குற்றம் கடிதல் -ஆசிரியரின் வன்முறையை விமர்சிக்கும் படம்
சில விஷயங்களைக் கூறி இந்த விமர்சனத்தைத் தொடங்க வேண்டும்:
குற்றம் கடிதல் ஒரு நல்ல முயற்சி அவ்வளவே.
சற்றே பிரசார வாடை அடிக்கும் படம்.
மாணவர்களின் பக்கம் என்ன என்பதை சரியாகக் காட்டவில்லை. அல்லது விட்டு விட்டார்கள்.
சரி இத்தனையையும் மீறி அது ஏன் பாராட்டுக்குரிய படம் என்பதையும் பார்த்து விட்டு விமர்சனம் செய்யலாம். குழந்தைகள் நலன், குழந்தைகளின் மன நலன், ஆசிரியர் மாணவர் உறவு, பள்ளிச் சூழல் இவை பற்றி உண்மையான அக்கறையுடன் படங்கள் வருவதே இல்லை.
அடூர் கோபால கிருஷ்ணனின் சிதம்பரம் படத்தைப் பார்த்தவர்களுக்கு அது ஒரு மனிதனின் குற்ற உணர்ச்சியை சித்தரிப்பதில் கொண்டுள்ள வெற்றி பிரமிப்பு தரும். இந்தப் படம் ஒரு ஆசிரியையின் குற்ற உணர்ச்சியை துல்லியமாகச் சித்தரித்து அது பார்வையாளனைத் தொற்றுமளவு படைப்பாக ஆகி இருக்கிறது. எனவே பாராட்டுக்குரியது. ஊடகங்கள் விளம்பரம் மற்றும் நிறைய பேர் பார்க்கும் பரப்புக்காகச் செய்யும் மட்டமான வேலைகளை கவனத்துக்குரியதாக்கி இருக்கிறார்கள்.
படத்தின் ஒரு வரிக் கதை மாணவனை அடித்த ஆசிரியையின் குற்ற உணர்ச்சியும் அவளிடம் ஏற்படும் மனமாற்றமும் அவ்வளவே. இந்தக் கதையை 2 மணி நேரத்துக்கும் மேலே ஓடும் திரைக்கதையாக உருவாக்கி இருப்பது திறமை தான். படம் மாணவர்களுக்கு “பாலியல் கல்வி” தேவையா இல்லையா என்ற கேள்வியுடன் துவங்குகிறது. அது பற்றி ஆசிரியர்கள் விவாதிக்கிறார்கள். ஒரு பெண் ஆசிரியை பதின்களில் உள்ள குழந்தைகளுக்கு குழந்தை பிறக்கும் முறை பற்றி வகுப்பு எடுக்கிறார். அவ்வளவே. அத்துடன் படம் அந்த முக்கியமான விவாதத்தைக் கைவிட்டு விடுகிறது. மாணவர்கள் குடும்பச் சூழலாலும், சமூகத்தின் போக்காலும் எதிர்கொள்ளும் மனச்சிக்கல்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் மூலமாக வெளிப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
இந்தப் படம் முக்கிய கதாபாத்திரமான அந்த ஆசிரியையின் குற்ற உணர்வைப் படிப்படியாகவும் பல்வேறு பரிமாணங்களிலும் காட்டுவது தமிழ் சினிமாவில் பார்க்கவே முடியாத சித்தரிப்பு மற்றும் பாத்திரப் படைப்பு. முழுமனதுடன் ஹிந்துவை மணந்து நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் இட்ட அந்தப் பெண் குற்ற உணர்வில் மன அழுத்தத்தில் ஏசு இவற்றை ஏற்க மாட்டாரோ என அவற்றை அழிப்பது முக்கியமான காட்சி. பாதிக்கப் பட்ட மாணவனின் தாயின் கையை எடுத்துத் தன் கன்னத்தில் அடிக்கும் படி அவள் தானே செய்வதும் அப்போது கதறி அழுவதும் கல்லையும் கரைக்கும் ஒரு அபூர்வமான காட்சி. இந்தக் காட்சி போல மனதைத் தொடும் காட்சி தமிழ்த் திரைப்படங்கள் எதிலுமே சமீபத்தில் இல்லை. ராதிகா ப்ரசிதா என்னும் பெண் அபூர்வமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இது போல ஒரு கதாபாத்திரம் கிடைக்க புகழ் பெற்ற நடிகைகளுக்கே கொடுப்பினை இல்லை. ஆட்டோ ஓட்டுனராக வரும் பெண் தோற்றம் சாதாரணமாக இருந்தாலும் நடிப்பில் மனதில் பதிகிறார்.
பள்ளியின் சூழல் யதார்த்தமாகக் காட்டப் பட்டிருந்தாலும் பாடல்கள் மற்றும் பல காட்சிகள் சினிமாத்தனமானவையே. தவிர்த்திருக்க வேண்டும். சின்னஞ்சிறுக்கிளியே என்னும் பாரதியார் பாடல் மிகவும் இனியதாக இசையமைக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
மாணவர்கள் ஆசிரியர் உறவு வன்முறையற்று, பள்ளி என்பது மற்றொரு குடும்பமாக இருக்க வேண்டும் என்னும் மையக் கருத்து விவாதத்துக்கும் கவனத்துக்கும் வருமளவு இதன் தாக்கம் இருக்கும். சரியான திசையில் இயக்குனர் பிரம்மா செல்கிறார். இன்னும் நுட்பமான திரைக்கதையும் கருவும் முழுமையான படங்களை அவர் தர முயற்சித்தால் அவர் இந்தத்துறையின் சிறந்த இயக்குனரில் ஒருவராக உயர வாய்ப்பிருக்கிறது. வாழ்த்துக்கள்.