கிளியோபாட்ரா மையமாக பொற்றேகாட்டின் மலையாள சிறுகதை
அழகுக்காக மட்டுமா கிளியோபாட்ரா அறியப் பட்டாள்? அவளது குரூரத்துக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் சேர்த்துத்தான். அவளைப் பற்றி அறிந்தவற்றால் கதைசொல்லி மிகவும் ஈர்க்கப்பட்டவன். அவன் அவளைப் போலவே ஒருத்தியை சந்திக்கிறான். ஆனால் அவள் குரூரமானவளில்லை. கருணை மிகுந்தவள். அவளது வாழ்க்கை வரலாற்றில் வரும் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளை கதை சொல்லி நினைவு கூர்கிறான். ஒரு அரசனிடம் (ஆன்டானி) உலகிலேயே விலை அதிகமான இரவு உணவை உனக்கு வழங்குவேன் என்று அவள் சவால் விடுகிறாள். அவன் உணவு உண்டு முடிக்கும் முன் அவள் தோற்றதாகக் கூறுகிறான். அப்போது தான் அணிந்துள்ள விலை அதிகமான இரு முத்துக்களை வெனிகர் கரைசலில் இட்டு அவை கரைந்த பின் அவள் அதைப் பருகிக் காட்டுகிறாள். மற்றொரு நிகழ்வு ஒரு கருப்பின ஆண் அவளை மிகவும் விரும்பி நெருங்கித் தன் காதலைத் தெரிவிக்கிறான். இன்று இரவு என்னுடன் இருந்து காலையில் நீ மரணத்தைத் தழுவலாம். இல்லையேல் இப்போதே தப்பிச் செல்லலாம் என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறாள். அவன் அன்றிரவு அவளுடன் இருந்த் அடுத்த நாள் அவள் உத்தரவுப் படி கொல்லப்படுகிறான். பல ஆண்கள் கொல்லப்படுவதை அவள் கண்டு ரசிப்பது வழக்கம்.
கதை சொல்லி லண்டனில் கருப்பினக் காதலனுக்காக தன் அணிகலன்களை விற்கும் அளவு அவனை நேசிக்கும் விலை மாதான வெள்ளைக்காரி ஒருத்தியைக் கண்டு வியக்கிறான். அவள் அப்படி விற்பதற்கு முதல் நாள் பணம் கேட்டு அந்தக் காதலன் அடித்ததால் முகம் வீங்கிக் காயங்களுடன் இருக்கிறாள்.
செப்டம்பர் 2015 இனிய உதயம் இதழில் வெளியான இந்தக் கதை சரித்திரக் காலக் கதாபாத்திரத்தை மையப் படுத்துவதால் நம்மை ஒரு கனவு நிலையில் நிறுத்துகிறது. ஒரு பெண் அடிமைத்தனமாக இல்லாத ஒன்றாக இருப்பது இன்று கூட ஒரு ஆணுக்கு வியப்பே. வித்தியாசமான எந்தப் பெண்ணும் மிகவும் கவர்கிறாள். கவனத்தை ஈர்க்கிறாள். பெண்களின் உலகம் பற்றிய புதிய சாளரத்தைத் திறக்கிறாள். இந்தக் கதை அப்படி ஒரு புதுக் கண்ணோட்டத்தை பெண்மை நோக்கி நமக்குத் தருகிறது.
(image courtesy:wiki)