“காதுகள்” பின்நவீனத்துவத்துவ நாவல்- சாருநிவேதிதா கட்டுரை
எம்.வி.வெங்கட்ராமின் “காதுகள்” நாவல் பின் நவீனத்துவமானது என்னும் விமர்சனக் கட்டுரையை தினமணி இணையதளத்தில் வாசித்தேன். அதன் முக்கியமான பகுதி இங்கே:
புனிதங்களைச் சிதைத்தல் (Decanonization/Sacrilege): இது ஒரு மிக முக்கியமான பின்நவீனத்துவக் கூறு. பின்வரும் பகுதியைப் பாருங்கள்:
அவள் (ஆதி பராசக்தி) நகைகளை எடுத்து எறிந்துவிட்டு ஆடை களையலானாள். அவசரஅவசரமாகச் சேலையையும், உள்பாவாடையையும், ஜெட்டியையும், சோளியையும், பிராவையும் மட்டும் அல்ல, சதையையும் கழற்றி எறிந்துவிட்டுக் காமத்தின் பிறந்த மேனியாக அவனிடம் ஓடிவந்தாள். அந்தக் காம கோரம் தன்மேல் பாய்வதையும், தான் தரையில் சாய்வதையும் உணர்ந்தான். செய்வதறியாது, அவன் அகமுகமாய் முருகா முருகா என்று கூவினான்.
‘ஆத்மஞானம் – SELF REALISATION என்பது இதுதான். You realise yourself by transcending flesh by means of flesh. Was that not a marvelous experience? Oh, you want a repeat perfomance? . . . No, no, not now. I’am damn tired. Thank you very much, Mali! Ta ta . . .,’ என்றவாறு அந்தப் பெண்ணுருவம் மறைந்தது.
ஒலிச் சித்திரம் போல் தொடங்கி, பிறகு நாளடைவில் காதுகளில் குரல்கள் உருவாக்கும் காட்சிகளைத் தொலைக்காட்சி போல் தன் கண்களால் பார்க்கவும் ஆரம்பிக்கிறான் மாலி. கடவுள்களின் நாடகம் முடிந்து பார்வையாளர்கள் ‘அரங்கத்தை’ விட்டு வெளியே போய்க் கொண்டிருக்கிறார்கள். ‘ஹீரோயின் ரொம்ப ஷோக்கா இருக்கா, அவளை ஒரு ராத்திரி எங்கேஜ் பண்ணிக்கப் போறேன்’ என்கிறான் ஒருவன். ஹீரோயின் என்பது இங்கே அகிலாண்ட பரமேஸ்வரி, ஆதி பராசக்தி.
புனிதங்களை உடைத்தல் என்கிற போது எம்.வி.வி. எந்தத் தயவு தாட்சண்யமும் இல்லாமல் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளின் புனிதத்தைக் கூட உடைக்கிறார். தங்கள் மொழியைத் தெய்வமாகக் கொண்டாடும் ஒரு சமூகத்தில் இந்த உடைப்பை நிகழ்த்தியிருக்கிறார் எம்.வி.வி.
திடீர் திடீரென்று, தேவையே இல்லாத இடங்களிலும் அவர் பயன்படுத்தும் கொச்சையான தமிழ்ச் சொற்களையும், திடீரென்று ஆதி பராசக்தி பேசும் ஆங்கில வசனங்களையும் பாருங்கள். கொச்சையான வசனங்களைப் பேசுவது கீழ்த்தட்டு விளிம்புநிலை மனிதர்கள் அல்ல; தெய்வங்கள்! அதேபோல் சம்ஸ்கிருதத்தையும் விடவில்லை. குரல்வளையைப் பிடித்து விழி பிதுங்கச் செய்கிறார் எம்.வி.வி. உதாரணமாக, அகம் பிரம்மாச்மி என்றே குறிப்பிடுகிறான் கறுப்பன். வேதங்களும் அதே பகடிக்கு உள்ளாகின்றன. பாரதியின் பாடல் உச்சக்கட்ட கிண்டலுக்கு உள்ளாகிறது. பொதுவாக, இசையிலோ மொழியிலோ கலகம் செய்பவர்களுக்கு அதன் சாஸ்த்ரீய வடிவத்தில் மேதமை இராது. இலக்கணத்தை உடைத்துப் புதுக் கவிதை எழுபவர்களுக்கு இலக்கணம் தெரியாது. ஆனால் எம்.வி.வி. காதுகள் நாவலில் மிக அற்புதமான, காவிய நயம் ததும்பும் பல்வேறு இடங்களை சிருஷ்டித்திருக்கிறார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பகடி: காதுகள் முழுவதுமே பகடிதான் என்றாலும் ஒரு உதாரணம் தருகிறேன். ஒருமுறை தன் கஷ்டம் தீர ஒரு துறவியிடம் செல்கிறான் மகாலிங்கம். அதற்கு எதிராகக் கூச்சலிடுகின்றன காதில் வசிக்கும் பூத கணங்கள். அப்போது ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்க வந்த இளம் பெண்களிடம் வம்பு செய்கின்றன சில குரல்கள். குளம், தண்ணீர், இளம் பெண்கள் எல்லாமே virtual reality. எல்லாமே பிரமை. (Inception படத்தை இங்கே நினைவு கூரவும்.) அந்தப் பெண்கள் தங்களைக் கிண்டல் செய்பவர்களைத் திட்டுகிறார்கள். அதற்கு அவைகள், நீங்க இருக்கீங்களா, இல்லீங்களா, போறீங்களா, வர்ரீங்களா – எது நெசம்னே தெரியல்லே என்கின்றன. (அந்தத் துறவி மாலியிடம் சொன்ன ஒரு தத்துவார்த்த விளக்கத்தையே இப்படிப் பகடி செய்கின்றன குரல்கள்.) ‘நீங்களெல்லாம் என்ன குடித்து விட்டு வந்து எங்களுடன் ரகளை செய்கிறீர்களா?’ என்று கேட்கிறார்கள் அந்தப் பெண்கள். ‘டீ, அதாண்டி அந்தப் பண்டாரம் சொன்னான்’ என்கிறது ஒரு குரல். பண்டாரம் என்று குறிப்பிடுவது துறவியை.
