தொலைக்காட்சிகளின் வணிக நோக்கைக் கண்டிக்கும் இமையத்தின் சிறுகதை “வற்றாத ஊற்று”
உயிர்மை ஜூலை 2015 இதழில் இமையத்தின் சிறுகதை “வற்றாத ஊற்று” முழுக்க முழுக்க தொலைக்காட்சிகளைத் தாக்குகிறது. பரபரப்பு மற்றும் வெகுஜென கவனிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மட்டுமே தொலைக்காட்சிகள் செயற்படுவதாக அழுத்தம் திருத்தமாக ஒரு சிறுகதை பேச வேண்டும் என்று இமையம் விரும்பி இருப்பது படைப்பில் வெளிப்படுகிறது. புனைவு நுட்பங்கள் இல்லாமல் நேரடியாகப் பேசும் கதை. ஒரு புதிய தொலைக் காட்சியின் முதலாளி தனது புது நிருபர்களுக்குத் தரும் அறிவுரைகளே முழுக்கதையும். அந்த அறிவுரையின் சில பகுதிகள்:
“எத சொன்னாலும், எதக் காட்டுனாலும் சுனாமி வந்த மாதிரி, நில நடுக்கம் வந்த மாதிரி, வெள்ளப் பெருக்குல ஆயிரம் பேர் செத்த மாதிரி சொல்லணூம் காட்டணும்”
“எப்பவும் உங்க பார்வ பொம்பளைங்க, அரசியல்வாதிங்க, சினிமா நடிகருங்க, நடிகைங்க பக்கம் இருக்கணும். அவங்கள சுத்தியே தான் உங்க மைக்கும் கேமராவும் போவணும். அவுங்க தான் நமக்கு நியூஸ் கொடுக்கிற ஊத்து”
“சமூகத்தில பொறுமை கொறைஞ்சுக்கிட்டே வருதுங்கறத ரிமோட்ட வெச்சே தெரிஞ்சிக்கலாம். அடுத்து என்ன, அடுத்து என்னங்கற மனோபாவம் வளந்து போச்சு. அதுக்கு வசதியா ரிமோட் இருக்கு. ரிமோட்ட அழுத்தாம வியுவர்ஸத் தடுக்கணும். நம்ம சேனலதான் பாக்கணும். ”
“கார் ஆக்ஸிடண்டு, ஃபையர் ஆக்ஸிடண்டு, பில்டிங் ஆக்ஸிடண்டு நடந்த இடத்துக்குப் போவும் போது -போன வேகத்துல உதவி செஞ்சிக்கிட்டு நிக்கக் கூடாது. நீங்க உதவி செஞ்சிக்கிட்டு இருக்கிற நேரத்தில அடுத்த சேனல்காரன் நியூஸ்ரெடி பண்ணி டெலிகாஸ்ட் செஞ்சிடுவான்”
இமையத்தின் இந்தக் கதை சமகால வாழ்க்கையின் சித்தரிப்புக்காக கவனம் பெறும்.