறுகதை “கருவறையின் ஓலம்”.
நேபாளத்தை சூறையாடிய நிலநடுக்கம் பற்றிய காணொளிகளை வயது முதிர்ந்த பெண் எழுத்தாளர் காண்கிறார். தொலைக்காட்சியில் ஒரு தாய்
தன் மகனுக்காக எடுத்து வைத்த உணவை இடிபாடுகளிடையே தேடுகிறாள். தன் குழந்தை உயிரோடு இருக்கிறதா என்று அவளுக்குத் தெரியவில்லை. பதட்டமும் பரபரப்புமாகக் காட்சி தரும் அவள் முகம் ஆழ்மனதில் எழுத்தாளருக்குள் உறைந்து கிடந்த புத்திர சோகத்தை ரத் தம் சொட்டும் அண்மைக் காயமாக வெளிக்கொணர்கிறது. ஏனோ உடனடியாக வாரணாசிக்குப் போக வேண்டும் என்று அவருக்குத் தோன்றுகிறது. முதலில் அது தேவையில்லை என்று வாதிடும் கணவர் மனம் மாறி அழைத்துச் செல்கிறார். தனிமையில் கங்கை நதிக்கரையில் அமர்ந்திருக்கும் அவர் அருகில் வரும் இளைஞன் அவருக்கு தனது (காலமான) மகன் கோபாலாகத் தெரிகிறான். “வா சாப்பிடலாம் ” என்று அவனைக் கரம் பற்றி அழைத்துச் செல்கிறார். ஒரு உணவகத்தில் அவனுக்கு வயிறு நிரம்ப பல உணவு வகைகளை வாங்கித் தருகிறார். மீரா பஜன் நடக்கும் இடத்தில் பிற பக்தர்களுடன் சேர்ந்து அவனும் அவரும் நடனமாடுகிறார்கள். இவர் மீண்டும் மீண்டும் கோபால் என அழைக்க அவன் “என் பெயர் ராகவ். காலமாகிவிட்ட என் அம்மாவின் பாசத்துடன் தாங்கள் உணவளித்தீர்கள்” என்று மனம் நெகிழ்ந்து நன்றி கூறி விடை பெறுகிறான். கணவரிடம் இவை அனைத் தையும் விவரிக்கிறார் எழுத்தாளர் ” தால்ஸ்தாயின் சிறுகதையில் மார்டின் என்னும் குழந்தையை இழந்த ஒருவனுக்கு கடவுள் பல வடிவில் தெரிந்தது போல நம் கோபால் ராகவாக வரும் முன் என் கனவில் வந்தான்”. கணவருக்கு அவர் புத்தி பேதலித்ததாகவே தோன்றுகிறது.
தீராநதி ஜூலை 2015 இதழில் வெளிவந்துள்ள இந்தச் சிறுகதை நம்மை ஆழமாகக் கீறுகிறது. இறந்தவர்களுக்கு உணவளிக்கும் நம்பிக்கை இதன் மையச் சரடாக இருப்பதே காரணம்.
பக்த மீரா பற்றி கதை இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறது. மீரா இறைவன் கண்ணன் மீது வைத்திருந்தது காதலுக்கும் பல படிகள் மேலான ஆன்மீகப் பிணைப்பு.
ஒரு தாய் தன் குழந்தை மீது வைத்திருப்பதும் அன்பு அல்லது ரத்த பாசம் என்னும் அடையாளங்களைத் தாண்டி ஆன்மீகப் பிணைப்புதான். எந்தக் குழந்தையிடமும் அதே பாசத்தைக் காட்டுவதும் எந்தக் குழந்தையிலும் தன் குழந்தையைக் காண்பதும் ஒரு தாய்க்கு சாத் தியமே. அது நிகழாமற் போகலாம். அபூர்வமாக நிகழும் போது ஆன்மீகமானது.
மீண்டும் இறந்தவருக்கு உணவளிக்கும் நம்பிக்கைக்கு வருவோம். அது மூடநம்பிக்கைதான். ஆனால் ஆறாத ஒரு காயத்துக்கு, மாறாத ஒரு சோகத்துக்கு மருந்திடும் சடங்கு. காக்கையோ மற்றொரு மனிதனோ அவர்களிடம் நாம் நேசித் தவரைத் தற்காலிகமாகக் காண முடிகிறது. ஆழ்மனதில் என்றும் நீளும் துயரை அனுபவிக்கும் ஒரு தாயின் வலிக்கு அது அருமருந்தே.
சிறுகதையில் ஒரு சக (பெண்) எழுத்தாளர் “வரவர நீ வலது சாரியா ஆகிக்கிட்டே வரே” என்கிறார். வலி கோட்பாடுகளின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டதே.
(image courtesy:penguinbooksindia.com)