அப்துல் கலாம் – அறிவியலும் மானுடம் முழுமைக்குமான கனவுகளும் ஆன பெருவாழ்வு
கிராமப்புறத்தில் தமிழ் வழியில் கல்வி கற்ற ஒருவர் இந்தியா செயற்கைக் கோள்களை அனுப்பும் “ராக்கெட்” தொழில் நுட்பத்தில் தன்னிறைவு காண்பதை உறுதி செய்யும் அளவு உயர்ந்தார். விஞ்ஞானியாக இருந்த போதும் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதும் அவருக்கு நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மானுடத்துக்குமான கனவுகள் நிறைய இருந்தன. ஒரு நாடு தொழில் நுட்பத்தில் யாரையும் சாராமல் இருந்தால் மட்டுமே தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்பது அவரது தெளிவான கருத்தாக இருந்தது. இந்தியா அப்படி வலிமையடைய வேண்டும் என்பதே அவரது செய்தி. கோட்பாடு அல்லது அரசியல் அடிப்படையில் யாருடனும் அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
மாணவ மாணவிகளுக்கு அண்மையான இன்னொரு அறிஞர் மற்றும் தலைவர் அவரைப்போல யாருமே இல்லை. தனி நபர்கள் அனுப்பும் மின்னஞ்சலுக்கும் அவர் 24 மணி நேரத்துக்குள் பதில் வரும் என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இளைஞர்கள் மற்றும் சமூகம் முழுவதுடனுமே அவர் ஒரு தொடர் உரையாடல் நடத்தி வந்தார். Green Kalam Movement என்று மரம் நடும் பணி அவர் பெயரில் தொடங்கப் பட்ட போது லட்சக்கணக்கான மரங்களை நடுங்கள் என்று அறிவுறுத்தினார். கிண்டியில் அவர் பாதுகாப்பை ஒட்டி 10 மரங்கள் வெட்டப் பட்டன. பதிலாக 100 மரங்களை நடச் செய்தவர்,
தாம் வகித்த பதவிக்கும் தமக்குக் கிடைத்த விருதுகளுக்கும் கௌரவம் தேடித் தரும் வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தமிழ் நாட்டில் மிகக் குறைவு. அவர்களில் ஒருவர் அப்துல் கலாம்.
அவர் வழிகாட்டுதல் இன்னும் இருக்கிறது. ஆனால் அவர்தான் இல்லை. அவருக்கு என் அஞ்சலி.