தன் குடும்பப் பெரியவரை இழந்த சோகம் தமிழகமெங்கும்
பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல தெருமுனைகள் பலவற்றில் அமரர் அப்துல் கலாம் அவர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலியை என்னால் காண முடிந்தது. சிறு சிறு கடைகளில் கூட அவருடைய புகைப்படங்கள் அஞ்சலிக்காக இருந்தன. ஒரு கடைக்காரர் ஒரு நாளிதழில் வந்திருந்த பெரிய புகைப்படத்தை அப்படியே கடையின் சுவரில் ஒட்டி இருந்தார்.
அப்துல் கலாம் தன் புகழ் பாடும் கூட்டம் எதையும் சேர்க்கவோ அப்படிப்பட்ட முயற்சிகளை ஊக்குவிக்கவோ இல்லை. எந்த அமைப்பும் இப்படி ஒரு இரங்கலை ஏற்பாடு செய்யவில்லை. அடிமனதில் இருந்து தம் வீட்டுப் பெரியவரை இழந்த சோகத்தை நான் பலரின் உரையாடல்களில் புலம்பல்களில் காண்கிறேன். வயதாகித்தான் இறந்தார் என்றாலும் எனக்கும் யாருக்கும் இன்னும் மனம் ஆறவே இல்லை.
தன் வாழ்க்கையை தமது அறிவுரைகளைக் காட்டிலும் ஒரு நிஜ உதாரணமாக வாழ்ந்து காட்டினார் அந்த மாமனிதர். அரசு என்னும் அமைப்பை நாம் குறை கூறாத நாளே இல்லை. அந்த அமைப்பின் நூற்றுக்கணக்கான சட்ட திட்டங்களுக்கும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்டு அவர் ராக்கெட் தொழில்நுட்பத்தை, ஏவுகணைகளை உருவாக்கினார்.
யாரையும் குறை கூறாமல் நேர்மறையாகத் தம் கனவு இந்தியா உருவாக இன்றைய இளைய சமுதாயத்தை அவர் மீண்டும் மீண்டும் நாடினார். அவர்களுடன் உரையாடினார். மக்களை அவர் நேசித்தார். அது அவரது எல்லா செயல்களிலும் செய்திகளிலும் வெளிப்பட்டது. மக்கள் அவரை உண்மையாகவே நேசிக்கின்றனர். அரசியல் சார்பில்லாத, சினிமாப் பின்னணி இல்லாத ஒரு மாபெரும் தலைவருக்குத் தமிழ் மக்கள் தரும் இந்த ஆழ்ந்த சோகம் மிக்க அஞ்சலி அவர்கள் நல்ல தலைவர்களை இனங்காணக் கூடியவர்கள் என்றே காட்டுகின்றன.
இலவசங்களை வேண்டாம் என்று கூறி குழந்தைகளுக்கு ஊட்ட உணவும் தரமான ஆரம்பக் கல்வியும் என்று தமிழ் மக்கள் கேட்பார்களோ அன்று அப்துல் கலாம் கனவு கண்ட வலிமையான நாடு தானே உருவாகும்.
தொடக்கக் கல்வி தரமாக இருக்க வேண்டும், மாணவர்களின் கற்பனை மற்றும் புதுமை படைக்கும் வித்தியாசமான அசல் சிந்தனை இவைகள் தூண்டப்பட வேண்டும் ஆதரிக்கப் பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வந்தார்.
இளைய தலைமுறைக்குக் கல்வி, மரியாதை, சுதந்திர சிந்தனைக்கான வாய்ப்பு இவற்றை நாம் கொடுக்க வேண்டும். அந்த திசையில் முன்னேற வேண்டும். அதுவே நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையும் அஞ்சலியும்.
(image courtesy: face book)