‘அப்படீன்னா அவன் குடிச்சிருப்பான்’ என்று முடிக்கிறது இன்னொரு குரல். படித்துறைப் பெண்களும், அவர்களை ஈவ் டீசிங் செய்யும் ரவுடி பூதகணங்களும் வரும் இந்த இடத்தை நான் படித்த பின்நவீனத்துவப் பிரதிகளிலேயே உச்சக்கட்ட பகடி என்று கூறுவேன். இந்தப் பகடியை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள நீங்களே இந்த நாவலை முழுமையாக வாசித்து விடுவது நல்லது.
இந்தப் பகுதியை மட்டும் வாசித்தால் நஷ்டம் வாசகருக்கே. மிகவும் அக்கறையுடன் சாருநிவேதிதா பின்நவீனத்துவம் பற்றிய ஒரு விரிவான புரிதலை நமக்குத் தருகிறார். பின்நவீனத்துவம் பற்றிய முக்கியமான பதிவுகளில் இது ஒன்று.
இந்தக் கட்டுரையில் சாரு தொட்டுவிட்டுச் சென்ற ஒன்றை விரிவாக அவர் எழுதி இருக்க வேண்டும். அது இது தான்:
“இதே உதாரணம், எம்.வி. வெங்கட்ராமுக்கும் பொருந்தும். அவருக்குப் பின்நவீனத்துவம் குறித்தோ, ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து பற்றியோ தெரியாமல் இருக்கலாம். ஆனால் அத்தகைய எழுத்தை அவர் உருவாக்கினார்.”
அதாவது ஒரு அசலான படைப்பை உருவாக்கும் படைப்பாளி அது பின்நவீனத்துவமானது என்று முடிவு செய்யாமல் அந்தப் பிரதி எந்த வடித்தில் வர வேண்டுமோ அல்லது அந்தப் பிரதி தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொண்டதோ அப்படி வடிவமைத்தார்.
ஒரு பிரதி அதாவது ஒரு அசலான பிரதி ஒரு படைப்பாளியின் உள்ளே உறுத்திக் கொண்டே இருக்கும். அது வெளிப்படும் போது உருவம் உள்ளடக்கம் இவை தானே அமைகின்றன. படைப்பாளியின் சொல்லாற்றலும் புனைவுத்திறனும் இயல்பாகவே வெளிப்படும் அது வேறு. ஆனால் ஒரு படைப்பாளி இது இருத்தலியல் படைப்பு இது பின்நவீனத்துவப் படைப்பு என்று முடிவு செய்து எழுதத் துவங்க முடியாது. கதை கருக்கொள்ளும் போதே உருக்கொள்ளவும் செய்யும், படைப்பாக்கத்தின் உச்சத்தில் ஒரு படைப்பாளி தானே ஒரு கருவியாக மாறி விடுகிறான்.
ன். அதே போல பின்நவீனத்துவ எழுத்தாளர் இவர், செவ்விலக்கியப் படைப்பாளி இவர், நவீனத்துவத்தின் உதாரணம் இவர் என்றெல்லாம் படைப்பாளிக்குள் பாகுபாடு கிடையாது. தனது பிரதிக்குத் தன் திறமையெல்லாம் ஒன்று திரட்டி உயிர் கொடுப்பான் படைப்பாளி. அதன் வடிவம் அமைவது பிரதிக்குப் பிரதி வேறு படலாம். படைப்பாளிகள் இந்த வெற்றியில் கலைத் தன்மையின் மாறு படலாம். ஆனால் அவர்களுக்குள் தரவரிசை என்று ஒன்று கிடையாது. இது என் கருத்து. ஏற்கப் படாது என்று தெரியும்.
This man is a fraud.